»   »  ஒரிஜினல் வசூல் ராஜா

ஒரிஜினல் வசூல் ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுப் புது டிரெண்டுகளும், மாடர்ன் டெக்னாலஜியின் மேஜிக்கும் தமிழ் சினிமாவையும், சினிமாக்காரர்களையும் புரட்டிப் போட்டுக் கொண்டுள்ள நிலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வந்து எம்.ஜி.ஆர். படங்கள் பட்டையைக் கிளப்பி ஒரிஜினல் வசூல் ராஜா, வாத்தியார்தான் என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளன.

உலகத் தரம் வாய்ந்த படங்களை தமிழ் சினிமா கொடுக்க ஆரம்பித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு உலக அளவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் தமிழ்ப் படங்கள் ரவுண்டு அடிக்க ஆரம்பித்துள்ளன.

சமீபத்தில் முடிந்த கேன்ஸ் விழாவில் கூட மணிரத்தினத்தின் குரு, வசந்தபாலனின் வெயில் ஆகிய படங்கள் திரையிடப்பட்டு பாராட்டும் பெற்றன.

தலை சிறந்த டெக்னீஷியன்கள், நல்ல கலைஞர்கள் நிரம்பிக் கிடக்கும் தமிழ் சினிமாவையும், சினிமாக்காரர்களையும் பார்த்து இந்தியத் திரையுலகமே வியர்த்துப் போய்க் கிடக்கிறது. தமிழ்ப் படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் பெரும் அலையைக் கிளப்பி அசத்தி வருகின்றன.

ஆனால் இன்றுள்ள டெக்னாலஜி எதுவும் இல்லாத காலத்தில் வெளியாகி பெரும் வெற்றியும், பாராட்டும் பெற்ற மக்கள் நடிகர் எம்.ஜி.ஆரி.ன் படங்கள் 40 வருடங்களைக் கடந்த நிலையில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி தமிழகத்தை கலக்க ஆரம்பித்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு நாடோடி மன்னன் படம் வெளியாகி பெரும் அலையை எழுப்பியது. சென்னையில் திரையிடப்பட்ட நாடோடி மன்னன் தமிழகத்தின் பல பகுதிகளிலும் திரையிடப்பட்டு பெரும் வசூலை அள்ளியது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆரின். சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ஆயிரத்தில் ஒருவன் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. 1965ம் ஆண்டு வெளியான படம்தான் ஆயிரத்தில் ஒருவன்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த இப்படம் அந்தக் காலத்தில் மாபெரும் ஹிட் படம். அருமையான பாடல்கள், விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இனிய இசை, அர்த்தம் தோய்ந்த ஆழ்ந்த வசனங்கள், அசத்த வைக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, சினிமாப் பிரியர்களுக்கும் திகட்டாத விருந்தாகும்.

பெரும் வெற்றி பெற்ற ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. வாத்தியாரை மீண்டும் காணும் ஆர்வத்தில் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். திரையிடப்பட்ட தியேட்டர்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

சென்னை நகரில் அன்னை அபிராமி தியேட்டர் உள்ளிட்ட ஐந்து முக்கிய தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸ் ஆகியுள்ளது. புறநகர்களையும் சேர்த்து மொத்தம் 12 தியேட்டர்களில் படம் ரிலீஸாகியுள்ளது.

முதல் நாளான இன்று காலை ஓப்பனிங் ஷோவுக்கே ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதைக் காண முடிந்தது. அபிராமி மெகா மால் மேலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,

முதல் நாள் காட்சிகளுக்கு அனைத்து டிக்கெட்டுக்களும் விற்றுத் தீர்ந்து விட்டன என்றார்.

புதிய படங்களுக்கு ஒட்டப்படுவது போல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கும் நகரெங்கும் போஸ்டர்களை ஒட்டியும், கட் அவுட்களை வைத்தும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அசத்தி வருகின்றனர்.

ஆயிரம் சூப்பர்கள் வந்தாலும் வாத்தியார் தனி ஸ்டார்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil