twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை- 3: சிவாஜியின் இயக்குநருக்கு கை கொடுத்த எம்.ஜி.ஆர்.!

    By Peru Thulasi Palanivel
    |

    -பெரு துளசிபழனிவேல்

    டைரக்டர் பி.ஆர்.பந்துலு தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் சிலபடங்களை எடுத்து நஷ்டமடைந்திருந்த காலகட்டம் அது.

    அடுத்து சிறிய பட்ஜெட்டில் ( 5லட்சம்) ஒரு கருப்பு வெள்ளை படத்தை எடுத்து தனது அலுவலகத்தை நடத்தவும், சிறிய கடன்களை அடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.

    தனது குழுவினரைஅழைத்து விருப்பத்தை தெரிவித்தார். அவர்களும் அதற்கேற்ற வகையில் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    அன்று ‘பாதை தெரியுதுபார்' (ஜெயகாந்தனின் படம்) படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜயன் (பின்னாளில் இவர் டைரக்டர் கே.விஜயனாக பிரலபலமானார்) அல்லது சிட்டாடல் நிறுவனம் தயாரித்த ‘இரவும் பகலும்' படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமான நடிகர் ஜெய்சங்கர் இவர்களில் யாராவது ஒருவரை கதாநாயகனாகநடிக்க வைத்து படத்தை எடுப்பது என்று முடிவு செய்தனர்.

    அதற்காகறி Pirates (கடற்கொள்ளைக்காரர்கள்) என்ற ஆங்கில நாவலை தேர்வு செய்து வசனகர்த்தா ஆர்.கே.கண்முகம் மூலம் திரைக்கதையை உருவாக்கினார்கள். இந்தப் படத்தை தயாரிப்பதற்கு பைனான்ஸ் முதலில் ரெடி பண்ண வேண்டும் என்பதற்காக தனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த வீனஸ்பிக்சர்ஸ் (கிருஷ்ணமூர்த்தி கோவிந்தராஜ்) குழுவினரை போய்ச் சந்தித்தார் பி.ஆர். பந்துலு.

    Nenjam Marappathillai -3

    அவர்களும் பைனான்ஸ் கொடுக்க முன்வந்தார்கள். தொடர்ந்து பலபடங்களை எடுத்து வந்த வீனஸ் பிக்சர்ஸ் தற்காலிகமாக படங்கள் எடுப்பதை நிறுத்தி வைத்திருந்தது (பின்னாளில் எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா நடித்த ‘என் அண்ணன்' படத்தை தயாரித்தார்கள்).

    இடைப்பட்ட காலங்களில் சிறிய படங்களுக்கு பைனான்ஸ் உதவி செய்து வந்தார்கள். அப்படித்தான் டைரக்டர் பி.ஆர்.பந்துலு எடுக்கவிருந்த படத்திற்கும் பைனான்ஸ் கொடுகக ஒப்புக் கொண்டார்கள்.

    டைரக்டர்.பி.ஆர்.பந்துலு எடுக்கப் போகும் படத்திற்கான Pirates கதையை அவர்களிடம் சொன்னார். கதையைக் கேட்ட வீனஸ் பிக்சர்ஸ் குழுவினர் இந்தப் படத்தை யாரை கதாநாயகனாகப் போட்டு எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு பி.ஆர்.பந்துலு, "பாதை தொயுது பார்' விஜயன், அல்லது ‘இரவும் பகலும்' ஜெய்சங்கர் இவர்கள் இருவரில் யாரயாவது ஒருவரை ஹீரோவாக போடலாம்னு இருக்கோம்," என்று சொல்லிமுடிப்பதற்குள்..

    "இல்ல....இல்ல.... இந்தக் கதையை பட்ஜெட்டில் எடுத்து முடிக்க முடியாது. இதில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர் அவர்கள்தான் நடிக்க வேண்டும். அவர் நடித்தால்தான் நீங்கள் போடுகின்ற முதல், நாங்கள் தருகின்ற பைனான்ஸ் எல்லாம் திரும்பி வரும். படத்தையும் நல்லபடியாக வியாபாரம் பண்ணி விடலாம்.யோசித்துச் சொல்லுங்க", என்று வீனஸ் பிக்சர்ஸ் குழுவினர் சொன்னதும் பி.ஆர்.பந்துலு கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென்று சரி என்று சொல்லிவிட்டார்.

    "இந்த படத்திற்கு பட்ஜெட் பெரிதாக வரும்.. பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் வியாபாரத்திற்கு கியாரண்டி இருக்கும் போது ஏன் பயப்பட வேண்டும். நீங்களே எம்.ஜி.ஆர். அவர்களிடம் பேசி முடிவு பண்ணுங்களேன். எம்.ஜி.ஆர் கதாநயாகனாக நடிக்கட்டும்," என்று கால்ஷீட் கேட்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்தார் பி.ஆர்.பந்துலு.

    அதுவரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்' ‘கப்பலோட்டிய தமிழன்', ‘கர்ணன்', ‘முரடன் முத்து', ‘பலே பாண்டியா' போன்ற படங்களை எடுத்த பி.ஆர்.பந்துலு இப்போது எம்.ஜி.ஆர்.அவர்களை நடிக்க வைத்து படத்தை எடுக்க முன் வந்திருக்கிறார் என்றச் செய்தி வீனஸ் பிக்சர்ஸ் குழுவினர் மூலம் எம்.ஜி.ஆர்.காதுகளுக்கு எட்டியது. எம்.ஜி.ஆர்.எந்த மறுப்பும் சொல்லாமல் படம் நடிக்க ஒப்புக் கொண்டார். பி.ஆர்.பந்துலுவையும் அவரது குழுவினரையும் நேரில் வரவழைத்துப் பேசினார்.

    Nenjam Marappathillai -3

    அவர்களும் ரெடிப்பண்ணி வைத்திருந்த Pirates கதையைச் சொன்னார்கள். அதில் முக்கியமான சில மாற்றங்களைச் சொன்னார் எம்.ஜி.ஆர். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

    பி.ஆர்.பந்துலு குழுவினரில் சிலர் மாற்றப்பட்டார்கள். வசனத்தை ஆர்.கே.கண்முகத்தையே எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் & ராமமூர்த்தி படத்திற்கு இசைமைப்பாளரானார்கள். ஒளிப்பதிவாளரும் மாற்றப்பட்டார். பாடல்களை கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலி எழுதினார்கள்.

    இந்தப்படத்திற்கு 'ஆயிரத்தில் ஒருவன்' என்று பெயர் சூட்டினார்கள். படப்பிடிப்பு முழுவதும் கோவாவில் நடந்தது. பாடல் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர். ஐடியாபடி ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை' என்ற பாடலை கவிஞர் வாலியை வைத்து எழுதி கடைசியாகப் படமாக்கி படத்தில் சேர்த்தார்கள்.

    இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஜோடியாக செல்வி ஜெயலலிதா நடித்தார். எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படம் ஆயிரத்தில் ஒருவன்தான். இரட்டையர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசிப் படமும் இதுதான்.

    ‘ஆயிரத்தில் ஒருவன்' (1965) படம் அழகாக எடுக்கப்பட்டு வெளிவந்து பி.ஆர்.பந்துலு போட்ட முதலை விட இரண்டு மடங்கு லாபத்தைத் கொடுத்தது. அவரது அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தது இந்தப் படம்!

    2014-மறு வெளியீடாக வந்த ஆயிரத்தில் ஒருவன் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழாக் கொண்டாடியது இன்னுமொரு சாதனை!

    English summary
    The 3rd Chapter of Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai cinema series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X