twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை - 17: எம்.ஜி.ஆருடன் மோதிய தயாரிப்பாளர்!

    |

    -பெரு துளசிபழனிவேல்

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். - தேவரின் நட்பை தமிழ்த் திரையுலகமே அறிந்து போற்றிக் கொண்டிருக்கிறது.

    'அரசிளங்குமரி' படத்தில் மல்யுத்தம் கதாபாத்தரத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக சாண்டோ சின்னப்பா தேவரை எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்தார்.

    பின்னர் சண்டை நடிகராக இருந்தவரை 'தாய்க்குப்பின் தாரம்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்த்தியது, தொடர்ந்து 16 படங்கள் கதாநாயகனாக நடித்து கொடுத்து தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தை வெற்றிப்பட நிறுவனமாக பேச வைத்தது எல்லாமே எம்.ஜி.ஆர் தான் என்பதை எல்லோரும் அறிவார்கள்... தேவரும் உணர்வார். எம்ஜிஆர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையையும் கொண்டவர். தான் வணங்கும் முருகப் பெருமானுக்கு இணையாகத்தான் தன் மனதில் எம்.ஜி.ஆரை உயர்த்தி வைத்திருந்தார் தேவர். அது மிகையான செய்தியும் அல்ல.

    Nenjam Marappathillai 17

    அவ்வளவு ஏன்... எம்ஜிஆரை ஆண்டவா என்றுதான் தேவர் அழைப்பார்.

    அப்படிப்பட்ட இறுக்கமான நண்பர்களாக இருந்த இவர்களுக்குள், இவர்களே எதிர்பார்க்காத ஒரு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. அந்தப் பிரச்சனைதான் பூதாகரமாகி இருவருக்குள்ளும் ஒரு மோதலை உருவாக்கி பிரித்து வைத்தது.

    நட்பு வேறு தொழில் வேறு என்று நினைப்பவர் தேவர். என்னதான் நட்பாக இருந்தாலும் தொழில் விஷயத்தில் கரெக்டா இருக்க வேண்டும் என்பதை சம்பந்தபட்டவர்களிடமே நேரிலேயே முகதாட்சணை பார்க்காமல் சொல்லிவிடுவார் தேவர்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வழக்கம் போல் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக மறுபடியும் ஒப்பந்தம் செய்து 'காதல் வாகனம்' என்ற படத்திற்கான பூஜையைப் போட்டார் தேவர். பூஜையன்றே தீபாவளி வெளியிடு என்றுஎல்லா பேப்பர்களிலும் விளம்பரம் கொடுத்தார். படப்பிடிப்பு துவங்கி வேகமாக நடக்கத் தொடங்கியது. இதில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடியாக நடித்தார்கள். சின்னப்பா தேவரின் சகோதரர் எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கினார்.

    ஒருநாள் இந்தப் படத்தின் காலை 9 மணி படப்பிடிப்பிற்கு 8 மணிக்கே நடிகர் அசோகன் வந்துவிட்டார். எம்.ஜி.ஆர். லேட்டாக வந்தார். உள்ளே போய் மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து உட்கார்ந்தார். தேவருக்கு கோபம் கொப்பளித்தது. தேவர் எப்பொழுதும் எம்.ஜி.ஆரை மட்டும் நேராகத் திட்டமாட்டார். யாரையாவது கூப்பிட்டு அவர்களைத் திட்டுவதுபோல் ஆபாசமாக திட்டத் தொடங்கிவிடுவார். அப்படித்தான் அன்று அசோகனைத் திட்டுவதுபோல் எம்.ஜி.ஆரைத் திட்டினார்.

    Nenjam Marappathillai 17

    அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசினார். பணம் மட்டும் கட்டு கட்டாக வாங்கத் தெரிகிறது. ஆனால் படப்பிடிப்பிற்கு மட்டும் சீக்கிரமா வரத் தெரியாது. உன்னால எவ்வளவு வேலைகள் நின்னுப் போச்சு. அதனால உண்டான நஷ்டத்தை நீயா தருவ... என்றுபடப்பிடிப்பிற்கு வந்தவர்களெல்லாம் வேடிக்கைப் பார்க்கின்ற அளவிற்கு சத்தம் போட்டார் தேவர். அசோகனுக்குத் தெரியும் இந்தத் திட்டு நமக்கில்லை என்று.

    இருந்தாலும் அசோகன், 'அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே... கொஞ்சம் லேட்டாயிடுச்சு நாளைக்கு சீக்கிரம் வந்துடறண்ணே...' என்று தேவரிடம் கெஞ்சுவார். இந்தத் திட்டு நமக்குத்தான் என்று உணர்த்திருந்தாலும் இதைக் கண்டுக் கொள்ளாதவர் போல் வேறுபக்கம் திரும்பி உட்கார்ந்து கொள்வார் எம்.ஜி.ஆர். இப்படி எம்.ஜி.ஆர். மேல் தேவருக்கும் தேவர் மேல் எம்.ஜி.ஆருக்கும் கோபம் இருந்தாலும் அதை வெளியேக் காட்டிக் கொள்ளாமல், வெளிப்படையாக மோதிக் கொள்ளாமல் அண்ணே அண்ணே என்று தன்மையாகப் பேசிக்கொள்வார்கள்.

    தேவர் பிலிம்ஸ் 'காதல் வாகனம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் 'அடிமைப் பெண்' என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். 'அடிமைப்பெண்' படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் போக வேண்டியிருந்ததால் தேவரை நேரில் சந்தித்து எம்.ஜி.ஆர். சென்னார்.

    Nenjam Marappathillai 17

    "நான் சம்பந்தப்படாத காட்சிகளை எடுத்துக் கொண்டிருங்கள், நான் சீக்கிரமாக வந்து என் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துக் கொடுத்து விடுகிறேன். படத்தை நீங்கள் சொன்னதுபோல் தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிடலாம்," என்றுஎம்.ஜி.ஆர். நம்பிக்கையோடு சொன்னார். தேவரும் ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். இல்லாத காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டு எம்.ஜி.ஆரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். சொன்னப்படி வரவில்லை. ராஜஸ்தானில் நடந்த 'அடிபைப்பெண்' படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நவம்பர் 1ந்தேதி வந்து சேர்ந்தார். நவம்பர் 7ந் தேதிதீபாவளி அன்றுதான் 'காதல் வாகனம்' படத்தை வெளியிடுவதாக விளம்பரம் கொடுத்திருந்தார் தேவர்.

    தேவருக்கு எம்.ஜி.ஆர். போன் பண்ணி பேசினார். "அண்ணே மன்னிச்சிடுங்க திரும்பிவர கொஞ்சம் லேட்டாகிவிட்டது. நானும் மிகவும் களைப்படைந்து வந்திருக்கிறேன். படத்தை ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் பண்ணிடலாம். ஒன்றிரண்டு நாட்கள் பொறுத்து நான் வந்து என் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்து விடுகிறேன்," என்றார். தேவருக்கு கோபம் அதிகமாகியது.

    "என் படம் தீபாவளியன்று நிச்சயமாக வெளிவரும். முடிந்தால் இப்போதே புறப்பட்டு வந்து வேலை செய்யுங்கள். இல்லாவிட்டால் ஒரு கழுதையை ஹீரேவாகப் போட்டு நான் படத்தை முடித்துவிடுவேன். தீபாவளிக்கு படம் வருவது மட்டும் தள்ளிப்போகாது".

    பட்டாசு போல் வெடித்துத் தள்ளினார் தேவர். அதைக்கேட்ட எம்.ஜி.ஆருக்கு கோபம் ஒரு பக்கம். வருத்தம் ஒரு பக்கம். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உடனடியாக படப்பிடிப்புக்கு தயாரானார். எம்.ஜி.ஆர் மூன்று நாட்களாக இரவு பகலாக நடித்து முடித்துக் கொடுத்தார். தீபாவளியன்று 'காதல் வாகனம்' படம் ரிலீசானது. படம் படு தோல்வியடைந்தது.

    அத்துடன் 'எம்.ஜி.ஆர். உறவே இனி வேண்டாம்' என்று அறுத்துக் கொண்டார் தேவர். அதன்பிறகு ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், என்று சில சிறிய ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தார். கூடவே குதிரை, குரங்கு, ஆடு, மாடு, என்று விலங்குகளையும் நடிக்க வைத்து படங்களை எடுத்து வெளியிட்டார்.

    பின்னர் இந்தியில் ராஜேஷ்கண்ணாவை நடிக்க வைத்து 'ஹாத்தி மேரா சாத்தி' படத்தை எடுத்தார். இந்தியா முழுவதும் படம் சூப்பர் ஹிட்டானது. தேவருடன் உறவு அறுந்திருந்த போதிலும் 'ஹாத்திமேராசாத்தி' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். அதே கதையில் தமிழில் தான் நடிக்க வேண்டுமென்று விரும்பினார்.

    Nenjam Marappathillai 17

    கௌரவம் பார்க்காமல் தேவரைச் சந்தித்து, "அண்ணே இறுதியாக எனக்கொரு வாய்ப்புக் கொடுங்கள். இந்தஒரேபடத்தில் மட்டும் நான் நடித்து முடித்துக் கொள்கிறேன்," என்றார்.

    தேவரும் ஒத்துக் கொண்டார். எம்.ஜி.ஆரும் நடித்தார். தேவர் பிலிம்ஸ் பேனரில் எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம 'நல்ல நேரம்' தமிழிலும் அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

    இப்படம் ஏற்கனவே மேஜர் சுந்தராஜன் கதாநாயகனாகநடிக்க தெய்வச் செயல் என்ற பெயரில் குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருந்தார் தேவர். அதேபடம் சில மாற்றங்களுடன் 'ஹாத்தி மேரா சாத்தி' என்ற பெயரில் இந்திக்குப்போனது. மறுபடியும் தமிழில் நல்ல நேரமாக வெளியே வந்து வெற்றிப் பெற்றது!

    - தொடரும்...

    English summary
    Why Legend MGR and Producer Thevar clashed in early 70's? Here is a flashback.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X