»   »  கார்த்திகாவுக்கு டைபாய்டு!

கார்த்திகாவுக்கு டைபாய்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் கடவுள் நாயகி கார்த்திகாவுக்கு டைபாய்டு காய்ச்சல் வந்து விட்டது. இதனால் பெரியகுளத்திலிருந்து சென்னைக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறாராம்.

இது நடிகைகளுக்கு காய்ச்சல் வரும் வாரம் போல. முதலில் லஷ்மி ராய்க்கு காய்ச்சல் வந்து மயக்கமடித்து விழுந்து பின்னர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். பிறகு ஆசினுக்கு காய்ச்சல் வந்தது.

இந்த நிலையில், தற்போது பாலாவுக்கு டைபாய்டு வந்து ஓய்வெடுத்து வருகிறாராம்.

பாலாவின் நான் கடவுள் படத்திலிருந்து பாவனா தூக்கப்பட்டு விட்ட பின்னர் தற்போது அந்த இடத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் கார்த்திகா. சமீபத்தில் கார்த்திகாவை பிச்சைக்காரியாக மாற்றிய பாலா, பெரியகுளம் தெருக்களில் நிஜமாகவே பிச்சை எடுக்க வைத்து தத்ரூபமாக படமாக்கினார் பாலா.

வசூலும் செமையாக இருந்தது. பிச்சைத் தட்டில் 54 ரூபாயும், 25 காசும் சல்லிசாக விழுந்து நிஜப் பிச்சைக்காரிகளை பீட் செய்து விட்டார் கார்த்திகா.

நிஜமான பிச்சைக்காரியாகவே மாறி, பிச்சை எடுத்து அசத்தலாக நடித்த கார்த்திகாவைப் பார்த்த பாலா உள்பட பட யூனிட்டே வியந்து பாராட்டித் தள்ளியது. இதனால் சந்தோஷமாகிப் போன கார்த்திகா, படு ஈடுபாட்டோடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கார்த்திகாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பெரியகுளத்தில் வைத்து சிகிச்சை அளித்தனர். அப்படியும் காய்ச்சல் குறையாததால் உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார் பாலா.

சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகாவைப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டைபாய்டு வந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் வீடு திரும்பிய அவர் தற்போது முழு ஓய்வில் இருந்து வருகிறாராம். கார்த்திகாவுக்கு காய்ச்சல் வந்து விட்டதால், ஆர்யா மற்றும் பிறர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறாராம் பாலா.

அடுத்த வாரம் கார்த்திகா பெரியகுளம் திரும்பி விடுவாராம். பிறகு தொடர்ந்து பிச்சை எடுப்பாராம் அதாவது நடிப்பாராம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil