»   »  நெஞ்சம் மறப்பதில்லை- 7: நாடறிந்த நடிகவேள் எம்.ஆர். ராதா!

நெஞ்சம் மறப்பதில்லை- 7: நாடறிந்த நடிகவேள் எம்.ஆர். ராதா!

Subscribe to Oneindia Tamil

-பெரு துளசிபழனிவேல்

"நான் எப்படி சமுதாயத்தில் மாறுதல் எண்ணமும், புரட்சிக் கருத்துக்களும் கொண்டு பாடுபட்டு வருகின்றேனோ அப்படியே ராதா அவர்களும் நமது கருத்துக்களை நாடகங்களின் மூலம் விடாப்பிடியாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருபவர்.

நாட்டில் எல்லா கலைஞர்களும் ரசிகர்கள் பின் செல்லுபவர்கள். அவவர்கள் மனம் திருப்பதிபடும்படி எல்லாம் நடத்துக் கொள்ள முற்படுவார்கள். நண்பர் ராதா அப்படிப்பட்ட கலைஞர் அல்ல.

Nenjam Marappathillai 7

தாம், ரசிகர் பின் சொல்லாமல் ரசிகர்கள் தம் பின்னால் வரவேண்டும், தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று விரும்புபவர். மக்கள் தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முற்பபட்டாலும் முற்படாவிட்டாலும் தமது கருத்தை வலியுறுத்தி எடுத்துச் சொல்லத் தவறுவதேயில்லை. கலைத் துறையில் மூடநம்பிக்கை இல்லாமல் கூடுமானவரை மக்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லி இந்த அளவுவக்கு மாற்றம் செய்யும் துணிவு ராதாவைத் தவிர மற்றவர்களுக்கு வராது. மற்ற நடிகர்கள் பத்திரிகையாளர்கள் தயவில் விளம்பரம் பெற்று காசு சம்பாதிக்கிறார்கள். சுயமரியாதை கருத்துக்களை எடுத்துச் சொன்னதால் ராதா ஒழிந்து விடவில்லை. வாழ முடியாமல் போனதுமில்லை. ஆகவே மற்றவர்கள் திருந்தி அவரைப் பாராட்ட வேண்டும். ராதா வாழ்க, ராதா போல மற்றவர்களுக்கும் புத்தி வரட்டும்!"

-நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களைப் பற்றி பகுத்தறிவு பகலவன் தந்தை ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் பாராட்டியதன் தொகுப்புதான் மேலெழுந்த வாரியாக நீங்கள் படித்தது.

அதேபோல் பேரறிஞர் அண்ணா அவர்களும் எம்.ஆர்.ராதா அவர்களைப் பாராட்டிப் பேசினார். "தனக்கு ஏற்படுகின்ற சரிவுகளையோ, இழப்புகளையோ, எதிர்ப்புகளையோ பொருட்படுத்தாமல் கலகக் குரலாக தன்னை வெளிப்படுத்தியதுதான் நடிகவேள் எம்.ஆர்.ராதாரவின் தனிஅடையாளம். இந்தத் தாழ்ந்த தமிழகத்தைத் தலை தூக்கி நிறுத்த நூறு திராவிடர் கழக மாநாடுகள் நடத்தினால் மட்டும் போதாது. எம்.ஆர்.ராதாவின் நாடகம் ஒன்று மட்டும் நடத்தினால் போதும் மக்களிடையே மாற்றம் ஏற்படும்," என்று எம்.ஆர்.ராதாவை உயர்த்திப் பேசினார்.

எம்.ஆர்.ராதா அவர்களைப் பற்றி சினிமாகாரர்கள், பத்திரிகையாளர்கள், புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர்கள் என்னதான் சொல்லியிருகின்றார்கள் என்பதையும் பார்ப்போமே.

தமிழ்த்திரையுலகின் தனித்துவமான பெயர் எம்.ஆர்.ராதா. தங்களுடைய முன்னேற்றத்திற்கும் சிலரை வழிகாட்டிகளாகச் சொல்லிக் கொண்டே இருந்த காலகட்டத்தில் திரையுலகில் தனக்கான வழியைத் தானே தேடிக் கொண்ட அபூர்வமான மனிதர். ஐம்பதுகளை ஒட்டித் தமிழ் சினிமாவில் இவர் நுழைந்தாலும் சினிமாவுலகில் தன்னுடைய சில கருத்துக்களை அவருக்கே உரித்தான அலட்சியபாவத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது முகத் தோற்றமும் அதில் மாறும் விதவிதமான முக பாவங்களும் சட்டென்று ஏறியிறங்கும் கரகரத்த குரலும் வளைந்து நெளிந்த உடல்மொழியும் அவருக்கான தனிஅடையாளமாக இருந்தாலும் அவர் உச்சரித்த சினிமா வசனங்கள் அவரை வித்தியாசப்படுத்தி கவனிக்க வைத்தது.

Nenjam Marappathillai 7

தான் நடித்த படங்களின் வசனங்களை பிறரைப் படிக்கச் சொல்லிக் கேட்டு உள்வாங்கிக் கொண்டு தன்னுடைய பாணியில் அதற்கு மெருகேற்றி அந்த வசனத்தை உச்சரிப்பது ராதாவுடைய தனிச்சிறப்பு.

ராதாவின் தனித்த குணம் தன் மனதில் தோன்றுவதை அதன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த நேரத்தின் உணர்வோடு பேசிவிடுவது. அந்தக் குணம்தான் ராதாவைப்பற்றிய முரட்டுத் தோற்றத்தை மற்ற நடிகர்களிடம் உருவாக்கிவிட்டது. அதனால் சிலநடிகர்கள் இணைந்து நடிக்கவோ, நெருங்கி பேசவோ தயங்கினார்கள்...

-இப்படித்தான் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் எம்ஆர் ராதா எழுதப்பட்டார், பேசப்பட்டார்.

வெள்ளைக்கார ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜகோபாலுக்கும் ராஜம்மாளுக்கும் இரண்டாவது செல்லமகனாக 14.04.1907 ஆண்டு மதராஸ் ராஜாகோபாலன் ராதா கிருஷ்ணன் என்கிற ராதாகிருஷ்ணன் பிறந்தார். பின்னர் இந்த நீண்ட பெயரைச் சுருக்கி எம்.ஆர்.ராதா என்று வைத்துக் கொண்டார்.

இளம் வயதிலேயே நாடக ஈடுபாடு கொண்டு நாடக நடிகராக வளரத் தொங்கினார். இவர் நடத்திய அத்தனை நாடகங்ககளும் பரபரப்பை ஏற்படுத்திய நாடகங்களாக இருந்தன. இவர் நடித்த ராஜசேகரன் என்ற நாடகத்தை மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சினிடோன் நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்தது. அதில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்து சினிமாவிலும் அறிமுகமானார், எம்.ஆர்.ராதா. ஆர்.பிரகாஷ் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். 1937 ஆம் ஆண்டு படம் வெளிவந்தத. படத்திற்கான போஸ்டர்களில் ஆங்கில நடிகர்களுக்கு இணையான தோரணையுடன் விளம்பரபடுத்தப்பட்டார். படப்பிடிப்பின் போது குதிரை மீதிருந்து விழுந்ததில் எம்.ஆர். ராதாவின் கால்முறிந்தது. படமும் எதிர்பார்த்த அளவிற்குப் போகவில்லை.

பிறகு உடம்பு தேறியபிறகு நண்பர்களுடன் இணைந்து ‘பம்பாய் மெயில்' என்ற படத்தைத் தயாரித்தார். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த ‘சந்தனத் தேவன்', ‘சத்யவாணி', ‘சோகமேளா' படங்களில் நடித்தார். படங்களும் வெளியாகி சுமாராக போயின.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பராசக்தி படத்தை ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் அன்று வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருந்த ‘ரத்தக் கண்ணீர்' நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தார். எம்.ஆர்.ராதாவும் சில நிபந்தனைகளுடன் நடிக்கச் சம்மதித்தார்.

Nenjam Marappathillai 7

‘ரத்தக் கண்ணீர்' படத்தில் நடிப்பதற்கு அந்தக் காலத்தில் அதிகபட்ச சம்பளமாக ஒன்றைகால் லட்ச ரூபாய் கேட்டார் எம்.ஆர்.ராதா. அவரும் ஒப்புக் கொண்டார். படமும் எடுக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு நவம்பர் தீபாவளியன்று வெளியிடப்பட்டது. ‘ரத்தக் கண்ணீர்' படம் எம்.ஆர்.ராதா அவர்களின் நடிப்புத் திறமை அழுத்தமாக நிலைநிறுத்தும் படமாகவும், அப்போது நிலவிய மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் பாடமாகவும் அமைந்தது.

மீண்டும் சிறு இடைவெளியுடன் ‘நல்ல இடத்து சம்பந்தம்', ‘தாமரைக் குளம்', ‘உலகம் சிரிக்கிறது' படங்களில் நடித்தார். 1959ல் வெளிவந்த ‘பாகப் பிரிவினை' படம்தான் எம்.ஆர். ராதாவை முக்கியமான நடிகராக்கியது. 1961 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாவமன்னிப்பு', ‘பலேபாண்டியா', ‘பாலும் பழமும்', ‘குமுதம்' என்று பல படங்களில் ராதாவின் நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக்கியது.

1962ல் எம்.ஆர்.ராதா நடித்த 22 படங்கள் வெளிவந்தன.இதிலிருந்து தமிழ் சினிமாவில் எம்.ஆர் ராதா எவ்வளவு வேகமாக இயங்கிக் கொண்டிருந்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெமினிகணேசன் என்றுபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். ‘தாயைக் காத்த தனையன்', ‘பார் மகளே பார்', ‘சாரதா', ‘கைராசி' போன்ற படங்களில் குறுகிய காலத்தில் 1966 ஆம் ஆண்டுக்குள் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 114.

‘தர்மம் தலைகாக்கும்', ‘நல்லவன் வாழ்வான்', ‘கவலைஇல்லாதமனிதன்', ‘கற்பகம்', ‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்', ‘சித்தி', ‘சாந்தி', ‘நானும் ஒரு பெண்', ‘புதிய பறவை', ‘பெரியஇடத்துப் பெண்', ‘பணம் பந்தியிலே' இப்படி பல படங்கள் ஓய்வின்றி நடித்தார்.

இறுதிக் காலகட்டத்தில் ‘கந்தர் அலங்காரம்', ‘தசாவதாரம்' போன்ற பக்திப் படங்களிலும் நடித்தார் .அவர் இறுதியாக நடித்த படம் ‘பஞ்சபூதம்'.

இறுதிகாலத்தில் கலைவாணர் என்.எஸ்.கே., எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு ஒடோடி போய் உதவியிருக்கிறார். மற்றும் டி.ஆர்.மகாலிங்கம் நாதஸ்வரவித்வான் ராஜரத்னம் பிள்ளை, பிரபல வசனகர்த்தா இளங்கோவன் ஆகியோருக்கும் தானே முன்வந்து உதவி செய்திருக்கிறார் எம்.ஆர். ராதா.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தொடர்ந்து நாடகங்களிலும் நடித்தார். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி உறையூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் 1979 ஆம் ஆண்டு செப்டம்பார் மாதம் 17ந் தேதி காலை 7 மணியளவில் காலமானார். அந்தநாள் தந்தை ஈ.வெ.ரா.பெரியாரின் பிறந்த நாளாகாவும் இருந்தது.

அவர் மறைந்த போது வயது 67 நடிகவேள் எம்.ஆர். ராதாவின் முதல் மனைவி சரஸ்வதி அம்மாள். இவர்களுக்குப் பிறந்த மகன்தான் மறைந்த எம்.ஆர்.ஆர்.வாசு. சரஸ்வதியம்மாளின் தங்கையையும் எம்.ஆர்.ராதாவே மணந்துக் கொண்டார். அவரது பெயர் தனலட்சுமி. அவருக்கு பிறந்த பிள்ளைகள், ராதாரவி, ரஷ்யா, ராணி, ரதிகலா. மூன்றாவதாக மதுரையில் பிறந்து இலங்கையில் வளர்ந்த கீதா, பி.எல் படிக்க சென்னை வந்த போது அவரைப் பார்த்து காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ராதிகா உட்பட நான்கு பிள்ளைகள் பிறந்தனர்.

எம்ஆர் ராதா வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது அந்த துப்பாக்கிச் சூடு சம்பவம். எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா இணைந்து நடித்த ‘பெற்றால்தான் பிள்ளையா' படம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும்போது 12.1.1967 அன்று சென்னை ராமாவரம் தோட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்தது.

எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் அடுத்தடுத்து மருத்துவமனையில் குண்டடிப்பட்டு சேர்க்கப்பட்டனர். இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் இந்த அசம்பாவிதம் நடந்ததாக பத்திரிகை செய்திகள் கூறின.

எம்.ஜி.ஆரைச் சுட்டதற்காக எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு நடந்தது. ஏழு ஆண்டுகள் என்று தீர்ப்பு வந்தாலும் நாலரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு எம்.ஆர். ராதா விடுதலை செய்யப்பட்டார்.

எம்.ஆர்.ராதா அவர்கள், தான் நடத்திய நாடகங்களில் அன்றைய காலகட்டங்களில் நிகழ்ந்துக் கொண்டிருந்த மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்துக் காட்சிகளை உருவாக்கினார். வசனமும் அதற்கேற்றாற்போல் சீறிப் பாய்ந்தது. இதனால் எம்.ஆர்.ராதா நாடகங்களை நடக்கவிடாமல் தடுப்பதற்காக நாடகத் தடைச் சட்டம் உருவாக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் மட்டும் 52 முறை கைது செய்யப்பட்டார் எம்.ஆர்.ராதா என்பது வரலாற்றுப் பதிவு!

English summary
The 7th episode of Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai series.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil