»   »  ஜல்லிக்கட்டு நீக்கம் - 'மிருகம்' எதிர்ப்பு!

ஜல்லிக்கட்டு நீக்கம் - 'மிருகம்' எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil
Padmapriya
இயக்குநர் சாமி இயக்கியுள்ள மிருகம் படத்தில் ஜல்லிக்கட்டு காட்சியை, பிராணிகள் நல வாரியம் நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 25ம் தேதி சென்னையில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலம் நடத்தப் போவதாக மிருகம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

புதுமுக நடிகர் ஆதி, நடிகை பத்மப்ரியாவின் நடிப்பில், சாமி இயக்க, கார்த்திக் ஜெய் தயாரிக்க உருவாகியுள்ள படம் மிருகம்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தப் படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. படத்திற்கு தணிக்கை வாரியம் எந்த காட்சியையும் கட் செய்யாமல் சான்றிதழ் வழங்கியிருந்தது. ஆனால் படத்தில் இடம் பெற்ற ஜல்லிக்கட்டு காட்சிக்கு பிராணிகள் நல வாரியம் அனுமதி தர மறுத்து விட்டது. மேலும் அந்தக் காட்சியை கட் செய்ய வேண்டும் என்று கூறி விட்டது.

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காட்சி இல்லாமலேயே படம் வெளியாகியுள்ளது. இதற்கு தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் படத்தின் நாயகன் ஆதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களை மூன்று பேரும் சந்தித்து தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். பின்னர் இயக்குநர் சாமி கூறுகையில், ஜல்லிக்கட்டு காட்சி மிகவும் முக்கியமானது. இதை மதுரை அருகே உள்ள குரண்டி கிராமத்தில் செட் போட்டு எடுத்தோம்.

காட்சியைப் படமாக்கியபோதே, டாக்டரை அருகில் வைத்துக் கொண்டுதான் படமாக்கினோம். மாடுகளுக்கு எந்தவித தொல்லையும் தரப்பட்டது. இதுதொடர்பாக சான்றிதழும் பெறப்பட்டது.

சென்சார் உறுப்பினர்களும் படத்தில் எந்தக் காட்சிக்கும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால் பிராணிகள் நல வாரியத்தினர் ஜல்லிக்கட்டு காட்சியை நீக்கி விட்டனர்.

நிஜத்தில் குதிரைப்படை என்ற பெயரில் குதிரைகளை வதைக்கின்றனர். மோப்ப நாய்கள் என்ற ெபயரில் நாய்கள் வதைக்கப்படுகின்றன. ஆனால் செட் போட்டு எடுத்த எங்களது காட்சியை நீக்கியுள்ளனர்.

இதைக் கண்டித்து வருகிற 25ம் தேதி சென்னையில், சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து பிராணிகள் நல வாரிய அலுவலகம் உள்ள திருவான்மியூர் வரை ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலம் நடத்தவுள்ளோம்.

இதற்கான காளைகளை மதுரையிலிருந்து கொண்டு வரப் போகிறோம். இந்த ஊர்வலத்தில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளரும் கோவணம் கட்டிக் கொண்டு செல்வார்கள் என்று தெரிவித்தனர்.

மிருகம் பட யூனிட்டின் இந்த மாட்டு ஊர்வல அறிவிப்பால் சலசலப்பு எழுந்துள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil