»   »  நெஞ்சம் மறப்பதில்லை- 6: எல்லோரையும் கவர்ந்த எஸ்.வி.ரங்காராவ்!

நெஞ்சம் மறப்பதில்லை- 6: எல்லோரையும் கவர்ந்த எஸ்.வி.ரங்காராவ்!

Subscribe to Oneindia Tamil

-பெரு துளசிபழனிவேல்

‘‘முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பிபிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்கள்ஒண்ணாக''

-‘அன்புச் சகோதரர்கள்' படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலை பாடி நடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தளவிற்கு பாசமானஅண்ணனாக அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்.

இவர் திரைப்படங்களில் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அத்தனையும் மனித வாழ்க்கையில் மறக்க முடியாத ஒதுக்க முடியாத உன்னத உறவுகளை கொண்டதாக இருக்கும். நல்லகணவன், பாசமான அண்ணன், அன்பான அப்பா, மறக்க முடியாத மாமனார், கம்பீரமான தாத்தா, கௌரவமான போலீஸ் அதிகாரி, ஊர் போற்றும் மனிதர், கொடூரமான வில்லன், மற்றும் மந்திரவாதி, புராண, இதிகாச கதாபாத்திரங்கள் என்று அத்தனை வேடங்களையும் ஏற்று சிறப்பாக நடித்தார்.

Nenjam Marappathillai - 6

இவருக்காக பல கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. சில கதாபாத்திரங்கள் இவர் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என இவரைத் தேடி வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட உன்னத கலைஞர் சிறந்த குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ்.

இவர் தமிழ், தெலுங்கு என்று இருநூறுக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அத்ததனைப் படங்களும் பிரபலமான சூப்பர் ஹிட்டான படங்களாகும். விஜயா வாஹினி தயாரித்த ‘பாதாள பைரவி' (1951) படம்தான் எஸ்.வி.ரங்காராவ் நடித்து அறிமுகமான முதல் தமிழ்ப் படம். இதில் மந்திரவாதியாக வேடமேற்று நடித்தார்.

‘மாயாபஜார்' படத்தில் கடோத்கஜனாக காமெடி கலந்த வேடத்தில் நடித்தார். ‘சம்பூர்ண இராமாயணம்' படத்தில் இராவணனாக நடித்தார். ‘மிஸ்ஸியம்மா' படத்தில் வாடகைக்கு வருபவர்களிடமும் பாசம் காட்டும் வீட்டு உரிமையாளர் வேடத்தில் நடித்தார். ‘கற்பகம்' படத்தில் அப்பாவாகவும், நல்ல மாமனாராகவும் இருமாறுபட்ட தோற்றத்தில் நடித்தார்.

நானும் ஒரு பெண் படத்தில் கருமைநிறம் கொண்ட மருமகளை வெறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் தவிக்கும் நல்ல மாமனாராக நடித்தார். ‘கைகொடுத்த தெய்வம்' படத்தில் வெகுளிப்பெண் (சாவித்ரி)யை பெற்றெடுத்துவிட்டு அவஸ்தைப்படும் தந்தையாக நடித்திருந்தார். ‘அன்னை' படத்தில் நடிப்பின் இலக்கணம் பி.பானுமதிக்கு ஜோடியாக நடித்தார்.

Nenjam Marappathillai - 6

‘எங்கள்வீட்டுப் பிள்ளை' படத்தில் எம்.ஜி.ஆரின் மாமனாராக நடித்தார். ‘படிக்காத மேதை' படத்தில் உலகம் தெரியாத ஒரு அப்பாவி மனிதனுக்கு அன்பைக் காட்டும் மாமாவாக நடித்தார். ‘நீதிக்குப்பின் பாசம்' படத்தில் கௌரவமான உயர் போலீஸ் அதிகாரியாகவும், பிள்ளைகளுக்கு பிரியமான தந்தையாகவும், மனைவிக்கு அன்பான கணவனாகவும், வேறுபாடுகளைக் காட்டி நடித்தார். ‘கண் கண்ட தெய்வம்' படத்தில் தன்னைச் சார்ந்து வாழும் அன்பான தம்பிக்கு நல்ல அண்ணனாகவும், அவரது குடும்பத்திற்கு பாதுகாவலராகவும் நடித்திருந்தார்.

‘அன்னை இல்லம்' படத்தில் சிவாஜிக்கு தந்தையாகவும், மனைவி எம்.வி.ராஜம்மாவிற்கு நல்ல கணவராகவும் நடித்திருந்தார். விஜயா சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர்.நடித்த ‘நம்நாடு' படத்தில் எம்.ஜி.ஆருடன் மோதும் வில்லனாகவும், ‘ராஜா' படத்தில் கொடூரமான வில்லனாக சிவாஜியுடன் மோதுபவராகவும் நடித்திருந்தார். இப்படி பலபடங்களில் பல்வேறு விதமான வேடங்களை ஏற்று தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றார் எஸ்.வி.ரங்காராவ்.

டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷணன் தனது படத்தில் எஸ்.வி. ரங்கராவ் தான் நடிக்க வேண்டும் என்பதற்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்கவிருந்த ஒரு பெரியபடத்தை இயக்குகின்ற வாய்ப்பையே இழந்தார்.

Nenjam Marappathillai - 6

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களும், டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களும் தொடர்ந்து தங்களது படங்களை வெற்றிப் படங்களாக்கி வெற்றி வலம் வந்து கொண்டிருந்த காலகட்டமது.

இருவரும் இணைந்து ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டுமென்று விரும்பினார்கள். எம்.ஜி.ஆர். அவர்களும் கதை கேட்டார். அதற்காக அப்போது ரெடி பண்ணி வைத்திருந்த ‘கற்பகம்' படத்தின் கதையைப் போய் சொன்னார் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். எம்.ஜி.ஆரும் முழுமையாக கதையை கேட்டுவிட்டு நடிக்கச் சம்மதித்தார். அதன்பிறகு மற்ற கேரக்டர்களில் யார்? யார்? நடிப்பது என்று கலந்து பேசினார்கள். அப்போது டைரக்டர் கே.எஸ்.ஜி. ‘கற்பகம்' படத்தில் வரும் மாமனார் கேரக்டரில் நடிகர் எஸ்.வி.ரங்காராவை நடிக்க வைக்கப் போவதாகச் சொன்னார். அதற்கு எம்.ஜி.ஆர்.அவர்கள் மற்ற கேரக்டர்களுக்கு உங்கள் விருப்பபடி யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் மாமனார் கேரக்டரில் டி.எஸ்.பாலையா மட்டும் நடிக்கட்டும் என்றார்.

அதற்கு கே.எஸ்.ஜி. யோசித்து சொல்வதாக வீட்டிற்கு வந்துவிட்டார். வந்த சில நாட்கள் யோசித்துவிட்டு இந்த மாமனார் கேரக்டருக்கு எஸ்.வி.ரங்காராவ்தான் பொருத்தமாக இருப்பார் என்னை மன்னித்துவிடுங்கள் என்றார் டைரக்டர். எம்.ஜி.ஆரும் நீங்களும் என்னை மன்னித்துவிடுங்கள் இந்தப் படத்திற்கு வேறு யாரையாவது கதாநாயகனாகப் போட்டு படத்தை எடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

அதனால்தான் ‘கற்பகம்' படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர்.அவர்கள் டி.எஸ்.பாலையாவை சிபாரிசு செய்ததற்கு காரணம், ஆரம்ப காலத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு படத்தில் டி.எஸ்.பாலையாவும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அப்போது பாலையா அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடிக்கட்டும், நானும் மற்றொரு கேரக்டரில் இணைந்து நடிக்கிறேன் என்று எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்கு நன்றிகடன் செலுத்தும் விதமாகத்தான் அவரை சிபாரிசு செய்திருக்கிறார் என்பது பின்னாளில் தெரிய வந்தது.

நடிகர் எஸ்.வி.ரங்காராவ் 3.07.1918 ஆம் ஆண்டு எஸ்.கோட்டீஸ்வரராவ் - நரசம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ஆந்திராவிலுள்ள நுஜ்வித் என்ற கிராமம் தான் இவருடைய பிறப்பிடமாகும். இவருடன் உடன் பிறந்தவர்கள் ஆண்கள், பெண்கள் என்று 11 பேர். மனைவி பெயர் லீலாவதி தேவி, மகன் (அமரர்) கோட்டீஸ்வரராவ், மகள்கள் விஜயலட்சுமி, பிரமிளாதேவி. இருவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பி.எஸ்.ஸி.பட்டப்படிப்பை முடித்ததும் காக்கி நாடாவிலுள்ள யங்மேனஸ் ஹேப்பி கிளப்பில் சேர்ந்து தெலுங்கு மொழி, வசன உச்சரிப்பு, குச்சுபிடி நடனம், நாட்டியம், நாடக நடிப்பு ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார்.

இந்தப் பாசறையில் சேர்ந்து பயிற்சி பெற்று வெளிவந்து. பின்னாளில் புகழ் பெற்றவர்கள் அஞ்சலிதேவி, இயக்குனர் பி.புல்லையா, இசையமைப்பாளர் ஆதி நாராயணராவ்.

எஸ்.வி.ரங்காராவ் படிக்கின்ற காலத்தில் ஆசிரியர்கள், நிர்வாகத்தினரிடமிருந்து ஒழுக்கமான மாணவர் என்று நற்சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

இவர் ‘சதுரங்கம்', பாந்தவியா' (தமிழில் வெளிவந்த கண்கண்ட தெய்வம்) போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

எஸ்.வி. ரங்காராவ் அவர்கள் சினிமா ஆசையில் சென்னை வந்தபோது ஜெமினி ஸ்டுடியோவிற்கு போய் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஆர். கணேஷ் (இவர் பின்னாளில் ஜெமினிகணேசன் என்று பெயர் மாற்றிக் கொண்டார்) என்பவரிடம் தான் முதன் முதலில் வாய்ப்பு கேட்டிருக்கிறார். எந்த வாய்ப்பும் இப்போது இல்லை என்று திருப்பி அனுப்பியிருக்கிறார். எஸ்.வி. ரங்காராவ், திருவேலிக்கேணி, தியாகராயர் நகரில் (அபிபுல்லா ரோடு) தான் தனது இறுதிக் காலத்தில் குடும்பதாருடன் குடியிருந்திருக்கிறார்.

1946ஆம் ஆண்டு ‘விருதினி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகரானார் எஸ்.வி.ரங்காராவ். அவர் கடைசியாக நடித்த படம் சிவாஜி நடித்த ‘சிவகாமியின் செல்வன்' (1974) சுமார் 28 ஆண்டுகள் திரைப்படத் துறையில் தனது கலைப்ப பயணத்தை தொடர்ந்த ரங்காராவ் 18.07.1987 ஆம் ஆண்டு காலமானார். அதாவது அவர் பிறந்ததும் மறைந்ததும் இதே ஜூலை மாதத்தில்தான்!

English summary
6th episode of Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai cinema series.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more