»   »  இது ப்ரீத்தியின் கதை!

இது ப்ரீத்தியின் கதை!

Subscribe to Oneindia Tamil

சில நேரங்களில் நிஜக் கதைகளை படமாக்குவார்கள். ஆனால் சில நேரங்களில் எடுக்கப்படும் படங்கள் யாருடையாவது கதையேயா நினைவுபடுத்தும் வகையில் எதிர்பாராமல் அமைந்து விடும். அப்படி அமைந்த படம் போலத் தோன்றுகிறது ப்ரீத்தி வர்மாவின் 18 வயசுப் புயலே.

18 வயசுப் புயலே படத்தை ஆரம்பித்தபோது, அப்படத்தின் கதை ப்ரீத்தி வர்மாவின் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கப் போகிறது என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் ஓட்டமும், நடையுமாக மும்பைக்கு ஓடிப் போய் தலைமறைவாகி 2 மாதங்கள் கழித்து மீண்டும் ப்ரீத்தி திரும்பி வந்த பிறகு, படத்தின் கதையைப் பார்த்தால் அது அப்படியே ப்ரீத்தி வர்மாவின் கதை போலவே இருக்கிறதாம்.

18 வயசு இளம் பெண்ணின் வாழ்க்கைக் கதையாம் இது. ஆனால் ப்ரீத்தி வர்மாவின் வாழ்வில் நடந்த பல சம்பவங்களை பிரதிபலிப்பதாக உள்ளதாம். ஆனால் ப்ரீத்தி ஓடிப் போவதற்கு முன்பு எடுக்கப்பட்ட காட்சிகள் இவை என்பதால், இது இயற்கையாக அமைந்து விட்டதாக படக் குழு கூறுகிறது.

படத்தில் நளினியின் அண்ணன் மகளாக வருகிறார் ப்ரீத்தி. அத்தை நளினின் அட்டாகசத்தைத் தாங்க முடியாமல் அவருக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு ஓடிப் போகிறார். அக்கடிதத்தில், உங்கள் கையால் மெல்ல மெல்ல சாவதை விட ஒரேயடியாக வீட்டை விட்டு ஓடிப் போகிறேன் என்று எழுதுகிறார் ப்ரீத்தி.

இன்னொரு காட்சியில், எனக்குப் பெற்றோர் இருந்தும் நான் அனாதையாக உணர்கிறேன். அவர்களால் எனக்கு எந்த நன்மையும் இல்லை என்று வசனம் பேசுகிறார் ப்ரீத்தி.

இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ப்ரீத்தியின் கண்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கண்ணீர் வழிந்தோடியதாம். சரி, உணர்ச்சி வசப்பட்டு நடிக்கிறார் போல என நினைத்துள்ளனர்.

படத்தின் இயக்குநர் விஜய் இதுகுறித்துக் கூறுகையில், அந்த சீன் படமாக்கப்பட்டபோது நிஜமாகவே அழுது விட்டார் ப்ரீத்தி. காட்சியை உள்வாங்கி அற்புதமாக நடிக்கிறாரே என்று நாங்கள் அசந்து போய் அவரைப் பாராட்டினோம்.

ஆனால் அவர் மாயமான பிறகுதான் நிஜமாகவே அவர் மன வேதனையில் இருந்துள்ளது எங்களுக்குத் தெரிய வந்தது. இந்தக் காட்சியை படமாக்கிய அடுத்த வாரத்தில்தான் ப்ரீத்தி வர்மா ஓடிப் போனார். இது மிகவும் தற்செயலாக நடந்த ஒன்று என்றார்.

இப்படத்தில் அஜய் பிரதீப் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். பாபு என்பவரும் இன்னொரு ஹீரோவாக உள்ளார். கொடுமைக்கார அத்தை வேடத்தில், (கேரக்டரின் பெயர் வட்டி வசந்தாவாம், விட்டா குட்டி குமுதான்னு வப்பீங்கப்பா) நளினி கொடூரம் காட்டியுள்ளாராம்.

காதல், ஆக்ஷன் ஆகியவற்றை சரி விகித சமாதானத்தில் காட்டியுள்ளனராம். ஆனால் ப்ரீத்தி கொடுத்துள்ள போஸ்களைப் பார்த்தால் ஆக்ஷனை விட ரொமான்ஸுக்கும், கிளு கிளுப்புக்கும்தான் அதீத முக்கியம் கொடுத்துள்ளது போலத் தோன்றுகிறது.

படத்தில் ஐந்து பாடல்கள். அதில் பாதிப் பாட்டுக்கள் கிளாமர் முத்துக்களாம். ஒரு பாட்டு புத்தாண்டுப் பாட்டு. இந்தப் பாடலின் வரிகள் கூட ப்ரீத்திக்கு ரொம்ப்பப் பொருத்தமாக உள்ளது.

சினேகன் எழுதியுள்ள அந்தப் பாடலின் முதல் வரிகள், புது வருடம் வருகிறது, புது வாழ்க்கை பிறக்கின்றது, கொண்டாட்டம் உல்லாசம் உற்சாகம்தான் .. என்று போகிறது.

ப்ரீத்திக்கும் தமிழ்ப் புத்தாண்டு முதல் புது வசந்தம் பிறக்கட்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil