»   »  'தமிழகத்து சார்லி சாப்ளின்' கிரேட் நாகேஷின் பிறந்த நாள் இன்று!

'தமிழகத்து சார்லி சாப்ளின்' கிரேட் நாகேஷின் பிறந்த நாள் இன்று!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகேஷ்.... தமிழகம் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களை கண்டிருந்தாலும் என்றும் மகா உச்சத்தில் தெரியும் கலைஞன். அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட நடிகர் அவர்.

நாடகங்களில்தான் நடித்துக் கொண்டிருந்தார், அப்பொழுது ஒரு நாடகத்திற்கு தலைமைதாங்க எம்ஜி ராமச்சந்திரனை அழைத்தார்கள், நாடகத்தில் நாகேஸ்வரன் எனும் பாத்திரத்தில் சில நொடிகள் வந்தார் அந்த குண்டுராவ், ஆனால் அந்த வயிற்றுவலி நோயாளி வேடத்தில் பின்னி எடுத்தார்.
அதனை ரசித்த எம்ஜிஆர், பின்பு மேடைக்கே அழைத்து ஒரு கோப்பை வழங்கினார், அங்கேயே கேட்டார் குண்டு ராவ், "அண்ணே எல்லார் முன்னாடியும் கோப்பை குடுக்குறீங்க, அப்புறமா புடுங்கிற மாட்டீங்களே, ஏன்னா நான் அவ்வளவா ஒண்ணும் நடிக்கல!"

Legend Nagesh Birthday

சிரித்து வாழ்த்தினார் எம்ஜிஆர். தமிழகத்திற்கு நாகேஷ் எனும் கலைஞனை அடையாளம் காட்டினார் எம்ஜிஆர்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படம் நாகேஷுக்கு பெரும் பெயரினை பெற்றுக் கொடுத்தது, அதிலிருந்து அவருக்கு ஏறுமுகமே. அந்த இயல்பான குணமே அவரை உச்சத்திற்கு அழைத்து சென்றது. அவரின் முதல் வாய்ப்பு பெற்றதே அப்படித்தான்.

வாய்ப்புக்காக படக் கம்பெனி அலுவலக வாசலில் காத்திருக்கிறார் நாகேஷ். அந்த கம்பெனி முதலாளி ஒல்லியான தேகம் கொண்டவர். காரில் இறந்து இறங்கி கூன் போட்ட முதுகுடன் கையில் சிகரெட் பெட்டியுடன் நடக்கிறார்.

Legend Nagesh Birthday

அவர் முதலாளி என்பதை அறியாத நாகேஷ் அவர் பக்கம் சென்றார். சிகரெட் பெட்டியினை பார்த்து சொன்னார்: "ரொம்ப வெயிட்டா இருக்கா, பரவாயில்ல நான் வேணா சுமந்துட்டு வரட்டுமா"

அந்த முதலாளிக்கு சிரிப்பு பொத்துகொண்டு வந்தது, முதுகில் தட்டி கொடுத்துச் சிரித்தார், நாகேஷூம் சிரித்தார். பின் அலுவலக அறையில் அவரை கண்டதும், காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார், அந்த முதலாளி சொன்னார், உனக்கு நல்ல திறமை இருக்கு, யாருக்கும் பயப்படாம மனதில் பட்டதை இப்படியே பேசு, முன்னேறி விடுவாய்"

அப்படித்தான் முன்னேறினார் நாகேஷ்.

கலைவாணருக்கு பின்னரான‌ பாலையா, சோ ராமசாமி, தங்கவேலு என அக்கால நகைச்சுவையாளர் வரிசையில் தனித்து நின்றவர் நாகேஷ்.
இதில் எம்.ஆர் ராதா என்பவர் ஆல்ரவுண்டர். நிச்சயம் வேறுவகை.

Legend Nagesh Birthday

இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் நாகேஷ், அவரின் அலட்டிகொள்ளாத முகபாவங்களுக்கும், நொடியில் சீறிவரும் காமெடி வரிகளுக்கும், உடல் மொழிகளுக்கும் அவருக்கு முன்னாலும் பின்னாலும் யாருமில்லை.

அவர் பல ஆண்டுகள் நகைசுவை நடிகராகவே அறியபட்டார், ஆனால் அவருக்குள் மிகபெரிய குணசித்திர நடிகன் இருந்தான் என்பது பாலசந்தரின் எதிர் நீச்சல், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் தெரிந்தது.

எந்த மகா நடிகனுக்கும் தன் நடிப்பு குறைந்தது அல்ல, என அந்த படங்களில் தன்னை நிரூபித்து நின்றார் நாகேஷ். அவரின் அற்புத நடிப்பினை பாலசந்தர்தான் வெளிகொண்ர்ந்தார்.

Legend Nagesh Birthday

பாலசந்தரை தவிர நாகேஷ முழுக்க பயன்படுத்திய இயக்குநர் யாருமில்லை.

எல்லாவற்றிற்கும் மேல் மிக சிறந்த நடன கலைஞனும் கூட, அவரின் பல நடனங்கள் அற்புதமானவை.

பல திறன் கொண்ட நடிகர் அவர். நடிப்பில் தன் முன்னால் நிற்கும் நடிகர்கள் யாராயினும் அசால்ட்டாக தூக்கி எறிவார். எம்ஜிஆரையே சில இடங்களில் அவர் தூக்கிச் சாப்பிட்டதை பார்த்திருக்கலாம். எம்.ஆர் ராதா, சிவாஜி கணேசன் வரிசையில் நாகேஷூக்கும் இடமுண்டு.

நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை ஒஹோ புரொடக்ஷன், பட்டணத்தில் பூதம், அன்பே வா, திருவிளையாடல் தருமி.. என நீண்ட வரிசையில் அவரின் அற்புதமான நடிப்புகள் உண்டு.

கிட்டதட்ட 4 தலைமுறை நடிகர்களோடு நெடிய பயணம் செய்தவர் அவர்.

ஒரு விஷயம் மகா உண்மை

சந்திரபாபு நடனம், நடிப்பு, நகைச்சுவை என பின்னி எடுப்பவர், அவராலும் கூட நாகேஷை நெருங்க முடியவில்லை
சோ ராமசாமி பெரும் அறிவாளி. அவரின் ஒரு வார்த்தையே நீண்ட நேரம் சிரிக்க வைக்கும், அவராலும் நாகேஷை அசைக்க முடியவில்லை
வடிவேலுவிற்கு சீனியரான தங்கவேலு நாகேஷ் பக்கமே வரமுடியவில்லை.

காரணம் நாகேஷின் பிறவி திறமை. அவருக்கும் முன்பும் பின்பும் வந்த எந்த நகைச்சுவை நடிகரும் அவர் இடத்தை நெருங்கவே முடியாமல் இருப்பது அதனால்தான்.

அவரின் ஏகபட்ட வசனங்களை இன்று நினைத்தாலும் சிரித்துகொண்டே இருக்கலாம்.

சோகங்களும் அவருக்கு ஏராளம் இருந்தது, ஆனால் ஒன்றையும் வெளிகாட்டவில்லை. உதாரணம் தன் முகத்தில் கொட்டிகிடக்கும் அம்மை தழும்புகள் பற்றி அவர் இப்படி சொன்னார்.

"அம்மி நல்லா அரைக்கணும்ணா கொத்துவாங்க, ஆண்டவன் நல்லா நடிடாண்ணு என் முகத்துல நல்லா கொத்திட்டான்"
தன் குறைகளை கூட அப்படி நகைச்சுவையாக சொன்ன நடிகன் அவன், பிறவி கலைஞன்.

மிகச்சிறந்த நடிகனான அவருக்கு, தமிழகம் அவருக்குரிய இடத்தினைக் கொடுக்கவில்லை. அவரே இதனை தனக்குரிய பாணியில் சொன்னார். "வீடு கட்ட சாரமாகும் சவுக்கு மரம், வீடு கட்டபட்ட பின் மூலையில் கிடக்கும் அல்லது அடுத்த வீடு கட்ட சென்றுவிடும். ஒரு வேலையும் செய்யாத வாழை மரத்தினைத்தான் அந்த கிரக பிரவேசத்திற்கு கட்டுவார்கள், நான் சவுக்கு மர சாதி."
எப்படிபட்ட வார்த்தைகள்!

அபூர்வ சகோதரர்களில் அவர்தான் வில்லன், அந்த குட்டை கமலை தூக்கிவரச் சொல்வார்கள், அவரைக் கண்டவுடன் கேட்பார்:
"பாதிதான் வந்திருக்கு மீதி எங்கே?"

வசனகர்த்தா எழுதாத வசனமது, அவரே அந்த நொடியில் சொல்லிகொண்டது. அந்த வசனத்திற்கு சிரிக்காதவர்களே இல்லை.

சோகமாக நாகேஷைப் பார்த்தும் அதே கேள்வியினைத்தான் கேட்க முடியும். நாம் பார்த்தது பாதி நாகேஷ்தான், மீதி பாதி பல விஷயங்களால் வெளிதெரியாமலே போய்விட்டது.

நாகேஷின் இடத்தினை இன்னொரு நாகேஷால் மட்டுமே நிரப்ப முடியும்.

"நான் மழையில்தான் அழுவேன் அப்பொழுதுதான் என் கண்ணீர் யாருக்கும் தெரியாது," என சொல்லி சோகங்களை தன்னோடு புதைத்துகொண்டு எல்லோரையும் சிரிக்க வைத்த அந்த சார்லி சாப்ளினின் தமிழக சாயல் நாகேஷ்.

அந்த தமிழகத்து சார்லி சாப்ளினுக்கு இன்று பிறந்தநாள். Long Long ago, So Long ago முன்னால் அவர் பிறந்தது இதே நாள்.
கண்ணீர் அஞ்சலி செலுத்துவதை அந்த கலைஞனின் ஆன்மா மன்னிக்காது.

அவருக்கு கண்ணீரை மறைத்துகொண்டு புன்னகையுடன் அஞ்சலி செலுத்தலாம், அதைத்தான் அவரும் விரும்புவார்.

- ஸ்டான்லி ராஜன்

English summary
Today is late legendary actor Nagesh's birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil