For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இளையராஜா... இந்த நூற்றாண்டின் மொசார்ட்!

  By Shankar
  |

  1970கள் வரை தமிழக இசை குறிப்பாக திரை இசை கர்நாடக சங்கீதத்திலேதான் சிக்கி இருந்தது. அதாவது கர்நாடக இசை வடிவிலேதான் பாடல்களும், பிண்ணனி இசை பெரும்பாலும் அமைந்திருக்கும். தவறென்று சொல்லுவதற்கில்லை. காரணம் இசை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது அக்காலம் வகுத்திருந்த விதி.

  1975களில் இந்தி திணிப்பு தமிழகத்தில் தடுக்கபட்டிருந்தாலும், இந்திப் பாடல்கள் தாக்கத்தை தடுக்க முடியவில்லை. பெரியாரும் இல்லை, அண்ணாவுமில்லை. இந்தியை எதிர்த்தார்களே தவிர, இந்தி இசை மகத்தான வரவேற்பினை பெற்ற காலம்.
  அப்பொழுதுதான் மக்களின் இசையாக, தமிழரின் ஆதி இசையின் பிரதிபலிப்பாக, உண்மையான கிராமத்து பண்ணாக அறிமுகமானார் அந்த இளைஞன். படம் 'அன்னக்கிளி'. மொத்த தமிழகமே திரும்பிப் பார்த்தது.

  Maestro Ilaiyaraaja, Mozart of this century!

  அதன்பின் தொடர்ச்சியாக அற்புதமான இசையை அவர் கொடுத்தார், கண்ணதாசனின் இறுதி 5 ஆண்டு காலங்களில் அவரின் ஈடு இணையில்லா கவிதைகளை அற்புதமாக பாடலாக்கிய வரலாறு இளையராஜா. கண்ணதாசன் காலம் சென்ற பின்னர் அக்கால வைரமுத்துவும் அவரும் கொடுத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

  எப்படி இளையராஜாவால் சாதிக்கமுடிந்தது?

  இன்று நாமெல்லாம் மாறிவிட்டாலும், வாழ்க்கை முறை மாறிவிட்டாலும் நமது முன்னோர்கள் வயலிலும், கழனிகளிலும் ஓடியாடி பாடிக்கொண்டே உழைத்தவர்கள், பாடிகொண்டே ஓய்வெடுத்தவர்கள், பாடிகொண்டே நம்மை தூங்க வைத்தவர்கள், துக்க வீட்டையும் உச்சஸ்தாயியில் ஒப்பாரியாய் பாடியவர்கள்.

  அந்தப் பழமையை மீட்டு இசையில் தந்தவர் இளையராஜா. அதனால்தான் தொடக்ககால விமர்சனங்களை, இவர் இசைப்பது இசையல்ல என்ற வாதங்களை எல்லாம் தூளாக்கிவிட்டு மக்களை அவரை கொண்டாடச் செய்தது.

  மிகச் சிறுவயதிலிருந்தே அண்ணன் பாவலர் வரதராஜனின் கரம் பிடித்து பொதுவுடமை கொள்கை பிரச்சார பாடல்களைப் பாடியவர், மக்களுக்கான கருத்தினை மக்கள் இசையில் சொன்னவர், மண்ணை, மக்களின் உணர்ச்சிகளை கிராம இசைமூலம் வெளிபடுத்தும் வித்தை அங்கேதான் அவருக்கு வசபட்டது.

  அவரே சொன்னதுபோல நேரு மறைந்தபொழுது கண்ணதாசன் எழுதிய அஞ்சலி கவிதையை ஒரு மேடையில் மக்களுக்கு பாடலாய் பாடியதுதான் அவரின் முதல் இசையமைப்பு பாடல்.

  பின்னாளின் சினிமாவிற்காக மேற்கத்திய இசை கருவிகளையும், கர்நாடக இசையையும் செம்மையாகக் கற்றுக் கொண்டார்.

  மனித வாழ்வின் அனைத்தையும் இசையாக்கியவர்...

  மானிட உணர்ச்சிகளை இசைமூலம் வெளி கொண்டுவரும் வரம் அவருக்கு சாதாரணம், மேற்கத்திய பியாணோ முதல் மண்பாண்ட கடம் வரை அவர் விரும்பிய இசையை அவருக்காய் இசைக்கும். அது ராஜாவை தவிர யாருக்கும் சாத்தியமில்லை.
  மானிட வாழ்வின் எல்லா சூழ்நிலைக்கும் அவரின் இசை பொருந்தும். தாலாட்டு, மகிழ்ச்சி, சூழ்ச்சி, பாசம்,நேசம், காதல், திருமணம், முதுமை, தோல்வி, வெறுமை, தனிமை, துரோகம், வஞ்சகம் என எல்லா பக்கங்களுக்கும் இசையால் உற்சாகமும், மருந்தும்,ஆறுதலும் தருபவர்தான் அவரது இசை.

  மானிட வாழ்வின் அனைத்து பக்கங்களையும் இசைத்தவர், அவ்வளவு ஏன்? மனைவியோடு சண்டையிட்டுவிட்டு அவரது சிலபாடல்களை கேளுங்கள் மனம் தானாக ஆறுதல் அடையும்.

  அடுத்தவர் வலியை தன்வலியாய் உணரும் கலைஞன்தான் காலம்தாண்டி நிற்க முடியும். பாரதியும், கண்ணதாசனும் அப்படித்தான் நின்றார்கள்.
  இளையராஜாவும் அப்படித்தான். இசையில் 1000 படங்களைத் தாண்டியும் அவரால் செல்ல முடிகின்றது. பல படங்களின் பிண்ணனி இசையாலே பார்வையாளரை கட்டிபோடச் செய்கிறது.

  இளையராஜாவால் வென்றவர்கள்

  மிகத் திறமையான கவிஞரும், இயக்குநரும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ராஜா மிக உயர்ந்து நின்றார். பாலசந்தரும், பாரதிராஜாவும், மணிரத்னமும், சுந்தர்ராஜனும், பாக்யராஜும், மகேந்திரனும், பாலுமகேந்திராவும் அவரை அப்படித்தான் பயன்படுத்திகொண்டார்கள், காலத்தை வென்ற படங்களை அவர்களால் அப்படித்தான் கொடுக்க முடிந்தது.

  ரஜினியை, கமல்ஹாசனை, மோகனை, சரத்பாபுவை, ராமராஜனை 1980களின் மிகச் சிறந்த நடிகைகளை நினைக்கும்போதெல்லாம் ராஜாவின் இசை முந்திகொண்டு முன்னால் நிற்கும் அல்லவா? அங்குதான் நிற்கின்றது ராஜாவின் வெற்றி.

  நாமறிந்த இசை

  நமக்கு இசைக்கத் தெரியாது, ராகங்கள் பெயர், அளவு என்பதெல்லாம் புரியாது, கொழுக்கட்டை தெரியுமே அன்றி ஏழுகட்டை புரியாது. தாளம், பல்லவி, சரணம், உச்சஸ்தானி, ராஜஸ்தானி என எதுவும் புரியாது.

  ஆனால் அந்த சங்கதிகளை அவரது இசையோடு கேட்டால் உள்ளம் உருகும், தாலாட்டு புரியும், காதல் புரியும், தனிமை புரியும், இயற்கை புரியும், கடவுள் புரியும், பாசம் புரியும் இன்னும் என்னவெல்லாமோ புரியும், மனம் அந்த இசையோடு ஒன்றி இனம் புரியா தன்மைக்கு கொண்டு செல்லும், அந்த இசை ஆன்மாவை தொடும், அதில் மனம் லயிக்கும், ஆன்மா அதில் கட்டுபடும். அதிலோர் ஏகாந்தம் கிடைக்கும்.

  உற்சாகம், சுறுசுறுப்பு, ஓய்வு, ஆறுதல், தைரியம், பக்தி என எல்லாவற்றையும் இசை மூலம் கொடுக்கத் தெரிந்த ஒரு வரத்தினை ஆண்டவன் அவருக்கு கொடுத்திருக்கின்றான்.

  அவர் 5000 பாடல்களுக்கு மேல் அவர் இசை அமைத்திருக்கலாம்,1000 படங்களுக்கு மேல் பின்னனி இசையில் பின்னியிருக்கின்றார். கண்ணதாசனோடு பல படங்கள், மூன்றாம்பிறை, பல பாலசந்தர் படங்கள், பதினாறு வயதினிலே போன்ற படங்களில் காவியம் படைத்திருக்கின்றார், அந்த மகாகவியின் இறுதிபாடலான கண்ணே கலைமானே போன்ற பாடல்ககளை இசைத்த பெருமை அவரையே சாரும்.

  மொழி கடந்தவர்

  பழைய வைரமுத்துவின் தொடக்ககால பாடல்கள் எத்தனைமுறை கேட்டாலும் சிலிர்பூட்டக் கூடியவை.

  ஒருமுறை மலேய டிரைவருடன் மாலைபொழுதில் டாக்சியில் சென்று கொண்டிருந்தேன், தமிழ் வானொலி கேட்டுகொண்டிருந்தார், ஆச்சரியமாக கேட்டேன் தமிழ் தெரியுமா என்று?

  அவருக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் (என்னைபோலவே) சொன்னார், "மாலை 5 மணிமுதல் 7 மணிவரை இந்த வானொலியில் போடும் பாடல்கள் என்னை உற்சாகம் கொள்ளச் செய்யும். மறக்காமல் கேட்பேன். மொழியை விடுங்கள், அந்த இசை அவ்வளவு உற்சாகமானது. அதுமட்டுமல்ல‌ இம்மாதிரி பாடல்களின் சி.டி என்னிடம் ஏராளம் உண்டு," என எடுத்துக் காட்டினார்.

  அதில் இளையராஜா கைவீசிகொண்டிருந்தார், ரேடியோவில் "இது ஒரு பொன்மாலை பொழுது" பாடல் ஒலியேறிகொண்டிருந்தது. இசைக்கு மொழியில்லை என்பது விளங்கிகொண்டிருந்தது.

  இதுதான் இளையராஜாவின் வெற்றி, அவர் சிம்பொனிவரை சாதித்த வெற்றி.

  இந்த நூற்றாண்டின் மொசார்ட்

  250 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் ஒரு யூதன் இருந்தான், அவன் வாழ்ந்தது 36 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் இசையில் புதுபரிமாணமே கொடுத்தான், இன்றுள்ள மேற்கத்திய இசைக்கு அவன் பிதமாகன். அவர்தான் மொசார்ட்.

  அவன் காலத்து இசைப்பாளர்கள் சொன்னார்கள், "இவனைபோல ஒரு இசைக் கலைஞன் இனி பலநூறு ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை," இன்றும் அந்த இடம் வெற்றிடம்தான்.

  சந்தேகமே இன்றி சொல்லலாம், இந்த நூற்றாண்டின் மொசார்ட் ஒருவர்தான்... அவர்தான் இளையராஜா.

  இன்னும் இன்னும் இசை தருவார்...

  இனி கண்ணதாசன் இல்லை, வைரமுத்துவோ இளையராஜாவோடு இணையும் நிலையில் இல்லை. நல்ல கிராமத்து கவிஞன் இளையராஜாவோடு கைகோர்த்தால்..
  கண்ணதாசனின் 'கலைமான்' துள்ளிவரும், வைரமுத்துவின் 'பூங்காற்று திரும்பும்'!

  ஓலைக் குடிசையில் இருந்து கொட்டும் மழையினை ரசிக்கும் அந்த சுகாந்தம் திரும்பும், மலை உச்சி பனிகாற்று உடலை தழுவ, தேநீர் குடிக்கும் அந்த ஏகாந்தம் கிடைக்கும்.

  நிச்சயமாக இளையராஜா மணிமேகலையின் அட்சய பாத்திரம், அள்ள அள்ள இசை வந்துகொண்டே இருக்கும். இன்னும் அவர் கொடுக்கலாம், கொடுக்கமுடியும். செவி திறந்து காத்திருக்கின்றது தமிழகம்

  இசைராஜனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

  - ஸ்டான்லி ராஜன்

  English summary
  The writer of this article says that Maestro Ilaiyaraaja is the Mozart of this century.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X