»   »  நடிகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

நடிகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Subscribe to Oneindia Tamil

படத் தயாரிப்பின் செலவைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் நடிகர், நடிகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளின்படி படப்பிடிப்பின்போது நடிகர், நடிகைகள் செல்போனில் பேசக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உள்ளூர் படப்பிடிப்பின்போது கேரவன் வசதியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவை கூட்டாக இணைந்து நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சூட்டிங் ஸ்பாட்டில் செல்போன்களை பயன்படுத்துவதால் படப்பிடிப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட தயாரிப்பு சம்பந்தப்பட்ட பணிகளின்போது, செல்போன்களை பயன்படுத்தக் கூடாது.

நடிகர், நடிகைகளுடன் ஒப்பந்தம் போட்ட தயாரிப்பாளர் எந்த காரணத்திலாவது படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனால், ஒப்பந்த வரிசையில் அடுத்து உள்ள தயாரிப்பாளர்களின் படப்பிடிப்புக்கு நடிகர், நடிகைகள் முன்னுரிமை தர வேண்டும்.

இந்த விஷயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை இரு சங்கங்களும் இணைந்து கலந்து பேசி, எந்த படத்தில் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும். இந்த முடிவே இறுதியானது.

படப்பிடிப்பு இரவு 9 மணிக்கு மேல் நீடிக்குமானால், அது குறித்து ஒரு நாளுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் தெரிவித்துவிட வேண்டும். எந்த காரணத்தினாலாவது படப்பிடிப்பு இரவு 2 மணிக்கு மேல் நீடித்தால், மறுநாள் காலையிலேயே மீண்டும் படப்பிடிப்புக்கு வரும்படி நடிகை, நடிகைகளை கட்டாயப்படுத்தக் கூடாது.

நடிகர், நடிகைகள் வெளியூர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது, வெளியூர் நடிகர், நடிகைகள் தமிழகத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வரும்போதும் அவர்கள் தங்குவதற்கு அதிகபட்சம் மூன்று நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டல்களில் மட்டுமே அறை ஒதுக்கித் தரப்படும். 5 நட்சத்திர ஹோட்டல் கிடையாது.

உள்ளூர் படப்பிடிப்புகளுக்கு தங்களது சொந்த காரில் வரும்போது பெட்ரோல், டிரைவர் பேட்டா ஆகிய எதையும் நடிகர், நடிகைகள் கேட்கக் கூடாது. சொந்த காரில் வராத நடிகர், நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் தான் போக்குவரத்து வசதியை செய்து தரவேண்டும்.

நடிகர், நடிகைகள் தங்களுக்கென்று தனியாக ஒப்பனைக் கலைஞர்கள், சிகையலங்கார கலைஞர்கள், உடையலங்காரக் கலைஞர்களை அமர்த்தினால் அவர்களுக்கான சம்பளம், பேட்டா ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் தான் வழங்க வேண்டும்.

வெளியூர் படப்பிடிப்பின்போது நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் வரும் பணியாளர்களுக்கு உணவு, இருப்பிடம், போக்குவரத்து வசதிகளை மட்டும் தயாரிப்பு நிறுவனம் ஏற்கும். மற்ற செலவுகளை ஏற்காது.

வெளியூர் படப்பிடிப்புகளின்போது விமானத்தில் செல்லும் நிலை ஏற்பட்டால் கதாநாயகன், கதாநாயகி ஆகிய இருவருக்கும் மட்டுமே எக்சிகியூட்டிவ் கிளாஸில் டிக்கெட் புக் செய்யப்படும். மற்றவர்களுக்கு பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் தான் தரப்படும்.

நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்யும்போது கால்ஷீட், ஊதியம், ஊதியம் வழங்கப்படும் முறை ஆகியவற்றை விவரமாக குறிப்பிட வேண்டும். டப்பிங்குக்கு முன்பே ஊதியத்தில் 70 சதவீதத்தை தயாரிப்பாளர் கொடுத்துவிட வேண்டும். மீதி 30 சதவீதத்தை பட வெளியீட்டுக்கு முன்பாகவோ அல்லது நடிகர்-நடிகைகள் தங்கள் பணியை முடித்துக் கொடுத்த 3 மாதத்திலோ முழுவதுமாக கொடுத்துவிட வேண்டும். இது ரூ. 5 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறும் நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

உள்ளூர் படப்பிடிப்பில் கேரவன் வாகனத்தை எக்காரணம் கொண்டும் தயாரிப்பாளரின் செலவில் நடிகை, நடிகர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது. அதை சொந்த செலவில் வைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் வெளிப்புற படப்பிடிப்பின்போது கேரவன் செலவை தயாரிப்பாளர் ஏற்க வேண்டும்.

இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil