»   »  பெரியார் படத்துக்கு தடை இல்லை

பெரியார் படத்துக்கு தடை இல்லை

Subscribe to Oneindia Tamil

பெரியார் படத்துக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சத்யராஜ், குஷ்பு, ஜோதிர்மயி உள்ளிட்டோர் நடிக்க தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றின் சில நிகழ்வுகளை சித்தரிக்கும் பெரியார் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பகவான் என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

அதில், கடவுள் நம்பிக்கைகைய இழிவுபடுத்துவது போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இது கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே படத்துக்கும், பாடலுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இந்தப் பாடலை ஆங்கிலத்தில் நீதிபதி சந்துரு மொழி பெயர்த்து தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவின் பரிசீலனைக்கு வழங்கினார். அதைப் படித்துப் பார்த்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பாடல் வரிகள் இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு அளித்த தீர்ப்பில், பெரியாரின் வாழ்க்கை அவரது கருத்துக்களை விளக்கும் படம் இது. வேதங்கள்,புராண காலங்களில் கடவுள்கள் பற்றி பெரியார் கொண்டிருந்த கண்ணோட்டத்தை விளக்கும் படமாக இது உள்ளது.

ஒருவர் கூறிய கருத்துக்களை மாற்றிக் கூற முடியாது, அதைத் தவிர்க்கவும் முடியாது. பெரியாரின் கருத்துக்கள், கண்ணோட்டங்கள் குறித்து பல புத்தகங்கள் வந்துள்ளன. ஆடியோ, சிடி வடிவிலும் அவை வந்துள்ளன.

மேலும் சம்பந்தப்பட்ட பாடலை திரைப்படத் தணிக்கைக் குழுவினர் பார்த்து அங்கீகரித்துள்ளனர். ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. மேலும் பெரியார் படத்துக்கு யூ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மனுவைத் தாக்கல் செய்ய எந்த முகாந்திரமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பெரியார் படத்துக்கான தடை நீங்கியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil