twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியவர் கமல்-அச்சுதானந்தன் புகழாரம்

    By Sudha
    |

    Kamal Felicitation
    திருவனந்தபுரம்: இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியதில் கமல்ஹாசனுக்கு பெரும் பங்கு உண்டு. அவருக்குப் பாராட்டு விழா நடத்துவதில் பெருமை அடைகிறோம் என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் அச்சுதானந்தன்.

    கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக வீடுகள் தோறும் அத்தப்பூ கோலமிடப்பட்டுள்ளது. முக்கிய நகரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    ஓணம் பண்டிகையை ஓட்டி ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் சுற்றுலா வாரவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவில் கமலஹாசனின் கலைச் சேவையை பாராட்டி அவர் கவுரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த சுற்றுலா வரா விழா நேற்று மாலை தொடங்கியது. இதில் கலந்து கொள்ள காலை 11 மணி அளவில் நடிகர் கமல் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.

    அவரை விமான நிலையத்தில் கேரள அரசு சார்பில் திருவனந்தபுரம் நகர மேயர் ஜெயன்பாபு, சிவன்குட்டி எம்எல்ஏ ஆகியோர் வரவேற்றனர். பெரும் திரளான ரசிகர்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், பாராட்டு விழா நடத்தும் கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன் என்றார் கமல்.

    பின்னர் சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் சுற்றுலா வாரவிழா நடந்தது. கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    முதல்வர் அச்சுதானந்தன் கமலுக்கு சால்வை அணிவித்து வரவேற்று பேசுகையில், கமல்ஹாசன் 50 ஆண்டுகளாக கலைத்துறையில் பெரும் சாதனை படைத்துள்ளார். சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்பை யாரும் மறக்க முடியாது. இந்திய சினிமாவை உலக தரத்துக்கு உயர்த்துவதில் கமல் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார் என்று பாராட்டினார்.

    விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், கேரளாவுக்கும், மலையாள சினிமாவுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். எனக்குள் இருந்த நடிகனை வெளிக் கொண்டு வந்தது, இன்று நான் இருக்கும் நிலை ஆகியவற்றுக்கு மலையாள சினிமாதான் காரணம்.

    பழம்பெரும் மலையாள இயக்குநரான கே.எஸ்.சேதுமாதவன்தான் எனக்குள் இருந்த நடிப்பை வெளிப்படுத்த உதவியவர். பின்னர் கே.பாலச்சந்தரால் நான் தத்தெடுக்கப்பட்டேன்.

    மலையாளிகளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதைச் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. அவர்கள்தான் எனது குறைகளைப் பொருட்படுத்தாமல் நான் ஒரு நல்ல நடிகனாக வளர உதவியவர்கள்.

    நாளை (இன்று) திருவனந்தபுரத்தில் கண்தான பிரசார இயக்கம் ஒன்றை நான் ஏற்பாடு செய்துள்ளேன். எனவே, எங்களுக்கு என்ன பதிலுக்கு செய்தாய் என்று இனிமேல் மலையாள மக்கள் கேட்க முடியாது.

    என் மீது மலையாளிகள் காட்டிய அன்பு, பாசம், ஆதரவுக்கு என்னாலான சிறிய கைமாறுதான் இந்த கண்தான இயக்கம் என்றார் கமல்ஹாசன்.

    நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு ஐந்தரை வயதாக இருந்தபோது அவரை மலையாள சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவரான இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவனும் வந்திருந்தார். மலையாளத் திரையுலகின் பலரும் பங்கேற்றனர். பல்வேறு திரை அமைப்புகள் சார்பில் கமல்ஹாசனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    சுவர்ண கமலம் என்ற பெயரில் கமல்ஹாசனைப் பாராட்டி ஒலி-ஒளிக் காட்சியும் நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது. இதை பிரபல இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கியிருந்தார். மிகவும் அழகாக இருந்த இந்த ஒலி-ஒளிக் காட்சி அனைவரையும் கவர்ந்தது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X