»   »  மேடையில் திருமாவளவனுடன் குஷ்பு மோதல்

மேடையில் திருமாவளவனுடன் குஷ்பு மோதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kushboo

சென்னை: சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு குஷ்பு வணக்கம் செலுத்ததால் சர்ச்சை எழுந்தது. மேலும் கவிஞர் அறிவுமதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுடன் அவர் கடுமையாக வாதிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீப காலமாகவே குஷ்பு பல சர்ச்சைகளில் தொடர்ந்து அடிபட்டு வருகிறார். முதலில் இயக்குநர் தங்கர்பச்சானை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து சிக்கலில் மாட்டினார். இதையடுத்து பெரியார் படத்தில் குஷ்பு நடித்த காட்சிகளை படமாக்க மறுத்தார் தங்கர்.

பின்னர் கற்பு குறித்து குஷ்பு தெரிவித்த கருத்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பை கிளப்பியது. அவருக்கு கோவில் கட்டிக் கும்பிட்ட தமிழக மக்கள் அவரது உருவப் படத்தை செருப்பால் அடித்தும், விளக்குமாறுகள் காட்டியும் போராட்டங்கள் நடத்தினர்.

சமீபத்தில் கடவுள் சிலைகளுக்கு முன்பு கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தது சர்ச்சையானது. இதுதொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன.

இந் நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் குஷ்பு. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள டான் பாஸ்கோ அரங்கில் ஆயி என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொல். திருமாவளவன், குஷ்பு, எம்.பி. கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

குஷ்பு முதலில் நிகழ்ச்சிக்கு வந்து விட்டார். அதன் பின்னர் திருமாவளவன் வந்தார். அவர் வந்தபோது மேடையில் இருந்தவர்கள் மரியாதை நிமித்தம் எழுந்து வணக்கம் செலுத்தினர். திருமாவும் அவர்களுக்கு பதில் வணக்கம் கூறினார்.

ஆனால் குஷ்பு மட்டும் தனது இருக்கையிலிருந்து எழுந்திருக்கவும் இல்லை, திருமாவளவனுக்கு ஒரு மரியாதைக்குக் கூட வணக்கம் செலுத்தவில்லை. (இதே ஒரு சினிமா தயாரிப்பாளராக இருந்திருந்தால் குஷ்பு கும்பிடு போட்டிருப்பார்). இதனால் அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் பேச்சாளர்கள் பேச ஆரம்பித்தனர். குஷ்புவின் முறை வந்தபோது அவர் சற்று கடுமையாகவே பேசினார். குஷ்பு பேசுகையில், திருமாவளவன் வந்தபோது நான் கவனிக்கவில்லை. ஆனால் அதற்குள் சலசலப்பாகி விட்டது.

இப்போதுதான் நான் அவரைப் பார்க்கிறேன். அவருக்கு வணக்கம் செலுத்தாவிட்டால் அதற்கும் ஒரு வழக்குப் போட்டு விடுவார்கள்.

இதுவரை என் மீது 26 வழக்குகளைப் போட்டுள்ளார்கள். (பின்னர் கூட்டத்தினரைப் பார்த்து) நான் ஒரு வாரப் பத்திரிக்ைகயில் கூறிய கருத்துக்களை நீங்கள் முதலில் முழுமையாகப் படித்தீர்களா, அதை புரிந்து கொண்டீர்களா, அதுகுறித்து என்னுடன் வாதம் நடத்த நீங்கள் தயாரா என்று ஆவேசமாக கேட்டார் குஷ்பு.

குஷ்புவின் இந்தப் பேச்சுக்கு கூட்டத்தில் இருந்தவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் குஷ்புவை எதிர்த்து கோஷமிட்டனர். இதையடுத்து தனது பேச்சை பாதியில் முடித்துக் கொண்டு அமரும் நிலைக்கு குஷ்பு தள்ளப்பட்டார்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை கவனித்த திருமாவளவன் கூட்டத்தினரை அமைதிப்படுத்தினார்.

பின்னர் கவிஞர் அறிவுமதி மைக்கைப் பிடித்து, திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர். அவர் வந்தபோது வணக்கம் செலுத்தாமல், பேச எழும்போது வணக்கம் செலுத்தியது அநாகரீகமானது. இது கண்டனத்துக்குரியது என்றார்.

இதைக் கேட்டதும் கோபமடைந்த குஷ்பு வேகமாக எழுந்து வந்து மைக்கைப் பிடித்து, யாருக்கு, எப்போது, எங்கு, எப்படி வணக்கம் செலுத்த வேண்டும் என எனக்கு நன்றாகவே தெரியும் என்று ஆவேசமாக கூறினார்.

இதையடுத்து மீண்டும் பெரும் கூச்சல் எழுந்தது. போலீஸாரும் உள்ளே வரவழைக்கப்பட்டனர். குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூட்டத்தினர் கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தினரை மீண்டும் அமைதிப்படுத்திய திருமாவளவன் எழுந்து பேசினார். அவர் பேசுகையில், குஷ்பு இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும். அவருக்கு எதிராக நாங்கள் யாரும் போராட்டம் நடத்தவில்லை. அவர் கூறிய கருத்தை எதிர்த்துத்தான் போராட்டம் நடத்தினோம்.

அவர் கூறிய கருத்துக்கள் திரித்துக் கூறப்பட்டதா என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. தமிழ்ப் பெண்கள் மீது களங்கம் கற்பிப்பது போல இருந்ததால் அதை எதிர்த்துப் போராடினோம் என்றார்.

இதைக் கேட்டதும் குஷ்பு வேகமாக எழுந்து சென்றார். இதையடுத்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் மீண்டும் மேடைக்குத் திரும்பினார் குஷ்பு.

இந்த சம்பவத்தால் அரங்கில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil