»   »  பைலட்டை மணந்த பாடலாசிரியர்!

பைலட்டை மணந்த பாடலாசிரியர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல பாடலாசிரியர் விவேகா, விமான பைலட்டை காதலித்து ரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரபல பாடலாசிரியர் விவேகா. தற்போதுள்ள இளம் பாடலாசிரியர்களில் இவருக்கும் தனி இடம் உண்டு. நீ வருவாய் என படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் விவேகா.


300க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் இவரது பாடலில் வெளியான படம் பள்ளிக்கூடம். இந்த நிலையில் விமான பைலட்டாக பணியாற்றி வரும் சாவித்ரிஸ்ரீ என்ற பெண்ணை ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டுள்ளார் விவேகா.

இந்தத் திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்காததால், படு ரகசியமாக கல்யாணத்தை முடித்துக் கொண்டுள்ளாராம் விவேகா. சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த விவேகாவின் விசிறியான ஸ்ருதி என்பவர் விவேகாவை சந்தித்தார். அப்போது சாவித்ரிஸ்ரீயும் அவருடன் இருந்தார்.

அதுதான் இருவரும் சந்தித்துக் கொண்ட முதல் மீட்டிங். தனியார் விமான நிறுவனத்தில் பைலட்டாக இருக்கிறார் சவீதா. முதல் பார்வையிலேயே தங்களது காதலைப் பரிமாறிக் கொண்டுள்ளனர் இருவரும். விழியில் விழுந்து, பிறகு இதயம் நுழைந்து உயிரில் கலந்துவிட்டனர்.

மேலும் சில சந்திப்புகளில் இருவருக்கும் இடையே மன நெருக்கம் அதிகரித்துள்ளது. இரு மணம் கலந்ததால் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஆனால் இருவரது பெற்றோரும், குடும்பத்தாரும் வில்லன் வேடம் பூண்டனர். கடுமையாக கல்யாணத்தை எதிர்த்தனர்.

இரு வீட்டாரும் வீடு தேடிப் போய் சண்டையும் போட்டுள்ளனர். தெருவில் நின்று சண்டை போடும் அளவுக்குப் பிரச்சினை முற்றியுள்ளது. போலீஸார் வந்து தலையிடும் அளவுக்கு நிலைமை கை மீறிப் போயுள்ளது.

வெவ்வேறு மதம் என்பதே அவர்களின் எதிர்ப்புக்கு மூலக் காரணமாக இருந்தது. ஆனால் காதல் உலகில் இதற்குத்தான் இடமில்லையே. எனவே எதிர்ப்புகளை தாண்டி வாழ்க்கையில் இணைய தீர்மானித்தனர்.

இந்த நிலையில் நேற்று விவேகாவும், சவீதாவும் ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டு விட்னர். தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலுக்குச் சென்ற இருவரும் அங்கு வைத்து மாலை மாற்றி, தாலி கட்டிக் கல்யாணம் செய்து கொண்டனர். இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் உடன் இருந்தனர்.

கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பக்காவாக கல்யாணம் செய்து கொண்டார் விவேகா. இருப்பினும் இதுவரை கல்யாணத்தை அவர்கள் பதிவு செய்யவில்லை.

தனது கல்யாணம் குறித்து விவேகா கூறுகையில், இது காதல் கல்யாணம், மதங்களைக் கடந்த கல்யாணம். முடிந்தவரை எனது பெற்றோரை சமாதானப்படுத்த பார்த்தேன். முடியவில்லை. தங்களது ஈகோவை விட்டு விட அவர்கள் தயாராக இல்லை. எனவேதான் சவீதாவை நான் கரம் பிடிக்க இப்படி ஒரு முடிவை எடுக்க நேரிட்டது.

சவீதா இனிமேல் வேலை பார்க்க மாட்டார். இருவரும் லண்டன் சென்று தேனிலவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

வேகத்தோடு, விவேகமாகவும் செயல்பட்டு, காதலை வெற்றி பெறச் செய்த விவேகா- சவீதா ஜோடியை நாமும் வாழ்த்துவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil