»   »  இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDPrabhuDeva

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDPrabhuDeva

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என செல்லமாக அழைக்கப்படுகிற நடிகர், டான்ஸர் பிரபுதேவாவின் 45-வது பிறந்த நாள் இன்று.

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக சினிமாவில் சாதித்து வரும் பிரபுதேவா கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவின் முக்கியமான சினிமா துறைகளில் வெற்றிபெற்ற கலைஞராக வலம் வருகிறார்.

தனது துறையிலும், தனிப்பட்ட வாழ்விலும் சில சறுக்கல்களைச் சந்தித்தாலும் தொடர்ந்து முன்னேறி வளர்ந்து நிற்கும் பிரபு தேவா வளரும் கலைஞர்களுக்கான ரோல் மாடல்.

பிரபுதேவா

பிரபுதேவா

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான டான்ஸ் மாஸ்டரான முகூர் சுந்தர் என்கிற சுந்தரம் மாஸ்டருக்கு மகனாகப் பிறந்து நடனத்துறை மட்டுமின்றி இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தைத் தனது உழைப்பால் எட்டியிருக்கிறார் பிரபு தேவா. மைசூரிலிருந்து கோலிவுட்டில் நடன அமைப்பாளராகப் பணியாற்ற ஏதுவாக சென்னைக்கு வந்தது சுந்தரம் மாஸ்டர் குடும்பம். சிறுவயதிலேயே பரதநாட்டியம் கற்கத் தொடங்கிய பிரபுதேவா பின்னர் வெஸ்டர்ன் டான்ஸிலும் பட்டையைக் கிளப்பத் தொடங்கினார்.

நடனப்புயல்

நடனப்புயல்

1988-ம் ஆண்டு தனது தந்தை சுந்தரம் மாஸ்டர் நடனம் அமைத்த 'அக்னி நட்சத்திரம்' படத்தில் குரூப் டான்சர்களில் ஒருவராக ஆடினார் பிரபுதேவா. அதுதான் சினிமாவில் பிரபுதேவாவின் அறிமுகம். அடுத்த ஆண்டே 'வெற்றி விழா' படத்திற்கு தானே நடன இயக்குநராகப் பணியாற்றும் அளவுக்கு வளர்ந்தார். தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் என 100 படங்களுக்கும் மேல் நடன இயக்குநராகப் பணியாற்றி 'நடனப்புயல்' எனும் பெயர் பெற்றார்.

ஹீரோ

ஹீரோ

நடன இயக்குநராகப் பணியாற்றியபோதே, பாடல்களில் தனது ஸ்டெப்ஸால் ஈர்த்த பிரபு, 1994-ம் ஆண்டு பவித்ரன் இயக்கிய 'இந்து' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதே வருடத்தில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் 'காதலன்' படத்தில் நடித்தார். இந்தப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகளும் வரத் தொடங்கின. 'ராசையா', 'மிஸ்டர் ரோமியோ', 'மின்சாரக் கனவு' என பல படங்கள் மூலம் நடிகராகவும் ரசிகர்களின் மனதை ஈர்த்தார்.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே

நடன இயக்குநராக ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் டான்ஸ் ஸ்டெப்ஸ்களை மாற்றிப்போட்டு ஒப்பேற்றிக் கொண்டிருக்காமல் இந்திய சினிமாவுக்கு புதிய நடன அசைவுகளை அறிமுகப்படுத்தியவர் பிரபுதேவா. முன்னணி நடிகர்களும் கூட, தங்கள் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா எனக் கேட்டால், ஆடவைத்தே சுளுக்கெடுப்பாரே என ஜெர்க் ஆகுமாம். 'ஜெண்டில்மேன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே' பாடல் அன்றைய இளைஞர்களைத் துள்ள வைத்தது.

முக்காலா முக்காபுலா

முக்காலா முக்காபுலா

'முக்காலா முக்காபுலா' பாடலில் பிரபுதேவாவின் டான்ஸ் மொவ்மென்ட்ஸ் இந்தியா முழுமைக்கும் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. 'மின்சாரக் கனவு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெண்னிலவே வெண்ணிலவே' பாடலில் ஆடியதற்காக தேசிய விருது பெற்றார் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டராகவும், நடிகராகவும் கலக்கிக்கொண்டிருக்கும்போது இயக்குநர் ஆசையும் வந்தது அவருக்கு. நிறைய படங்களில் பணியாற்றி டைரக்‌ஷனையும் அறிந்திருந்த பிரபுதேவா இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

இயக்குநர் அவதாரம்

இயக்குநர் அவதாரம்

தெலுங்கில், 2005-ம் ஆண்டு, 'நுவ்வு ஒஸ்தானன்டே நேனொத்தடனா' எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர்ஹிட்டானதைத் தொடர்ந்து நம்பிக்கை பிறந்தது. அடுத்து தமிழில் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய 'உனக்கும் எனக்கும்' நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து விஜய்யை வைத்து 'போக்கிரி', 'வில்லு' ஆகிய படங்களையும் கொடுத்தார். பாலிவுட்டிலும் இயக்குநராகக் களமிறங்கிய பிரபுதேவா 'வாண்டட்' படம் எடுத்தார்.

காத்திருக்கும் முன்னணி ஹீரோக்கள்

காத்திருக்கும் முன்னணி ஹீரோக்கள்

பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரை வைத்து பிரபுதேவா இயக்கிய 'ரவுடி ரத்தோர்' வசூல் குவித்தது. இப்படத்தின் மூலம் 100 கோடி கிளப்பில் இணைந்தார் இயக்குநர் பிரபுதேவா. இப்போதும் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பிரபுதேவாவின் டைரக்‌ஷனுக்காக காத்திருக்கிறார்கள். அஜித் பிரபுதேவாவுடன் இணைந்து படம் பண்ணலாம் என சில வருடங்களுக்கு முன்பே கூறியும் இன்னும் நேரம் கூடிவராமல் இருக்கிறது. இந்தக் கூட்டணி விரைவில் இணையும்.

சில சறுக்கல்கள்

சில சறுக்கல்கள்

தயாரிப்பாளராகவும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் பிரபுதேவா. அவரே தயாரித்து நடித்த 'தேவி' திரைப்படம் ரசிகர்களின் பாரட்டுகளைப் பெற்றது. ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் உருவான 'போகன்' படத்தையும் தயாரித்தார். தனிப்பட்ட வாழ்வில் சில எதிர்பாராத சறுக்கல்களைச் சந்தித்திருந்தாலும், அவற்றிலிருந்தெல்லாம் அநாயசமாக மீண்டெழுந்து தனது அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்து வருகிறார் பிரபுதேவா.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்

முழுக்க முழுக்க் டான்ஸை மையமாக வைத்து பிரபுதேவா நடித்த 'ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்' (ABCD) படம் டான்சர்களின் வாழ்க்கையைச் சொன்னது. இந்திய அளவில் டான்சர்களுக்காகன் ஒரு ஐகான் பிரபுதேவா. புதிதாக டான்ஸ் துறைக்குள் நுழைகிற ஒவ்வொருவருக்கொள்ளும் பிரபுதேவாவின் தாக்கம் இருப்பதே அவரது மிகப்பெரும் சாதனை. இன்னும் திரையுலகில் நிறைய சாதிக்க பிரபுதேவாவை வாழ்த்துவோம். ஹேப்பி பர்த்டே மைக்கேல் ஜாக்சன் ஆஃப் இந்தியா!

English summary
Actor, Dance master, Director, Producer Prabhudeva's birthday is today. Prabhudeva special tribute is here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X