For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தமிழுக்கு வந்த மலையாள இயக்குநர்கள்

  By Shankar
  |
  தமிழுக்கு வந்த மலையாள இயக்குனர்கள்- வீடியோ

  -கவிஞர் மகுடேசுவரன்

  எண்பதுகளின் தமிழ்த் திரைப்படங்கள் நம் நினைவை விட்டு நீங்காத படைப்புகளாக இருக்கின்றன. பற்பல உள்ளடக்கங்களில் அப்படங்கள் வரலாறாகி நிற்கின்றன. அவற்றின் அருமைகளை இப்போது நாம் நன்கு உணர்கின்றோம். தமிழைப் போலவே மலையாளத்திலும் எண்பதுகளின் திரைப்படங்கள் தனிச்சிறப்புகளோடு இருந்தன. காலத்தால் அழியாத திரைப்படங்கள் அங்கே தோன்றின. தமிழோடு ஒப்பிடுகையில் பாதிக்கும் குறைவான சந்தை மதிப்புடையது மலையாளத் திரையுலகம். அதனால் அங்கே கதைவளத்தையே முதன்மையாகக் கொண்டனர். இலக்கியத் தரமான கதைகளையே மலையாளத்தில் படமாக்கினர். தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்படங்கள் பெரும்பொருட்செலவில் உருவாக்கப்பட்டாலும் அவற்றோடு பலர்க்கு ஒவ்வாமையுண்டு. எளிமையான மலையாளத் திரைப்படங்களுக்கு இன்றுவரை உலகம் முழுக்கவே பார்வையாளர்கள் இருக்கின்றார்கள்.

  Malayalam film makers natable works in Tamil

  எண்பதுகளின் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களைப் போன்றே மலையாளத்திலும் புதிய தலைமுறை இயக்குநர்கள் தடம்பதித்தார்கள். இயக்குநர்கள் காட்சிக் கலையின் தலைமக்கள் என்பதால் அவர்களுக்கு மொழி தடையாக இருப்பதில்லை. எல்லா மொழியின் இயக்குநர்களும் தத்தம் தாய்மொழிக்கு வெளியே படங்களை இயக்கச் சென்றிருக்கிறார்கள். பாலசந்தரும் பாரதிராஜாவும் பாக்கியராஜும் மணிரத்னமும் இந்தியில் கொடிநாட்டியவர்கள். அதைப்போலவே மலையாள இயக்குநர்களும் தமிழ்ப்படங்கள் எடுத்திருக்கிறார்கள். ஐவி சசி, பாசில், பரதன், ஜோஷி, ஹனீபா, பாலச்சந்திரமேனன், ப்ரியதர்ஷன், மது, லோகிததாஸ் என்று அந்தப் பட்டியலும் பெரிதே. மலையாளத்தில் முத்திரை பதித்த அவ்வியக்குநர்கள் தமிழிலும் தங்கள் திறமைகளைக் காட்டினார்கள். அவர்கள் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் நம்மைத் தொடர்ந்து மகிழ்வித்தன. இருமொழியினர்க்கும் பண்பாட்டு அடிப்படைகள் பலவும் ஒன்றேபோல் இருந்தமையால் மலையாள இயக்குநர்களின் தமிழ்ப்படங்கள் நமக்கு எவ்வித ஒவ்வாமையையும் ஏற்படுத்தவில்லை. வருசம் பதினாறு திரைப்படத்தில் காட்டப்பட்டதுபோல் நமக்கு வீடு அமைந்ததில்லை. ஆனால், அந்தக் கூட்டுக்குடும்பக் கதை தமிழ்க் குடும்பத்திற்கு எவ்விதத்திலும் புறம்பானதன்று.

  Malayalam film makers natable works in Tamil

  நம்முடைய இயக்குநர்களில் நூறு படங்களை இயக்கியவர்கள் என்று கருதினால் இராம நாராயணனும் பாலசந்தரும் நினைவுக்கு வருகிறார்கள். நூற்றைம்பது என்ற எண்ணிக்கையைத் தொட்ட இயக்குநர்கள் நம்மிடையே இல்லை எனலாம். ஆனால், மலையாள இயக்குநரான ஐவி சசி நூற்றைம்பது படங்களை இயக்கியிருக்கிறார். ஓர் இயக்குநர் முதற் பட வாய்ப்பைப் பெறுவதற்கே நீண்ட நெடுங்காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவர் இரண்டாவது பட வாய்ப்பைப் பெறுவதற்குப் படும்பாடு, "முதற்பட வாய்ப்பைப் பெற்றது மிக எளிதாக இருந்தது," என்று கூறும்படி அமைகிறது. அப்படியே பல படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றாலும் பத்தாவது படத்திற்குள் ஓர் இயக்குநர் சரக்கில்லாதவராகித் தளர்ந்துவிடுகிறார். இருபதாவது படத்தை எட்டும் வாய்ப்பு இன்றைய தலைமுறை இயக்குநர்களுக்கு அறவே இல்லையென்று துணிந்து கூறலாம். நிலைமை இவ்வாறிருக்கையில் ஐவி சசி நூற்றைம்பது படங்களை இயக்கியது அருஞ்சாதனைதான்.

  அலாவுதீனும் அற்புதவிளக்கும், குரு, காளி, பகலில் ஒரு இரவு, இல்லம், கோலங்கள் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்கள் ஐவி சசி இயக்கியவை. குரு, காளி ஆகிய இரண்டும் நாயகர்களின் பெயர்சொல்லும் படங்களாக விளங்குகின்றன. 'பகலில் ஒரு இரவு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பொன்னாரம் பூவாரம்...', 'இளமையெனும் பூங்காற்று' ஆகிய பாடல்கள் இன்றைக்கும் கேட்கப்படுகின்றன. பரதனைத் தமிழில் பார்க்க நேர்ந்தது நம் நற்பேறு. ஆவாரம் பூவும் தேவர்மகனும் அவருடைய முத்திரை தாங்கிய படங்கள். பாலச்சந்திரமேனனை அன்றைய பத்திரிகைகள் மலையாளத்தின் பாக்கியராஜ் என்று புகழ்ந்தன. எந்த அடிப்படையில் அவ்வாறு சொன்னார்கள் என்பது தெரியவில்லை. மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார் அவர். 'தாய்க்கு ஒரு தாலாட்டு' சிவாஜியை நன்கு பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

  Malayalam film makers natable works in Tamil

  ஹனீபாவை இன்றைய தலைமுறையினர் ஒரு நடிகராகத்தான் அறிவார்கள். எந்திரனில் சிட்டியிடம் "வெட்டுய்யா..." என்று கையூட்டு கேட்டு கையில் வெட்டுப்படும் போக்குவரத்துக் காவலர். மகாநதியில் நைச்சியமாகப் பேசி குடும்பத்தைச் சீரழிப்பவர். ஹனீபாவும் தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றை இயக்கியிருக்கிறார். பாசப் பறவைகள், பாடாத தேனீக்கள், பாசமழை, பிள்ளைப் பாசம், வாசலிலே ஒரு வெண்ணிலா ஆகிய படங்கள் ஹனீபா இயக்கியவை. தமிழில் எடுக்கப்பட்ட புனைமருட்சித் திரைப்படங்களில் ஹனீபாவின் 'பகலில் பௌர்ணமி'க்குத் தனித்த இடமுண்டு. ஜோஷி இயக்கி சத்தியராஜ் நடித்த 'ஏர்போர்ட்' விறுவிறுப்பான திரைப்படம். மது இயக்கிய 'மௌனம் சம்மதம்' திரைப்படத்தை இன்றுவரை மறப்பதற்கில்லை. ஒரு வழக்கறிஞரே கொலையைத் துப்பறிந்து நீதிமன்றத்தில் வழக்காடி வெல்லும் படம். மலையாளத்தில் கொலை+காவல்துறை+விசாரணை+வழக்கு என்னும் கதைப்பொருளில் அமைந்த படங்கள் எப்போதுமே வெகுவாக விரும்பப்படுகின்றன. அந்தப் போக்கின் தொடர்ச்சிதான் அண்மையில் வெளியாகிப் பரபரப்பான திருஷ்யம் திரைப்படமும். 'மௌனம் சம்மதம்' திரைப்படமும் கொலைப் புலனாய்வுத் திரைப்படம்தான். மலையாளத்தின் புகழ்பெற்ற கதாசிரியரான லோகிததாஸ் தாமே முதலிட்டு இயக்கிய படத்தைத் தமிழில் செய்யத் துணிந்தார். 'கஸ்தூரிமான்' என்னும் அந்தப் படம் குறிப்பிடத்தக்க முயற்சியாக அமைந்திருந்தும் வெற்றி பெறவில்லை.

  Malayalam film makers natable works in Tamil

  மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து படமெடுத்த இயக்குநர்களின் தலையாயவர் பாசில்தான். பூவே பூச்சூடவா தொடங்கி ஒருநாள் ஒரு கனவு வரைக்கும் வாழ்க்கைக் கதைகளைத் தொடர்ந்து இயக்கி தமிழ் மனங்களை வென்றவர். அவர் எடுத்த படங்கள் மலையாளத்தில் வெற்றி பெற்றபின் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டவை. கேரளத்தின் இயக்குநர்கள் பலரும் மலையாளத்தில் வெற்றி பெற்ற தத்தம் படங்களைத் தமிழில் செய்ய வந்தவர்களே. பாசிலின் படங்களும் அவ்வகையே. ஆனால், மறு உருவாக்கத்தில் தமிழில் அவர்க்கு இளையராஜா என்னும் இசைப்பேரரசரின் துணை கிடைத்தது. பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருசம் பதினாறு, அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒருநாள் ஒருகனவு ஆகிய படங்களை பாசில் இயக்கினார். இவற்றில் ஓரிரண்டைத் தவிர அனைத்துமே வெற்றிப் படங்கள். ஒவ்வொன்றும் நம் உணர்ச்சிகளோடு வலிமையாய் உரையாடிய திரைப்படங்கள். காதலுக்கு மரியாதை தமிழிலும் ஏன் அப்படி ஓடியது ? படத்திலேயே அதற்கான விடை இருக்கிறது. கரகாட்டக்காரனுக்கு நிகரான வெற்றியைப் பாசிலின் வருசம் பதினாறு திரைப்படம் பெற்றது. இந்தச் செய்தி இன்றுள்ள பலர்க்கும் வியப்பாகக்கூட இருக்கலாம். ஆனால் பாருங்கள்... வருசம் பதினாறு திரைப்படத்தின் தெளிவான பதிப்பு இன்றைக்கு எங்கும் கிடைப்பதில்லை. பாசில் இயக்கிய தமிழ்ப் படங்களைப் பற்றியே விரிவாக எழுதவேண்டும் என்றிருக்கிறேன்.

  English summary
  Poet Magudeswaran's article on Malayalam film makers like Fasil notable works in Tamil cinema
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X