»   »  'மகாமகம்' ஆன 'பொறுக்கி'

'மகாமகம்' ஆன 'பொறுக்கி'

Posted By:
Subscribe to Oneindia Tamil


சுந்தர்.சி. நடிக்க, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தயாரிப்பில் உருவாகி வரும் பொறுக்கி படத்தின் டைட்டில், அதிருதில்ல என்று மாற்றப்பட்டு தற்போது மகாமகம் என உருமாறியுள்ளது.

ஷக்தி சிதம்பரத்தின் தயாரிப்பில் சுந்தர்.சி. நாயகனாக நடிக்க பொறுக்கி படம் ஆரம்பிக்கப்பட்டது. புதுமுகம் ராகினி நாயகியாக நடிக்கிறார். முன்னாள் நாயகி நதியா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

தமிழ்ப் படங்களுக்கு குண்டக்க மண்டக்க டைட்டில் வைப்பதற்கு கடும் ஆட்சேபனை எழுந்ததால் தமிழ்க் கலாச்சாரத்தை பிரதிபலிக்காத படங்கள், டைட்டில் கொண்ட படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு தருவதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து பொறுக்கி, கெட்டவன், பொல்லாதவன் ஆகிய படங்களின் தயாரிப்பாளர்களைக் கூப்பிட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில், படத் தலைப்புகளை மாற்றுங்கள் என்று அட்வைஸ் கொடுத்தது.

ஆனால் தனது கெட்டவன் படத் தலைப்பு தவறானதல்ல என்று சிம்பு விளக்கம் கொடுத்து மாற்றுவது இயலாது என்று தெரிவித்தார். ரஜினி நடித்து பொல்லாதவன் என்ற பெயரில் படம் வந்ததை சுட்டிக் காட்டி தனுஷ் தரப்பும் அப்படத் தலைப்புக்கு நியாயம் கற்பித்தது.

ஆனால் ஷக்தி சிதம்பரம் மட்டும் படத் தலைப்பை மாற்ற தீர்மானித்தார். அதிருதில்ல என்று படத்துக்குப் பெயர் சூட்டினார். ஆனால் இந்தத் தலைப்பு இயக்குநருக்கும், ஹீரோவோக்கும் திருப்தி தரவில்லை. இதையடுத்து தற்போது மகாமகம் என்று மாற்றி விட்டனர்.

இதுகுறித்து ஷக்தி சிதம்பரம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், படத்தின் கதை கும்பகோணத்தில் நடப்பதாக உள்ளது. கும்பகோணத்தில் பிரபலமானது மகாமக விழா. எனவேதான் மகாமகம் என படத்துக்குப் பெயர் சூட்ட இயக்குநர் தீர்மானித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியோ நல்லபடியாக படம் வந்தால் போதும்!

Read more about: mahamagam porukki sundarc

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil