»   »  'குண்டக்க மண்டக்க' கட்டணம்!

'குண்டக்க மண்டக்க' கட்டணம்!

Subscribe to Oneindia Tamil
Vikram with Trisha
பொங்கலுக்கு வெளியாகியுள்ள புதிய திரைப்படங்களை திரையிட்டுள்ள தியேட்டர்களில் கட்டணம் அதிக அளவுக்கு விற்கப்படுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு தலையிட்டு இவர்களைத் தட்டி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் புதிய படங்களைத் திரையிடும்போது முதல் சில நாட்களுக்கு தியேட்டர்காரர்கள் தங்களது இஷ்டத்திற்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என அதிமுக அரசு பச்சைக் கொடி காட்டியது.

இதனால் புதிய படங்கள் திரைக்கு வரும்போது கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டன.

ஆனால் தற்போது திமுக அரசு பதவிக்கு வந்ததும் இந்த முறைக்குத் தடை விதித்தது. தியேட்டர்களின் உள் கட்டமைப்பு, தரம், இருக்கை வசதி, ஏசியா அல்லது நான் ஏசியா என்பதை பொறுத்து டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் அரசின் உத்தரவு தற்போது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. பல தியேட்டர்கள் பெருமளவில் கட்டணம் வசூலித்து வருகின்றன. பீமா படத்தின் டிக்கெட் ரூ. 125 வரை விற்கப்படுகிறது. அதேபோல பழனி படத்திற்கும் ரூ. 100 வரை டிக்கெட் விற்கப்படுகிறதாம்.

இப்படி அதிக அளவில் மக்களிடமிருந்து பணத்தைக் கறக்கும் தியேட்டர் நிர்வாகங்கள், தியேட்டர்களை மட்டும் மகா மோசமாக வைத்துள்ளன.

உடைந்து நலிந்து போன இருக்கைகள், உட்கார்ந்தால் கட்டையும், ஆணியும் நமது 'சீட்டை' பதம் பார்க்கின்றன. மூக்கை மூடாமல் தியேட்டர் கழிப்பறைகளுக்குப் போய் விட்டு வந்தால் அவர்களின் பெயர்களை 'லிம்கா சாதனைப் புத்தகத்தில்' இடம் பெற பரிந்துரைக்கலாம். அப்படி கமகமக்கின்றன தியேட்டர் டாய்லெட்டுகள்.

தியேட்டருக்குள் இருப்பது ஏதோ பாய்லருக்குள் பதுங்கி இருப்பதைப் போல சரியான காற்றோட்ட வசதி இல்லாதது என ஏகப்பட்ட கோளாறுகளுடன் பணத்தை மட்டும் மறக்காமல் பறித்து வருகின்றன பல தியேட்டர்கள்.

தியேட்டர்களில் வாகனங்களை நிறுத்த இலவச அனுமதி என்று முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அதற்கும் காசைப் பிடுங்கி காலியாக்கி அனுப்புகிறார்கள்.

மேலும் தியேட்டர்களில் உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் பொருட்களின் விலையோ ஸ்டார் ஹோட்டல் விலைக்கு நிகராக உள்ளது.

இப்படி ஏகப்பட்ட அவஸ்தைகளுக்கு மத்தியில் படம் பார்க்க வேண்டியுள்ளது என்பதால்தான் பெரும்பாலானவர்கள் திருட்டு விசிடிகளையும், டிவிடிகளையும் வாங்கி வீட்டில் நிம்மதியாகப் படம் பார்க்க நினைக்கிறார்கள்.

அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இப்படிப்பட்ட தியேட்டர்காரர்களுக்கு உரிய சூடு கொடுத்தால்தான் திருட்டு விசிடி மோகம் குறையும், தியேட்டர்களுக்கும் மக்கள் நிம்மதியாக வந்து செல்ல முன் வருவார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil