twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை- 12: மூடத்தனத்தின் முகத்திரையைக் கிழித்த படம்!

    |

    -பெரு துளசிபழனிவேல்

    தமிழ் சினிமா உலகம் மூடத்தனமான சென்டிமென்ட்டுகளில் முழுமையாக மூடிக் கிடக்கிறது. எதற்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்ப்பார்கள். பூஜை போடுவதற்கு குறிப்பிட்ட தேதி, கிழமை, நாள் பார்ப்பார்கள். படம் எடுக்க வெற்றிப் பெற்ற ஹீரோ, டைரக்டரை தேடுவார்கள். படத்தை ரிலீஸ் பண்றதுக்கும் ஜோசியரைப் பார்ப்பார்கள். ஏற்கனவே பல படங்கள் பலநாள் ஓடிய தியேட்டர்களை தேடிப் பிடித்து படத்தை போடுவார்கள்.

    அப்படிப்பட்ட கண்மூடித்தனமான சென்டிமென்ட் எல்லாவற்றையும் முறியடித்து மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'ராமு' (1966). டைரக்டர் ஏ.சி. திருலோகசந்தர் படத்தை இயக்கியிருந்தார். ஜெமினி கணேசன், கே ஆர் விஜயா, புஷ்பலதா நடித்திருந்தார்கள்.

    Nenjam Marappathillai 12

    ஏவிஎம் நிறுவனம் 'குழந்தையும் தெய்வமும்' படத்தை இந்தியில் தயாரித்தது. அதற்கான படப்பிடிப்பு பம்பாயில் நடந்துக் கொண்டிருந்தது. அந்தப் படப்பிடிப்பிற்கு தனது குழுவினருடன் சென்றுக் கெர்ண்டிருந்த ஏவிஎம் சரவணன் சுவற்றில் ஒட்டியிருந்த இந்தி நடிகர் கிஷோர்குமார், ஒரு சிறுவன் சம்பந்தபட்ட போஸ்டரை பார்த்து பம்பாய் டிரைவர் யஸ்வந்த் என்பவரிடம் கேட்டார், "இது என்ன படம்? வெற்றிகரமாக ஒடிகிட்டிருக்கா?" என்று.

    அதற்கு டிரைவர், "தூர் ககன் கிசாவோன் மே' (Door Gagan Ki Chhaon Mein) இதுதான் இந்தியில் இந்தப் படத்தின் பெயர். இதில் கிஷோர் குமார்தான் ஹீரோவாக நடிச்சிருக்கார். இதுஒரு மூங்கா படம் சார் படம்.. பிளாப்," என்றார் டிரைவர்.

    "மூங்கா படமா... அப்படின்னா?", என்று கேட்ட ஏவிஎம் சரவணன் அவர்களிடம் மறுபடியும் டிரைவர் சொன்னார், "இது ஒரு ஊமைப் பையனோட கதை சார். இப்படிப்பட்ட படங்கள் எங்க எடுத்தாலும் ஓடாது சார்," என்றார் டிரைவர். ஆனாலும் ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு போஸ்டரைப் பார்த்ததிலிருந்து ஒரு ஈர்ப்பு இருந்தது. பம்பாயில் இருந்த தமது கிளை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிர்வாகியை அழைத்து, "இந்தப் படத்தை தமிழில் தயாரிப்பதற்கு உரிமை தருவார்களா? என்று கேட்டுப் பாருங்கள்," என்றார்.

    அந்த நிர்வாகியும் இந்திப்பட கம்பெனியில் நேரடியாகப் போய் பேசினார். "ஏவிஎம் நிறுவனத்திலிருந்து இந்தப் படத்தை தமிழில் எடுக்க உரிமை கேட்கிறார்கள் தரமுடியுமா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஏற்கனவே தமிழில் எடுப்பதற்கு வீனஸ் பிக்சர்ஸ் மானேஜர் சுப்பிரமணியம் என்பவருக்கு உரிமை கொடுத்துவிட்டோம்," என்றார்கள்.

    பம்பாயில் நடந்த 'குழந்தையும் தெய்வமும்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் சென்னை வந்த ஏவிஎம் சரவணன் தனது புரொடக்ஷன் மானேஜரை கூப்பிட்டு வீனஸ் பிக்சர்ஸிடம் பேசச் சொன்னார். அவரும் போய் பேசிவிட்டு வந்து சொன்னார்.

    "இந்தப் படத்தை தமிழில் எடுக்க வீனஸ் பிக்சர்ஸ் சுப்பிரமணியம்தான் உரிமை வாங்கியிருக்கிறார். அவருக்கு வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பைனான்ஸ் கொடுக்க மறுத்துவிட்டார்களாம். அதனால் அந்தப் படத்தை தமிழில் எடுக்கவில்லையாம். மேலும் எல்லோரும் ஒடாது என்று சொன்னார்களாம். அதனால் நமக்கு தமிழில் எடுக்க உரிமை தருவதற்கு ஒப்புக் கொண்டார். அவர் வாங்கிய விலை பத்தாயிரம் ரூபாய், ஐயாயிரம் மேலே போட்டு கேட்கிறார். அவ்வளவுதான்," என்றார்.

    வீனஸ் பிக்சர்ஸ் மானேஜர் சுப்பிரமணியம் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு தமிழில் எடுப்பதற்கு உரிமை வாங்கினார்கள்.

    Nenjam Marappathillai 12

    இந்தப் படத்தை ஏவி மெய்யப்ப செட்டியார் ஏவிஎம் முருகன், ஏவிஎம் குமரன், ஏவிஎம் சரவணன் டைரக்டர் கிருஷ்ணன்பஞ்சு, டைரக்டர் ஏ.சி.திருலோசந்தர், கதை வசனகர்த்தா ஜாவர்சீதாராமன் ஆகியோர் தியேட்டரில் போட்டுப் பார்த்தருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு 'சுத்த வேஸ்ட்' என்று சொல்லிவிட்டார்கள்.

    ஜாவர் சீதாராமன், "பிறவிலேயே ஊமையாக பிறந்த சிறுவனின் கதை. இதை எப்படி இன்ட்ரங்டிங்கா திரைக்கதை அமைக்க முடியும்?" என்று கேட்டார்.

    அதற்கு ஏவிஎம் சரவணன், "அவன் பிறவிலேயே ஊமையாக பிறந்தவனில்லை. இடையிலே ஒரு விபத்திலே ஊமையானவன் என்று திரைக்கதையை மாற்றி பாருங்க, எப்படி ஊமையானான் என்பதை எல்லோருக்கும் பிடிக்கின்ற வகையில் ஃபிளாஷ்பேக்கிலே ஒரு கதையைச் சொல்லுங்க," என்றார்.

    இதைக்கேட்ட ஜாவர் சீதாராமன், "அடடே எனக்கு இப்படி ஒரு ஐடியா வராமல் போய்விட்டதே... அப்படி மாற்றினால் திரைக்கதையில் விறுவிறுப்பு கூடும் படம் பார்ப்பவர்களுக்கும் எதிர்பார்ப்பு கொடுக்கும்," என்றார். அதன்பிறகு அந்தப்படத்தை தமிழில் எடுக்க வேலைகள் நடந்தன.

    முதலில் கதாநயாகனாக நடிப்பதற்கு ஜெமினி கணேசன் அவர்களுக்கு ஒப்பந்தம் போட்டார்கள். அப்பொழுது ஜெமினி கணேசன் மூன்று மாதத்திற்கு மேலாக வாய்ப்புகள் இல்லாமல் மேக்கப் போடாமல் வீட்டிலிருந்தார்.

    ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் சம்பளம் பேசினார்கள் அவர் ஒரு சம்பளம் கேட்டார் 'களத்தூர் கண்ணம்மா' படத்திற்கு தொன்னூறாயிரம் சம்பளம் வாங்கியிருந்தார். ஆனால் அந்தச் சம்பளம் கொடுக்க முடியாது, என்றார்கள்.

    அவரும், "பரவாயில்லை மற்ற நடிகர்களுக்கு என்ன சம்பளம் கொடுப்பீர்களோ அதை கொடுங்கள் போதும்," என்றார். அதற்கு ஏவிஎம் சரவணன், "இன்று செவ்வாய்கிழமை. செவ்வாய்கிழமை பணத்தை வெளியிலே தரக் கூடாது. அதுவும் இப்போது ராகு காலமாக இருக்கிறது. எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. உங்களுக்கு ஒ.கே.வா?," என்றார்.

    "நீங்கள் வந்த நாள் நல்ல நாள். பணம் கொடுக்கிற நேரம்தான் நல்லநேரம். இப்பவே அட்வான்ஸ் கொடுங்க வாங்கிக் கொள்கிறேன்," என்றார் ஜெமினி.

    அவருக்கு செவ்வாய் கிழமையில் அதுவும் ராகு காலத்தில் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு 'ராமு' என்ற பெயர் சூட்டினார்கள். உடனே சிலர் 'ராமு' என்ற பெயர் டப்பிங் படத்தின் பெயரைப் போலிருக்கிறது. தியேட்டருக்கு எல்லா ஆடியன்ஸும் வரமாட்டார்கள் என்றார்கள். ஆனாலும் 'ராமு' என்ற பெயர் மாற்றப்படவில்லை.

    இந்தப் படத்திற்கு பிறகு ஜெமினி கணேசன் அவர்களுக்கு எட்டு படங்களுக்கு நடிப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தப் படத்தின் சிறப்பு இதில் இடம் பெற்றிருந்த அத்தனைப் பாடல்களும் இனிமையாக இருந்ததன. சூப்பர் ஹிட்டாகின. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் உட்கார்ந்து நல்ல இனிமையான டியூன்களை கேட்டு வாங்கியவர் ஏவிஎம் குமரன். இந்தப் படத்தின் முக்கியமான ஊமை கதாபாத்திரத்தில் மாஸ்டர் ராஜ்குமார் நடித்து அனைவரிடமும் அனுதாப ஒட்டுகளைப் பெற்றார்.

    Nenjam Marappathillai 12

    'ராமு' படம் வெளியே வந்து மாபெரும் வெற்றிப் பெற்றது. வசூலை அள்ளிக் கொடுத்தது. சிறந்த மாநிலப் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

    தயாரிப்பு எம்.முருகன், எம்.குமரன், எம்.சரவணன்.

    மூடத்தனமான சென்டிமென்ட்டுகளில் மூழ்கியிருக்கும் இந்த சினிமாவில் 'ராமு' போன்ற படங்களும் துணிச்சலுடன் நீச்சலிட்டு வெளியாகி மூடத்தனத்தின் முகத்திரையை கிழித்தெரிந்து விட்டுப்போகின்றன!

    -தொடரும்...

    English summary
    The 12th part of Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X