»   »  மலையாள சிக்கல்

மலையாள சிக்கல்

Subscribe to Oneindia Tamil

ஜூலை 31ம் தேதி முதல் அனைத்துப் படப்பிடிப்புகளையும் நிறுத்தி வைத்து போராட்டத்தில் குதிக்க மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

மலையாளத் திரையுலகின் தொழில்நுட்பக் கழக சங்கமான மாக்டாவுக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே பூசல் வெடித்துள்ளது. தயாரிப்பாளர் கவுன்சிலிடம் மாக்டா சில கோரிக்கைகளை வைத்தது.

அதாவது, டிரைவர்கள், ஸ்பாட் பாய் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பது மாக்டாவின் கோரிக்கைகளில் ஒன்று. ஆனால் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என தயாரிப்பாளர் கவுன்சில் கூறி விட்டது.

மாக்டாவின் கோரிக்கைகள் நியாயமற்றவை என்பது தயாரிப்பாளர் கவுன்சிலின் கருத்து. மாக்டாவின் புதிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்க தயாரிப்பாளர் கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டது.

அதில், மாக்டாவின் நியாயமற்ற கோரிக்கைகளைக் கண்டித்து ஜூலை 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் பேராட்டம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலைச் சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவரான ஜான் மிலன் ஜாலிஸ் இதுகுறித்துக் கூறுகையில், யாருக்கு எவ்வளவு சம்பளம் தர வேண்டும், எந்தப் படத்துக்கு எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதெல்லாம் தயாரிப்பாளர்களின் உரிமை.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி, திலீப் உள்ளிட்டோர் தங்களது படப்பிடிப்புகளை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என மாக்டா கூறுவதை ஏற்க இயலாது.

மம்முட்டி, மோகன்லால், திலீப் உள்ளிட்டோர் மலையாளத் திரையுலகின் தூண்கள் போன்றவர்கள். மாக்டாவின் கோரிக்கைகள் நியாயமற்றவை, ஏற்க முடியாதவை, சுயநலப் போக்கைக் கொண்டவை.

அவர்கள் கோரிக்கையை ஏற்று சம்பளத்தை உயர்த்தினால் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், ஒவ்வொரு படத்திற்கும் கூடுதலாக ரூ. 20 லட்சம் செலவாகும். சிறு படத் தயாரிப்பாளர்களால் இதை எப்படி சமாளிக்க முடியும்.

மிரட்டல் போக்கைக் கையாளுகிறது மாக்டா. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சவாலை தயாரிப்பாளர் சங்கம் சந்திக்கும், சமாளிக்கும் என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மலையாளத் திரையுலகம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை இது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil