»   »  என் கல்யாணம் செல்லாது- அறிவிக்கக் கோரும் பிரஷாந்த்

என் கல்யாணம் செல்லாது- அறிவிக்கக் கோரும் பிரஷாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:எனக்கும், கிரகலட்சுமிக்கும் இடையே நடந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். எனது குழந்தையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கிரகலட்சுமிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி நடிகர் பிரஷாந்த், குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குடும்ப நல நீதிமன்றத்திற்கு நேற்று தனது வக்கீலுடன் வந்த பிரஷாந்த் இதுதொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், எனக்கும் கிரகலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முறைப்படி திருமணம் நடந்தது. அதன் பின்னர் 10ம் தேதி வரவேற்பு நடந்தது. அப்போது கிரகலட்சுமிக்கு வைர நகைகளைக் கொடுத்தோம். கிரகலட்சுமி தரப்பில் எனக்கு தங்கச் சங்கிலியும், மோதிரமும் போட்டனர்.

இருவரும் சரியாக 119 நாட்கள் இணைந்து வாழ்ந்தோம். ஒரு நாள் கிரகலட்சுமி எங்ளது வீட்டிலிருந்து வெளியேறி அவரது வீட்டுக்குச் சென்றார். கருவுற்றிருந்த அவர் அங்கு போய் குழந்தை பெற்றெடுத்தார். சீமந்தத்திற்கு என்னைக் கூப்பிடவில்லை. குழந்தை பிறந்த போது அந்த செய்தியையும் அவர்கள் யாரும் எனக்கு சொல்லவில்லை.

கடந்த 1998ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கிரகலட்சுமி வேணு பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை என்னைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்போ அல்லது பின்னரோ அவரும் தெரிவிக்கவில்லை, அவரது குடும்பத்தினரும் ஒன்றும் சொல்லவில்லை.

கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவரை மணக்காமல் இருந்திருப்பேன். ஆனால் இத்தகவலை மறைத்ததன் மூலம் பெரும் மோசடியை அவர்கள் செய்து விட்டனர்.

இந்த மோசடியை மறைத்து விட்டு, எனது குழந்தையைப் பார்க்கக் கூட விடாமலும், என் மீது அவதூறாக வரதட்சணைக் கொடுமை வழக்கு தொடுத்தும் என்னை அலைக்கழித்து விட்டனர்.

கிரகலட்சுமியின் செயல்களால் நான் கொடுமைக்கு ஆளாகியுள்ளேன். திருமணத்திற்குப் பிறகு அவர் என்னிடம் வேறு மாதிரியாகவே நடந்து கொண்டார். காரணமே இல்லாமல் அவரது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். இதனால் எனது திருமண வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலால் நான் பெரும் அவதியுற்றேன்.

கிரகலட்சுமி ஏற்கனவே திருமணானவர். அவரிடம் எனது குழந்தை இருந்தால் அவர் சரியாக கவனிக்க மாட்டார். நான் சினிமா தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கிறேன். எனவே குழந்தையைப் பராமரிக்க எனக்கு போதுமான நேரம் உள்ளது.

ஏற்கனவே திருமணமானதை மறைத்து என்னைத் திருமணம் செய்து கொண்ட கிரகலட்சுமியின் செயல்களை மன்னிக்க முடியாது. ஆகவே எனக்கும், கிரகலட்சுமிக்கும் இடையே நடந்த திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். விவாகரத்து உத்தரவு வழங்க வேண்டும். அவரிடமிருந்து எனது குழந்தையை பெற்று என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரஷாந்த் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil