»   »  பத்மா விவகாரம்: சாமிக்கு 1 ஆண்டு தடை!

பத்மா விவகாரம்: சாமிக்கு 1 ஆண்டு தடை!

Subscribe to Oneindia Tamil


நடிகை பத்மப்ரியாவை படப்பிடிப்பின் போது அடித்த விவாகரம் தொடர்பாக மிருகம் பட இயக்குநர் சாமிக்கு 1 ஆண்டு தடை விதித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Click here for more images

மிருகம் படப்பிடிப்பின் தொடக்தத்திலிருந்தே இயக்குநர் சாமி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் பத்மப்ரியா கால்ஷீட் சொதப்பியதாக புகார் கூறப்பட்டது. பின்னர் கிளாமராக டிரஸ் போட மாட்டேன் என்று பத்மப்ரியா படப்பிடிப்பிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

இந்த நிலையில், மிருகம் படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகேயுள்ள குரண்டி என்கிற கிராமத்தில் நடந்தது. இந்த படத்தின் இறுதிக் காட்சிகளின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது நடிகை பத்மப்ரியா நடிக்கும் அழுகை காட்சியை இயக்குநர் சாமி படமாக்கும் போது, டேக் ஓ.கே ஆகவில்லையாம்.

பல டேக்குகளுக்கு மேல் போனதால் வெறுத்துபோன சாமி பத்மப்ரியாவின் கன்னத்தில் பளார் என்று அறை விட்டார்.

சாமியின் இந்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்த பத்மப்ரியா உடனே ஒரு ஆட்டோவில் ஏறி விமான நிலையம் சென்று சென்னைக்கு போய்விட்டார்.

பின்னர் சாமி மீது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் ஃபெப்சி ஆகியவற்றில் புகார் கொடுத்தார். மேலும், சாமி தனக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததாகவும், மோசமாக நடந்து கொண்டதாகவும் பேட்டி அளித்தார்.

ஆனால் சாமி அத்தனை புகார்களையும் மறுத்தார். பத்மப்ரியாவைப் போல மோசமான நடிகை கிடையாது என்றும் காட்டமாக கூறினார்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தியது. இயக்குநர் சாமி, பத்மப்ரியா இருவரும் நேரில் வரவழைக்கப்பட்டனர்.

இருவரிடமும், தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், துணைத் தலைவர் அன்பாலயா பிரபாகரன் மற்றும் சிவசக்தி பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். நடிகர் சங்கம் சார்பில் துணைத் தலைவர் விஜயக்குமார் கலந்து ெகாண்டார்.

இரவு 7 மணிக்கு தொடங்கி எட்டரை மணி வரை விசாரணை நீடித்தது. இரு தரப்பினரும் தங்களுடைய நியாயத்தை எடுத்துக் கூறினார்கள்.

இயக்குநர் சாமி கூறுகையில், தன் மீது பத்மப்ரியா தேவையில்லாமல் பொய் புகார்களைக் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் தயாரிப்பாளர் சங்கம் தனது தீர்ப்பை அறிவித்தது.

அதன்படி, நடிகை பத்மப்ரியாவை அடித்ததற்காக அவரிடம் இயக்குநர் சாமி மன்னிப்பு கேட்டார். நடிகையை படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவர் அடித்தது உண்மை.

மற்றபடி இருவரும் மாறி மாறி கூறிய புகார்கள் அனைத்தும் பொய். நடிகையை கன்னத்தில் அடித்ததற்காக இயக்குநர் சாமி ஒரு வருட காலம், திரையுலகில் பணியாற்றத் தடை விதிக்கப்படுகிறது. அவர் தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியிலும் படத்தை இயக்க முடியாது.

அவருக்கு ஃபெப்சியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் எந்தவொரு ஒத்துழைப்பும் தராது. ஆனால் அவர் எடுக்கும் மிருகம் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருப்பதால், தயாரிப்பாளரின் நலன் கருதி அந்தப் படத்தை மட்டும் இயக்கித் தர சாமிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நடிகை பத்மப்ரியா மீதமுள்ள காட்சிகளை முடித்துத் தர உத்தரவிடப்படுகிறது.

இதுபோன்று ஒரு சம்பவம் இதற்கு முன்பு தமிழ் திரையுலகில் நடந்தது இல்லை. இனிமேலும் நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்த தண்டனையை கொடுத்துள்ளோம் என்று சங்க நிர்வாகிகள் கூறினர்.

நடிகர் சங்க துணைத் தலைவர் விஜயகுமார் கூறுகையில், இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளியூரில் இருப்பதால் அவர் சென்னை திரும்பியவுடன் அவரிடம் பேசிவிட்டு எங்களது முடிவை தெரிவிப்போம் என்று கூறினார்.

கூட்டம் முடிந்ததும் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் அன்பாலயா பிரபாகரனை செய்தியாளர்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பிரபாகரன் பதிலளிக்கையில், இயக்குநர் சாமி மீதான நடிகை பத்மப்ரியாவின் செக்ஸ் தொல்லை புகார்கள் பொய்யானவை.

சம்பவத்தன்று சாமி, பத்மப்ரியாவை அடித்துள்ளார். அதுமட்டும்தான் நடந்துள்ளது. ஆனால் பத்மப்ரியா கூறியது போல செக்ஸ் தொல்லையெல்லாம் சாமி கொடுக்கவில்லை.

உணர்ச்சிவசப்பட்டு அதுபோன்ற புகார்களை பத்மப்ரியா தெரிவித்திருக்கலாம். இருப்பினும் ஒரு நடிகையை அடித்ததை பொறுத்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.

மீண்டும் ஷூட்டிங்:

ஒரு வழியாக பிரச்சினை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து சாமி மதுரைக்குக் கிளம்பிச் சென்றார். இறுதிக் கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளார்.

பத்ம்பிரியா இன்னும் சில நாட்களில் மதுரை செல்கிறார். ஒரே நாளில் தான் நடித்துக் கொடுக்க வேண்டிய பாக்கிக் காட்சிகளை நடித்துக் கொடுக்கிறார்.

Read more about: padmapriya, saami

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil