»   »  கலைஞருக்கு தாவும் குஷ்பு!

கலைஞருக்கு தாவும் குஷ்பு!

Subscribe to Oneindia Tamil

ஜெயா டிவி கலைஞராக அறியப்பட்ட குஷ்பு, திமுக சார்பில் உதயமாகவுள்ள கலைஞர் டிவியில் இடம் பெறவுள்ள மெகா தொடரில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

சன் டிவியில் முன்பு ஒளிபரப்பான குங்குமம் தொடர் மூலம் டிவி நடிகையாக அவதாரம் எடுத்தார் குஷ்பு. அந்த சீரியலுக்குப் பின்னர் அவர் ஜெயா டிவிக்குத் தாவினார்.

அங்கு கல்கி தொடரை தயாரித்து நடித்தும் வந்தார். அத்தோடு ஜெயா டிவியில் ஜாக்பாட் என்ற கேம் ஷோவையும் தொகுத்தளித்து வருகிறார். இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி உதயமாகவுள்ள கலைஞர் டிவியில், குஷ்பு ஹீரோயினாக நடிக்கும் மெகா தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

சுந்தர் கே.விஜயன் இந்தத் தொடரை இயக்குகிறார். ஏவி.எம். நிறுவனம் இந்தத் தொடரை தயாரிக்கிறது. வைராக்கியம் என்று இந்தத் தொடருக்குப் பெயர் வைத்துள்ளனர்.

குஷ்புவை கடந்த சட்டசபைத் தேர்தலின்போது மு.க.ஸ்டாலினுக்கு எதிரானவாராக களம் நிறுத்த அதிமுக தரப்பில் கடுமையாக முயற்சிக்கப்பட்டது. ஆனால் அந்த வலையில் சிக்காமல் எப்படியோ தப்பி விட்டார் குஷ்பு.

இந்த நிலையில், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள தொடரில் குஷ்பு நடிக்கவுள்ளதால், விரைவில் அவரது தயாரிப்புகளும் கலைஞர் டிவியில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

கலைஞர் டிவிக்காக பல பெரிய நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் தயாரித்து அளிக்கவுள்ளன. கே.பாலச்சந்தர், ஏவி.எம், சிவாஜி பிலிம்ஸ், ராடான் மற்றும் குஷ்பு என பெரும் தலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது.

இந்த வரிசையில் பாரதிராஜாவும் தற்போது இணைகிறார். தீவிர ஜெயலலிதா ஆதரவாளராக கருதப்படுபவர் பாரதிராஜா. ஆனால் சமீபகாலமாக, ஜெயலலிதா மீதான பாசத்தைக் குறைத்துக் கொண்டு விட்டார் பாரதிராஜா.

அதை நிரூபிக்கும் வகையில் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொடுக்கிறார் பாரதிராஜா. டிவிக்கு பாரதிராஜா வருவது இதுவே முதல் முறையாகும். கலைஞர் டிவிக்காக ஒரு டெலிபிலிம் தயாரிக்கவுள்ளார் பாரதிராஜா.

டெலிபிலிம் தவிர விசுவின் மக்கள் அரங்கம், சன் டிவியில் வரும் அரட்டை அரங்கம் பாணியில் கலைஞர் டிவிக்காக ஒரு சாட் ஷோவை அளிக்கவுள்ளார் பாரதிராஜா.

அதேபோல கே.பாலச்சந்தர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைஞர் டிவியில் தொடர் இயக்க வருகிறார். வாரம் ஒருமுறை இடம் பெறும் இந்தத் தொடருக்கு மகராசி என்று பெயரிடப்பட்டுள்ளது.

பாலச்சந்தரின் மின் பிம்பிங்கள் நிறுவனம் சுகன்யாவை நாயகியாகப் போட்டு மெகா தொடர் ஒன்றை ஒளிபரப்பவுள்ளது.

பெத்த ஏற்பாடுகளுடன் களம் குதிக்கும் கலைஞர், சன் டிவியை மொத்தமாக அமுக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil