»   »  நெஞ்சம் மறப்பதில்லை 25: எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படத்தில் ஜெமினி!

நெஞ்சம் மறப்பதில்லை 25: எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படத்தில் ஜெமினி!

Subscribe to Oneindia Tamil

- பெரு துளசிபழனிவேல்

1963ஆம் ஆண்டு வெளிவந்த அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இந்திய அரசின் சிறந்த மாநில படத்திற்கான நற்சான்றிதழைப் பெற்ற படம் 'கற்பகம்'. இதில் ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், நடிகையர் திலகம் சாவித்திரி, நடிகவேள் எம்.ஆர்.ராதா, நாகையா, ஆர்.முத்துராமன், வி.கே.ராமசாமி, மனோரமா, ஷீலா, பேபி ஷகிலா மற்றும் பலர் நடித்தனர். இவர்களுடன் 'கற்பகம்' என்ற கதாபாத்திரத்தில் நடிகை கே.ஆர்.விஜயா முதன் முறையாக நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகியாக அறிமுகமானார்.

ஜெமினி கணேசனுக்கு முதல்தாரமாக கேஆர் விஜயாவும், இரண்டாந்தாரமாக சாவித்திரியும் நடித்தனர். எஸ்வி ரங்காராவ் கேஆர் விஜயாவின் தந்தையாகவும் ஜெமினி கணேசனின் அன்பான மாமனாராகவும் நடித்தார். இல்லை இல்லை அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டினார். இந்தப் படத்தைப் பார்த்த அனைவருக்கும் இப்படியொரு அன்பான மாமனார் நமக்கு கிடைக்கமாட்டாரா என்றும், ஜெமினி போல் பாசமான மருமகன் நமக்குக் கிடைக்கமாட்டாரா என்றும் பலரையும் ஏங்க வைத்தப் படம்.

Nenjam Marappathillai 25

'கற்பகம்' போன்ற இப்படியொரு அழகான மகள் அல்லது மனைவி நமக்கு கிடைக்க மாட்டாளா என்று பலரும் ஆசைப்பட்டனர்.

'கற்பகம்' படத்தில் இடம்பெற்ற

'அத்தை மடி மெத்தயடி ஆடி விளையாடம்மா',

'பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்',

'மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா',

'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு'

போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். அனைத்துப் பாடல்களையும் தேனினும் இனிய தனது குரலில் பி.சுசிலா பாடியிருந்தார். படத்தின் வெற்றிக்குக் காரணம் படத்தில் நடித்த முன்னணிக் கலைஞர்கள் போட்டி போட்டு நடித்து தங்களது நடிப்பாற்றலால் ரசிகர்களை கவர்ந்ததாலா அல்லது படத்தில் இடம் பெற்ற பி.சுசிலாவின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்களா என்று ஒரு போட்டியே வைத்துவிடலாம்.

Nenjam Marappathillai 25

அந்த அளவிற்குக் கலைஞர்கள் சிறப்பாக நடித்தனர். இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இனிமையாகவும் சூப்பர் ஹிட்டாகின்ற அளவிலும் அமைந்தது. குழந்தை நட்சத்திரம் பேபி ஷகிலா தனது அத்தை கற்பகத்தின் மீது காட்டும் பாசம் அனைவரையும் கவர்ந்தது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை இந்தப் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

இந்தப் படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்ததால் அந்த வெற்றியின் மூலம் கிடைத்த லாபத்தில் 'கற்பகம்' ஸ்டுடியோவை உருவாக்கினார் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிஷ்ணன், அமர்ஜோதி மூவிஸ் சார்பில் படத்தை தயாரித்தவர் கே.எஸ்.ஜியின் சகோதரர் கே.என்.சபரிநாதன்.

இதே படம் தமிழில் நான் புடிச்ச மாப்பிள்ளை என்ற பெயரில் மீண்டும் டைரக்டர் வி.சேகர் மூலமாக அவதாரமெடுத்து மறுபடியும் மாபெரும் வெற்றி பெற்றது. காலகட்டம் மாறி, தலைமுறை தாண்டியும் வெற்றி பெறக்கூடிய கதையமைப்புக் கொண்ட படமாகும் 'கற்பகம்'.

பிள்ளையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லசிவம் (எஸ்.வி.ரங்காராவ்), இவருக்கு ராஜாங்கம் (ஆர்.முத்துராமன்) என்ற மகனும், கற்பகம் (கே.ஆர்.விஜயா) என்ற அன்பான மகளும் உண்டு. அந்த ஊரைச் சேர்ந்த அழகான இளைஞன் சுந்தரதிற்கு (ஜெமினி கணேசன்) தனது அன்பான அழகான மகளான கற்பகத்தைத் திருமணம் செய்து கொடுக்கிறார். அடுத்து தனது மகன் ராஜாங்கத்திற்கு (ஆர்.முத்துராமன்) தாண்டவத்தின் (எம்.ஆர்.ராதா) மகள் பங்கஜத்தை (ஷீலா) திருமணம் செய்து வைக்கிறார்.
கோடிக்கணக்கான தனது சொத்துக்கு வாரிசாகத் தனது மருமகன் சுந்தரத்தை வாரிசாக நியமிக்கிறார். இந்தச் சொத்துக்காக நல்லசிவம் குடும்பத்திற்குத் தனது மகள் பங்கஜத்தைத் கொடுத்த தாண்டவம் உண்மையிலேயே தாண்டவமாடுகிறார். எப்படியாவது அந்தச் சொத்துக்களை அடைவதற்குப் பல சூழ்ச்சிகளை செய்கிறார்.

Nenjam Marappathillai 25

ராஜாங்கத்துக்கு அழகான மகள் பிறக்கிறாள். ஆனால் அவர்கள் குழந்தையைக் கண்டு கொள்ளாமல்விட, அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனது அத்தை கற்பகத்திடம் போய்ச் சேர்ந்து அவள் மீது பாசத்தையும், அன்பையும் காட்டுகிறது.

குழந்தை மீனாட்சியை (பேபி ஷகிலா) கற்பகத்திடமிருந்து பிரிப்பதற்கு தாத்தா தாண்டவம் சூழ்ச்சிகள் செய்கிறார். குழந்தையையும் பிரிக்கிறார்கள். குழந்தை பிரிந்த ஏக்கத்தில் கற்பகம் தவிக்கிறார். பிரிந்து போன குழந்தை ஒருநாள் அவர்களின் தாய், தந்தையை ஏமாற்றி விட்டு கற்பகத்தைப் பார்க்க ஓடி வருகிறது. அப்பொழுது முரட்டுக்காளை ஒன்று கயிற்றை அறுத்துக் கொண்டு குழந்தையை நோக்கி ஓடிவருகிறது. அதை பார்த்துவிட்ட கற்பகம் பதறிப் போய்க் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக முரட்டுக்காளையின் எதிரில் ஓடிப்போய்த் தடுக்கிறாள்.
இதனால் ஆத்திரம் கொண்ட முரட்டுக்காளை கற்பகத்தை தனது கூரிய கொம்புகளால் குத்திக் கிழித்து உயிரை எடுக்கிறது. இதனால் அனைவரும் பதறிப்போகிறார்கள். கற்பகத்தை இழந்த நல்லசிவமும், சுந்தரமும் அவளது நினைவிலேயே ஒவ்வொரு நானும் துடித்துப்போகிறார்கள். மாமனார் நல்லசிவம் சுதாரித்துக் கொண்டு தனது மருமகனுக்கு வேவொரு பெண்ணைக் கல்யாணம் செய்து வைப்பதற்கு முயற்சி செய்கிறார்.

அதற்காக அந்த ஊரில் உள்ள பெரிய மனிதரின் (நாகையா) மகளை (சாவித்திரி) போய்ப் பார்க்கிறார். பெண் கேட்டு முடிக்கிறார். சுந்தரத்திற்கும் அந்த பெண்ணுக்கும் திருமணமும் நடந்து முடிகிறது. சுந்தரம் இரண்டாவது மனைவி மீது பாசம் காட்டத் தயங்குகிறான். முதல் மனைவி கற்பகம் ஞாபகத்திலேயே வாழுகின்றான். அவளது மாமனாரும், புதிய மனைவியும், இறந்துபோன கற்பகமும் சேர்ந்து எப்படி, அவனை மாற்றி நல்ல வாழ்க்கையை வாழத் தொடங்குவதற்கு எப்படி உதவுகிறார்கள் என்பதுதான் மீது கதை.

இத்தகைய உணர்ச்சிகரமான கதையைக் கொண்ட இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. லாபத்தைத் தரக்கூடிய வியாபார இயக்குநர்களில் முதன்மையான இயக்குநராக விளங்கினார் கே.எஸ்.ஜி.

இது 'கற்பகம்' படத்தின் அனைவருக்கும் தெரிந்த கதையாகும். இதற்கும் ஒரு பின்னணிக் கதையிருக்கிறது. 'கற்பகம்' படத்தின் கதை வசனத்தை முழுமையாக எழுதி முடித்ததும் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு யோசனை தோன்றியது, இல்லை இல்லை ஒரு ஆசை ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் ஜெமினி கணேசன் நடித்த சுந்தரம் கதாபாத்திரத்தில் முதலில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். அவரை நேரில் சந்தித்து இந்தப் படத்தின் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துவிட்டது. சுந்தரம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சம்மதித்துவிட்டார். ஆனால் ஒரு கண்டிஷன் போட்டார். நல்லசிவம் என்ற மாமனார் கேரக்டருக்கு டி.எஸ்.பாலையாவைப் போட வேண்டும். அப்படி இருந்தால் இந்தப் படத்தில் நடிப்பதற்கு பரிபூரணமாக சம்மதிப்பேன் என்றார் எம்.ஜி.ஆர்.

டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒத்துக்கொண்டார். ஆனால் வீட்டிற்கு வந்ததும் அவருக்கு வேறொரு யோசனை தோன்றியது. நல்லசிவம் என்ற மாமனார் கேரட்கரில் டி.எஸ்.பாலையாவை விட எஸ்.வி.ரங்காராவ் மிகப்பொருத்தமாக இருப்பார். அவரையே நடிக்க வைத்தால்தான் படத்திற்கும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்னனைப் பொறுத்த வரை டி.எஸ்.பாலையாவின் நடிப்பின் மீதும், எஸ்.வி.ரங்காராவ் நடிப்பின் மீதும் பெரிய நம்பிக்கை கொண்டவர். அதேசமயம் டி.எஸ்.பாலையா நடிக்கக் கூடிய பாத்திரங்கள் என்றும் எஸ்.வி.ரங்காராவ் நடிக்கக்கூடிய பாத்திரங்கள் என்றும் சில இருக்கின்றன என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

டி.எஸ்.பாலையாவின் நடிப்பின் மீது கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு பெரிய நம்பிக்கை உண்டு என்பதனால்தான் 'என்னதான் முடிவு' போன்ற படங்களில் எல்லாம் பாலையாவுக்கு மிக முக்கியத்துவம் தந்து எடுத்திருந்தார். ஆனால் கற்பகத்தில் வரும் நல்லசிவம் பாத்திரம் எஸ்.வி.ரங்காராவுக்குத்தான் சரியாக இருக்கும் என படத்தின் கதாசிரியரும், இயக்குநருமாய் இருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உறுதியாக நம்பினார். அதனால் தனது கருத்தை வற்புறுத்தினார். ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை பாலையாவிடம் அந்த படத்தில் நடிக்க வேண்டும் எனப் பேசிவிட்ட பிறகு அவரை மாற்ற நினைப்பது சரி எனப்படவில்லை. அதனாலேயே தானும் அந்தப் படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

இப்படி அவர் விலகிக்கொண்டதற்கு இன்னொரு ஃபிளாஷ்பேக் கதையும் ஒன்று உண்டு.
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த 'மோகினி' படத்தில் இரண்டு கதாநாயகர்களாக நடிப்பதற்கு பேசப்பட்டவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், டி.எஸ்.பாலையாவும்தான். முதலில் எம்.ஜி.ஆர். வேடத்தில் டி.எஸ்.பாலையாவும், பாலையா வேடத்தில் எம்.ஜி.ஆரும் நடிப்பதாக இருந்தது. அதை எம்.ஜி.ஆர். தான் அவரிடம் பேசி நீங்கள் நடிக்கும் வேடத்தில் நான் நடிக்கிறேன். என் வேடத்தில் நீங்கள் நடியுங்களேன் எனது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். பாலையாவும் மறுக்காமல் மாற்றி நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். அதனால் எம்.ஜி.ஆர். அந்தப் படத்தில் கதாநாயகன் போல் தோன்றினார். பாலையா இரண்டாவது கதாபாத்திரமாகத் தெரிந்தார்.

டி.எஸ்.பாலையாவுக்கு பதிலாக தான் நினைத்தபடியே எஸ்.வி.ரங்காராவையே நடிக்க வைத்தார். படமும் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமானது. எம்.ஜி.ஆர்.அந்தப் படத்தில் நடிக்காமல் போனது ஒரு இழப்புதான் என்பதை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தன்னைச் சந்திக்கும் நெருக்கமான நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார். ரங்காராவ்தான் மிகவும் பொருத்தமானவர். அதில் எனக்கு இன்று வரையிலம் மாற்றுக் கருத்தில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

- தொடரும்..

English summary
25th chapter of Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil