twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை- 2: கவியரசர் கண்ணதாசனும், இயக்குநர் ஸ்ரீதரும்... அது ஒரு பொற்காலம்!

    By Peru Thulasi Palanivel
    |

    -பெரு துளசிபழனிவேல்

    1962ஆம் ஆண்டு வெளிவந்து, சிறந்த மாநிலப் படத்திற்கான தேசிய விருதை (வெள்ளிப் பதக்கம்) பெற்ற படம் ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஒர் ஆலயம்'.

    இந்தப் படம் புதுமை இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் 22 நாட்களுக்குள் எடுத்து முடிக்கப்பட்டு வெளிவந்த படம். மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றியும் பெற்றது.

    இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு முக்கியமான பாடல் காட்சிக்கான சிட்சுவேஷனை கவியரசர் கண்ணதாசன் அவர்களிடம் டைரக்டர் ஸ்ரீதர் விளக்கமாக கூறிக்கொண்டிருந்தார்.

    கதைப்படி நடிகர் முத்துராமனை தேவிகா திருமணம் செய்துக்¢கொள்கிறார். தேவிகா ஏற்கனவே கல்யாணகுமாரை காதலித்து விட்டு சூழ்நிலைக் காரணமாக நோயாளியான முத்துராமனைத் திருமணம் செய்து கொள்கிறார். முத்துராமனுக்கு இந்த விஷயம் தெரியாது.

    Nenjam Marappathillai -2

    ஏற்கனவே நோயாளியான முத்துராமனுக்கு மேலும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அவரை ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு தேவிகா அழைத்துச் செல்கிறார். அங்கு தனது முன்னாள் காதலன் கல்யாணகுமாரே டாக்டராக இருப்பதை அறிகிறாள். அதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். ஆனாலும் கல்யாணகுமாரிடம் தனது கணவனைக் காப்பாற்றித் தர வேண்டும் என்ற கண்டிஷனுடன் சேர்க்கிறாள். டாக்டரும் காப்பாற்றித் தருவதாக வாக்குறுதி தருகிறார்.

    இதற்கிடையில் முத்துராமன் தனது நோயைப் பற்றி அறிகிறார். டாக்டர் கல்யாணகுமார் தனது மனைவியின் முன்னாள் காதலனாக இருந்தவர் என்பதையும் அறிகிறார். அதிர்ச்சியடைந்தாலும் தனது மரணத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

    இந்தக் காட்சியை டைரக்டர் ஸ்ரீதர் பாடலுக்கான சிட்சுவேஷனாக கவிஞர் கண்ணதாசனிடம் விவரிக்கிறார். தான் இறந்துவிடுவோம் என்று நினைத்த முத்துராமன் தனது மனைவி தேவிகாவிடம், "நான் இறந்து விட்டால் நீ மறுமணம் செய்து கொள்ளவேண்டும்", என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் டாக்டர் கல்யாணகுமாரையும் அழைத்து தனது மரணத்திற்கு பிறகு எனது மனைவியை நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கையை வைக்கிறார்.

    பாடலுக்கான சிட்சுவேஷனை டைரக்டர் ஸ்ரீதர் சொல்லிமுடித்ததும் கவிஞர் கண்ணதாசன் பேனாவிலிருந்து பாடல் வரிகள் கொட்டின.

    சொன்னது நீ தானா?
    சொல் சொல் சொல் என்னுயிரே...

    இன்னொரு கைகளிலே
    யார் யார் யார் நானா?

    எனை மறந்தாயா?
    ஏன் ஏன் ஏன் என்னுயிரே?

    தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
    தெருவினிலே விழலாமா?

    தெருவினிலே விழுந்தாலும்
    வேறோர் கை தொடலாமா?

    இந்த வரிகளைக் கேட்டதும் ஸ்ரீதருக்கு உடம்பு சிலிர்த்து, துக்கம் தொண்டையை அடைக்க, கவிஞரின் கரங்களைப் பற்றி கண்களில் ஒத்திக் கொண்டார்.

    டைரக்டர் கேட்ட பாடல் வரிகளைத் தந்த கவிஞர், இயக்குநர் ஸ்ரீதரிடம் படத்தைப்பற்றி அதிர்ச்சி தரும் வகையில் சில கேள்விகளைக் கேட்டார்.

    Nenjam Marappathillai -2

    "இந்தப் படத்தின் கதை கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு கணவன், தான் உயிரோடிருக்கும் போது தன் மனைவியிடம் தான் இறந்தபிறகு அவள் கண்டிப்பாக மறுமணம் செய்துதுக் கொள்ள வேண்டும் என்று சொல்வானா?

    இன்னொரு ஆணை அழைத்து நான் இறந்த பிறகு என் மனைவியை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்பானா? இது துளியும் நமது நாட்டின் பண்பாட்டிற்கு ஒத்துவராத விஷயமாயிற்றே... இதனால் படம் அடிப்பட்டுவிடுமோ என்ற பயம் எனக்கு இருக்கிறது," என்று ஒரு குண்டைத் துாக்கிப் போட்டார்.

    இதைக்கேட்டதும் டைரக்டர் ஸ்ரீதருக்கு பயம் வந்துவிட்டது. ஏற்கனவே இந்தக் கதையைக் கேட்ட சிலர் 'இது ஆன்டிசென்டிமெண்ட் கதை' என்று கூறிவிட்டனர். இந்தக் காட்சி சர்க்சைக்குரியதாகதான் இருக்கும். இந்தக் காட்சி இல்லை என்றால் படத்தில் ஒன்றும் இருக்காது. சாதாரணமாக பத்தோடு ஒன்றாகத்தான் இந்தப் படம் இருக்கும். அதற்காக இந்தக் காட்சியை துணிச்சலுடன் தெரிந்தே டைரக்டர் ஸ்ரீதர் வைத்திருந்தார். ஆனாலும் கவிஞர் பேசிய கருத்துகளுக்கு மறுப்பு எதுவும் சொல்ல முடியவில்லை.

    'இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு? கவிஞரே...' என்று டைரக்டர் கேட்டதும் 'அமைதியாய் யோசி... அதுதான் வழி' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    புதுமையான, புரட்சிக்காரமான அந்தக் காட்சியையும் மாற்றக் கூடாது. அதே சமயம் கவிஞர் சுட்டிக் காட்டிய குறையையும் நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கு என்ன வழி? இரவெல்லாம் துாங்காமல் அமைதியாக யோசிக்கத் தொடங்கினார் ஸ்ரீதர்.

    தான் இறந்து விட்டால் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கணவன் கேட்டதற்காக அழுகிறாள் மனைவி. டாக்டரிடம் தான் இறந்த பிறகு தன் மனைவியை அவர் மணந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கிறான் கணவன். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அறையை விட்டு வெளியேறுகிறார்.

    இந்த இரு காட்சிகளினால் படத்திற்கு பிரச்சனை வரும் என்றுதானே கவிஞர் சொன்னார்.

    இப்படி தமிழ்நாட்டில் தமிழர்கள் நடந்துகொள்வார்களா? என்பதுகேள்வி தமிழ் பாண்பாட்டிற்கு முரணானதாயிற்றே என்பது சந்தேகம்.

    இந்த இடத்தில் டைரக்டர் ஸ்ரீதர் புதியதொரு காட்சியைச் சேர்த்தார்.

    கைகளில் முகம் புடைத்து அழுதுகொண்டிருக்கிறாள் மனைவி. நோயாளி கணவன் மெல்லப் படுக்கையிலிருந்து எழுந்து நகர்ந்து அவளை நெருங்குகிறான். மெதுவாக அவள் கரங்களைப் பற்றி லேசாக அவள் முகத்தைத் தன் விரல்களால் உயர்த்தி கண்ணோடு கண் பார்த்துப் பேசுகிறான்.

    "இதோ பார் நான் என்ன தப்பாகச் சொல்லி விட்டேன்? என்று நீ இப்படி அழுகிறாய் ஒரு தாயும், தகப்பனும் தங்கள் மகள் இளம் வயதில் விதவையாகிப் போனால் அவளுக்கு மறுமணம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசைப் படமாட்டார்களா? காரணம் என்ன? தங்கள் மகள் மீது அவர்களுக்குள்ள அன்பும், பாசமும்தான். தங்கை விதவையாகிப் போனால் அவளை மீண்டும் பூவும் பொட்டுமாகப் பார்க்க வேண்டும் என்று அவள் அண்ணன் ஆசைப்படுவதில்லையா? அதற்கு என்ன காரணம் அன்பும் பாசமும்தான். அதே போல் தன் மனைவியை ஆழமாக நேசிக்கின்ற ஒரு கணவனும் ஆசைப்படுவதில் என்ன தப்பு?"

    கவியரசர் கண்ணதாசன் எழுப்பிய சந்தேகத்திற்குரிய கேள்விக்கு மேற்கண்ட காட்சியில் தனது வசனத்தினாலேயே பதில் கொடுத்தார் டைரக்டர் ஸ்ரீதர். இது கவிஞருக்கு மட்டுமல்ல அவரைப் போலவே சந்தேகப்பட்டு ஆனால் நேரில் டைரக்டரிடம் வெளியிட முடியாமல் இருந்த பலருக்கும் சேர்த்துக் கூறிய பதில்தான் இது.

    மீண்டும் படம் பார்த்த கவியரசர் கண்ணதாசன் 'நான் கன்வின்ஸ் ஆயிட்டேன்' என்றார். அவர் மட்டும் அந்த காட்சிக் காட்சிக்கான கேள்விகளை எழுப்பாமல் இருந்திருந்தால் அந்தப் படத்திற்கான முக்கியக் காட்சியை இணைத்திருக்க முடியாது. படத்தையே காப்பாற்றிய அந்த வசனம் எழுதப்பட்டிருக்காது.

    ஒரு வேளை ரசிகர்கள் கன்வின்ஸ் ஆகாமல் படத்தைப் புறக்கணித்திருப்பார்கள். படம் தோல்வியைத் தழுவியிருக்கும்.

    படம் மத்திய அரசின் விருதைப் பெற்றது. ரசிகர்களிடமிருந்து சிறந்த படத்திற்கான பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. வெற்றிப் படத்திற்கான வசூலையும் தந்தது.

    இப்படியொரு பிரச்சனை இன்றைய கலைஞர்களுக்கு ஏற்பட்டால் காட்சியையும் மாற்றாமல் கருத்தையும் சிதைக்காமல் சீர்செய்து படத்தைக் காப்பாற்றுவார்களா?

    இது வெறும் சிந்தனையில் மட்டும் வருவது அல்ல. வாழ்க்கை அனுபவத்தில் பெறுவது... இங்கு எத்தனை பேர் வாழ்க்கை அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்?

    English summary
    Second episode of Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X