»   »  லேகாவை இழுத்த சிம்பு!

லேகாவை இழுத்த சிம்பு!

Subscribe to Oneindia Tamil

காளை படத்திற்கான கலைஞர்களை இழுத்துப் போடும் வேலையில் படு பிசியாக இருக்கும் சிம்பு, கெட்டவன் படத்திற்கான கலைஞர்களையும் சைட் பை சைடாக படு ஜூட்டாக சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

வல்லவன் படத்திற்குப் பின்னர் நல்ல இடைவெளி விட்ட சிம்பு இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கான வேலையில் படு மும்முரமாக இறங்கியுள்ளார்.

காளை அதில் ஒரு படம், கெட்டவன் இரண்டாவது படம். காளை படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக வேதிகா நடிக்கவுள்ளார். நிலா ஒரு குத்துப் பாட்டுக்கு கும்மாட்டம் போடுகிறார்.

காளை படத்திற்கான வேலைகள் பாதி அளவு முடிந்து விட்டதாம். இனிமேல் ஷூட்டிங்கை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கியாம். அடுத்து கெட்டவன் படத்திற்கான ஆட்களையும் வளைத்துப் பிடிக்க ஆரம்பித்துள்ளார் சிம்பு.

கெட்டவன் படக் கதை படு களேபரமாக இருக்குமாம். அதாவது தனது கதையையே இப்படத்தில் சொல்லவுள்ளாராம் சிம்பு. அதாவது நிஜ வாழ்வில் தனக்கும், நயனதாராவுக்கும் இடையே நடந்த காதலைத்தான் படத்தின் முக்கியக் கருவாக்கியுள்ளாராம்.

வல்லவனிலும் இப்படித்தான் தனது முதல் காதலை கதையாக்கி கலக்கியிருந்தார். இப்போது தனது 2வது காதலை படமாக்கவுள்ளார் கெட்டவனில்.

சிம்புவுடன் இப்படத்தில் ஒரு புதுமுகம் திறமை காட்டவுள்ளார். அவர் ஒரு வீடியோ ஜாக்கி. எஸ்.எஸ்.மியூசிக் சானலில் அசத்தி வரும் லேகாதான் அவர்.

சமீபத்தில், சத்யம் தியேட்டர் வளாகத்தில் ஸ்பைடர்மேன் படம் பார்க்கப் போனபோது, லேகாவை எதேச்சையாக சந்தித்துள்ளார் சிம்பு. பார்த்தவுடன் மனதுக்குள் பக்கென உட்கார்ந்து விட்டாராம் லேகா.

கொஞ்சமும் யோசிக்காமல் நடிக்க ரெடியா என்று லேகாவிடம் கேட்டுள்ளார். அவருக்கோ இன்ப ஆச்சரியமாக போய் விட்டதாம். உடனே சரி என்று கூறி விட்டாராம்.

பரதன் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. நந்து படத்தை இயக்கவுள்ளார்.

சிம்புவுடன் இணைந்து நடிப்பது குறித்து லேகாவிடம் கேட்டால் படு சந்தோஷமாக பேசுகிறார். இது பெரிய வாய்ப்பு. இதை நான் எதிர்பார்க்கவில்லை. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பலரும் கனவு காண்கிறார்கள். ஆனால் எனக்கோ தேடி வந்துள்ளது.

சிம்பு ஒரு பக்கா புரபஷனல் மனிதர். அவரது திறமைகள் பிரமிக்கத்தக்கது. அவருடன் நடித்த அத்தனை நடிகைகளும் சிம்புவின் திறமைகளைப் புகழ்ந்து கூறத் தயங்கியதில்லை.

அவர் அற்புதமான மனிதர். படத்தின் டைட்டில் கெட்டவன் என்று இருக்கலாம். ஆனால் சிம்பு அப்படி இல்லை என்று நான் நம்புகிறேன். படத்தில் தமிழ் பிராணப் பெண்ணாக நான் நடிக்கவுள்ளேன். எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு என்கிறார் ஜாலியாக.

நடிக்க நல்ல வாய்ப்பு என்று லேகா சொன்னாலும் கூட மடிசாரில் கண்டிப்பாக ஒரு குத்துப் பாட்டையாவது சிம்பு சேர்க்காமல் விட மாட்டார் என்று கோலிவுட்டில் அடித்துக் கூறுகிறார்கள்.

லேகாவுக்கு சொந்த ஊர் மகாராஷ்டிராவாம். அகமதபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்புக் கழகத்தில் இப்போதுதான் மாஸ்டர் டிகிரியை முடித்தாராம். சிற்பம் வடிப்பதில் அம்மணி ஸ்பெஷலிஸ்ட்டாம்.

நிறைய நாடகங்களில் நடித்துள்ளாராம். ஊர் சுற்றுவது என்றால் ரொம்பப் பிடிக்குமாம். பேச ஆரம்பித்தால் தொண தொணவென்று பேசிக் கொண்டிருப்பாராம்.

ஹாட் க்யூட் கேர்ள் என எஸ்.எஸ்.மியூசிக் வட்டாரம் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் லேகாவை, ரசிகர்களுக்காக சிம்பு இரு கரம் தாங்கி தூக்கி வருகிறார்.

வருக, தருக!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil