»   »  நெஞ்சம் மறப்பதில்லை 16: டி எஸ் பாலையா.. உம்மைப் போல் யாரைய்யா!

நெஞ்சம் மறப்பதில்லை 16: டி எஸ் பாலையா.. உம்மைப் போல் யாரைய்யா!

Subscribe to Oneindia Tamil

-பெரு துளசிபழனிவேல்

டிஎஸ் பாலையா...

தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என்று எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர். தனக்கென்று தணிபாணியை வகுத்துக் கொண்டு தன்னிகரில்லா பன்முகம் கொண்ட கலைஞராக வெற்றிவலம் வந்தவர்.

36 வருடங்களாக அனைத்து தலைமுறை ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்ற அபூர்வமான கலைஞர் டி.எஸ்.பாலையா.

இவர் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.கே. ராதா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ஏவிஎம் ராஜன், சிவக்குமார் போன்ற எல்லா முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர். தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்கு தனது நடிப்பாற்றலால் தனித்துவம் தந்தவர் டி.எஸ்.பாலையா.

சில படங்களில் பாலையா நடிக்கவில்லை என்பதால் சில முன்னணி ஹீரோக்கள் அந்தப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கிப் போயிருக்கிறார்கள்.

ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த 'மோகினி' படத்தில் எம்.ஜி.ஆரும், டி.எஸ்.பாலையாவும் இரண்டு நாயகர்களாக இணைந்து நடித்தார்கள். இதில்முதல் நாயகன் அதாவது படத்தின் கதாநாயகன் யார்? என்ற பிரச்சனை வந்தபோது டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர். கதாநாயகனாக இருக்கட்டும் நான்துணை நாயகனாக இருக்கிறேன் என்று விட்டுக் கொடுத்தார்.

Nenjam Marappathillai 16: TS Balaiya

அந்த நன்றிக்காக எம்.ஜி.ஆர். ஒரு படத்தையே விட்டுக் கொடுத்தார். 'கற்பகம்' படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எம்ஜிஆரிடம் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர், கதையில் வரும் மாமனார் வேடத்தில் டி.எஸ்.பாலையா நடிப்பதாயிருந்தால் நான் நடித்து தருகிறேன் என்றார். ஆனால் கதைக்கு எஸ்.வி.ரங்காராவ்தான் பொருத்தமாக இருப்பார் என்றார் டைரக்டர். கே.எஸ்.ஜி. அப்படியானால் வேறு யாரையாவது நடிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். அதன்பிறகுதான் ஜெமினி நடித்தார்.

எம்.ஜி.ஆர்.நடித்த 'ராஜகுமாரி', 'மதுரைவீரன்', 'அந்தமான் கைதி', 'தாய்க்குப்பின் தாரம்', 'புதுமைப்பித்தன்', 'பாக்தாத் திருடன்', 'ராஜா தேசிங்கு', 'பணம் படைத்தவன்', 'பெற்றால்தான் பிள்ளையா' போனற் படங்களில் சிறப்பாக நடித்தார் பாலையா.

Nenjam Marappathillai 16: TS Balaiya

சிவாஜி நடித்த 'பாவமன்னிப்பு', 'பாலும் பழமும்', 'பழனி', 'பதிபக்தி', 'பாதுகாப்பு', 'அறிவாளி', 'எதிரொலி', 'விளையாட்டுப்பிள்ளை', 'குருதட்சணை', 'தங்கைக்காக', 'தேனும்பாலும்', 'மரகதம்', 'காத்தவராயன்', 'புதையல்', 'ஊட்டி வரை உறவு' போன்ற படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.

'திருவிளையாடல்' படத்தில் ஹேமநாத பாகவதராக வந்து 'ஒரு நாள் போதுமா? இன்னொரு நாள் போதுமா?' என்ற பாடலைப்பாடி தனது வித்தை கர்வத்தை வெளிகாட்டி நத்திருப்பார்.

'காதலிக்க நேரமில்லை' படத்தில் நாகேஷ் கதை சொல்லும் காட்சியில் நடிக்கும் போது உடம்பு அசையாமல் வெறும் ரியாக்ஷன் மட்டும் கொடுத்து முகபாவத்திலேயே படம பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருப்பார்.

Nenjam Marappathillai 16: TS Balaiya

'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் தவில் வித்வானாக சிவாஜிகணேசன் அவர்களுக்கு பக்கவாத்யகலைஞராக வந்து நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டியிருப்பார் பாலையா.

'பாமா விஜயம்' படத்தில் வரவுக்கு மிஞ்சிய செலவு குடும்பத்திற்குள் வரக்கூடாது என்று 'வரவு எட்டணா, செலவு பத்தணா' என்ற பாட்டுப்பாடி வெளிப்படுத்துவார். 'பாகப்பிரிவினை' படத்தில் எம்.ஆர். ராதாவின் சவாலான நடிப்பிற்னுகு ஈடுகொடுத்து நடித்திருப்பார்.

டி.எஸ்.பாலையாவிற்கு நல்லபேரும் புகழையும் பெற்றுத் தந்த படங்கள் 'ஏழைப் படும்பாடு', ' ஓர் இரவு', 'மணமகள்', 'மாமன் மகள்', ' செல்லப் பிள்ளை', 'களத்தூர் கண்ணம்மா', 'தாயில்லாப் பிள்ளை', 'இது சத்தியம்', 'யாருக்காக அழுதான்', 'என்னதான் முடிவு', 'கற்பூரம்', 'வாலிப விருந்து', பக்தபிரகலாதா', 'பனித் திரை', 'நம்ம வீட்டுத் தெய்வம்', ' எதிர்காலம்', ' அனுபவம் புதுமை' போன்ற படங்களாகும். டி.எஸ்.பாலையா கடைசியாக நடித்த படம் ஜெமினிகணேசன் கதாநாயனாக நடித்த 'எல்லைக் கோடு' (1972).

Nenjam Marappathillai 16: TS Balaiya

டிஎஸ் பாலையா தமிழ் சினிமாவிற்கு புதிய நடிகராக நடித்து அறிமுகமான படம் 'சதிலீலாவதி' (1936) இதில் எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்தார். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., கே.ஏ.தங்கவேலு ஆகியோர் முதன்முதலாக நடித்து அறிமுகமான படமும் 'சதிலீலாவதி'தான்.

டி.எஸ்.பாலையா கதாநாயனாக நடித்த படங்கள் 'சித்ரா' (1946) 'செண்பகவல்லி' (1948) 'வெறும் பேச்சல்ல'. சித்ரா படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்தது. எம்.எஸ்.விஜயாள் கதாநாயகியாக நடித்தார். 'வெறும் பேச்சல்ல' படத்தில் பாலையாவுக்கு ஜோடியாக பத்மினி நடித்தார்.

தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேடபடம் 'உத்தம புத்திரன்', பி.யூ. சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் ஹாலிவுட் நடிகரைப் போன்று வில்லன் வேடத்தை வித்தியாசமாக நடித்துக் காட்டினார் டி.எஸ்.பாலையா. தொடர்ந்து பி.யூ.சின்னப்பா நடித்த 'மனோன்மணி', 'ஆர்யமாலா', போன்ற படங்களிலும் நடித்தார்.

பேரறிஞர் அண்ணா கதை வசனத்தில் வெளிவந்த 'வேலைக்காரி' படத்தில் டி.எஸ். பாலையா என்ற மறக்க முடியாத வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஏற்று நடித்த வேடம்தான் எனக்கு மிகவும் பிடித்த, மறக்க முடியாத வேடமாகும் என்று ஒரு பேட்டியில் குறிப்பட்டிருக்கிறார் பாலையா. இந்தப் படத்தில் கே.ஆர். ராமசாமி கதாநாயகனாக நடித்திருந்தார்.

'சத்திய சோதனை' என்ற படத்தில் கொடூரமான, வில்லனாக நடித்து படம் பார்ப்பவர்களை பயமுறுத்தினார். பாலையாவுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்த படம் சிவாஜி கணேசன் நடித்த 'தூக்கு தூக்கி', இதில் கள்ளக் காதல் புரியும் 'சேட்டு' கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 'கடன் வாங்கி கல்யாணம்', படத்தில் பாலையா நடித்திருந்தார். ஜெமினி கதாநாயகனாக நடித்திருந்தார். படம் வெற்றிப் பெற்றது, பாலையாவுக்கு மேலும் நல்லப் பெயரைப் பெற்றுத் தந்த படம்.

Nenjam Marappathillai 16: TS Balaiya

1950 ஆம் ஆண்டு வெளிவந்த 'பிரஸன்னா', 'சந்திரிகா', 'ஆசாதீபம்', ' போன்ற மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார் பாலையா.

'குணசாகரி' என்ற கன்னடப் படத்திலும் நடித்தார். 'ஸ்வீகாரம்' என்ற படத்திற்கு டி.எஸ்.பாலையா கதை வசனம், எழுதியிருந்தார். இதில் சிவாஜி, எம்.கே.ராதா, தங்கவேல், ராஜ சுலோச்சனா ஆகியோர் நடித்தார்கள். நாராயண் என்பவர் படத்தை இயக்கினார். ஆனால் படம் வெளிவராமல் போனது.

டி.எஸ்.பாலையா, தான் கதாநாயகனாக நடித்த படங்களில் எல்லாம் சொந்தக் குரலில் பாடி நடித்திருக்கிறார்.

டி.எஸ்.பாலையா 'நல்ல காலம்' (1954) என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். இந்தப் படத்தை ஸின்ஸா & வேம்பு இயக்கினார்கள்.

டி.எஸ்.பாலையா 23.08.1914 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார்.
1940 ஆம் ஆண்ட கோயம்புத்தூர் அங்கண்ணன் ('கண்ணன் பேட்டோ ஸ்டுடியோ' அதிபர்) மகள் பத்மாவதியை மணந்துக்கொண்டார்.1941ஆம் ஆண்டு அவரது இளைய மகள் லீலாவதியையும் திருமணம் செய்துக் கொண்டார் பாலையா. மூத்த மனைவிக்கு சாயிபாபா, துர்க்காலட்சுமி, சோணையன், தேவ சேனாதிபதி, அரவிந்தோ ஆக ஒரு பெண்ணும், நான்கு பிள்ளைகளும் உண்டு இரண்டாவது மனைவிக்கு அம்புஜம் என்ற பெண்ணும் ரகு (ஜூனியர் பாலையா) என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள்.

பாலையா மூன்றாவதாக திருமணம் செய்த நவநீதம் (நடிகை சந்திரகாந்தாவின் அக்கா) என்ற பெண்மணிக்கு மனோசித்ரா என்ற மகள் உள்ளார்.

36 வருடங்களில் 146 படங்களில் நடித்து முடித்த டி.எஸ்.பாலையா திடீரென நோய்வாய்ப்பட்டு தியாகராய நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனது 58வது வயதில் 1972ஆம் ஆண்டு மறைந்தார்.

திரையுலகுக்கு நேர்ந்த ஈடு செய்ய முடியாத இழப்புகளில் ஒன்று பாலையா மறைவு.

-தொடரும்...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    An article ablout Tamil cinema versatile legend T S Balaiya.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more