»   »  ப்ரீத்தியின் பெற்றோர் தலைமறைவு

ப்ரீத்தியின் பெற்றோர் தலைமறைவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ப்ரீத்தி வர்மா கூறியுள்ள புகாரின் பேரில் அவரது பெற்றோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களைக் கைது செய்ய போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

நடிகை ப்ரீ்த்தி வர்மா கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி ராஜமுந்திரியில் சினிமா படப்பிடிப்பில் இருந்த போது திடீரென்று தலைமறைவானார். அவர் என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.

தனது பெற்றோர் விபச்சாரத்தில் தள்ளியதால்தான் தான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக போலீஸாருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார் ப்ரீத்தி வர்மா.

சில நாட்கள் கழித்து ப்ரீத்தி வர்மா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ப்ரீத்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நான் சென்னை வர விரும்புகிறேன். உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தில் ப்ரீத்தி வர்மா நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அதன்படி,கடந்த மாதம் 28ம் தேதி ப்ரீத்தி பலத்த பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

நீதிபதியிடம் அவர் விளக்கமாக வாக்குமூலம் அளித்தார். பெற்றோர் தன்னை விபசாரத்தில் தள்ள முயற்சிப்பதாகவும், அதனால் மும்பை சென்றதாகவும் கூறினார். ப்ரீத்தியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு நீதிமன்றம் உத்திரவிட்டது.

அதன் பேரில் கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ப்ரீத்தியின் தந்தை பரத்குமார், தாயார் ரம்யா ஆகியோர் மகளை விபசாரத்தில் தள்ளியதாக வழக்கு பதிவு செய்துள்ளார். ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பரத்குமாரும், ரம்யாவும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil