»   »  பிரகாஷ் ராஜின் தம்பட்டம்!

பிரகாஷ் ராஜின் தம்பட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொஞ்ச நாட்களாக வாயடக்கத்துடன் இருந்த பிரகாஷ் ராஜ் மறுபடியும் நீளமாக பேச ஆரம்பித்துள்ளார். இதனால் தமிழ் சினிமாக்காரர்களிடையே எரிச்சல் எழுந்துள்ளது.

கே.பாலச்சந்தரால் தமிழுக்கு அழைத்து வரப்பட்ட பிரகாஷ் ராஜ், நல்ல நடிகர், நல்ல சிந்தனையாளர். சுயமாக தன்னை மேம்படுத்திக் கொள்ளும் திறமையும் பெற்றவர்.

தனது நடிப்புத் திறமையால் சுறுசுறுவென முன்னேறிய பிரகாஷ் ராஜ் இன்று தயாரிப்பாளராகவும் வெற்றிக் கொடி நாட்ட ஆரம்பித்துள்ளார். அவரது டூயட் மூவிஸ் சார்பில் இப்போது அதிக அளவில் படங்கள் வர ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய ஹோம் வீடியோ நிறுவனமான மோசர் பேயரும், பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸும் இணைந்து படத் தயாரிப்பில் குதித்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.

ஒரே நேரத்தில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வெள்ளித்திரை, மயிலு, அபியும் நானும் என மூன்று படங்களை தயாரிக்கின்றன.

வெள்ளித்திரை, மலையாளத்தில் வெளியான உதயானு தாரம் படத்தின் ரீமேக். இப்படத்தை விஜி இயக்குகிறார். இவர் அழகிய தீயே, பொன்னியின் செல்வன், மொழி ஆகிய படங்களில் ராதா மோகனுக்கு உதவியாளராக இருந்தவர். இப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

அபியும் நானும் படத்தை ராதாமோகன் இயக்குகிறார். தந்தைக்கும், மகளுக்குமான உறவை வெளிப்படுத்தும் கதையாம் இது. இதில் தந்தை வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். மகளாக வருகிறார் திரிஷா.

அடுத்த படம் மயிலு. மதுரையை கதைக்களமாக கொண்ட கிராமத்து கதை. அக்டோபர் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகிறது. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜீவன் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்களே நடிக்கவுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், தமிழ் சினிமாக்காரர்கள் குறித்து ரொம்பவே குறைபட்டுக் கொண்டார். அவர் பேசுகையில், தமிழ் சினிமாக்களில் இடம் பெறும் கதைகள் அனைத்துமே போலித்தனமாக உள்ளன. எதுவுமே நிஜத்தைப் பிரதிபலிக்கவில்லை.

ஆனால் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டுப் படங்களில் எல்லாம் நிஜக் கதைகளைத்தான் படமாக்குகிறார்கள். நிஜ சம்பவங்கள், நிகழ்வுகள்தான் அங்கு படமாகின்றன.

டூயட் மூவிஸ் தொடர்ந்து தமிழில் நல்ல படங்களையே தந்து கொண்டிருக்கிறது. டூயட் மூவிஸ் மட்டும்தான் நல்ல படங்களைத் தருகிறது. மற்றவர்கள் அப்படி இல்லை என்றார்.

பிரகாஷ் ராஜின் இந்தப் பேச்சு தமிழ் சினிமாக்காரர்களிடையே புதிய நெருப்பை மூட்டியுள்ளது. அப்படியானால் தனது குரு கே.பாலச்சந்தரையும் சேர்த்துத்தான் தமிழ் சினிமாக்காரர்களை திட்டுகிறாரா பிரகாஷ் ராஜ் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

முன்பு தமிழ் சினிமாக்காரர்களை விமர்சித்துப் பேசி வந்தார் பிரகாஷ் ராஜ். இதையடுத்து சில மூத்த கலைஞர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து அமைதிப்படுத்தியதாக கூறப்பட்டது. தற்போது மறுபடியும் 'பேச' ஆரம்பித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

Read more about: prakashraj

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil