»   »  ப்ரியதர்ஷனும், 10 இந்திப் படங்களும்!

ப்ரியதர்ஷனும், 10 இந்திப் படங்களும்!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
ஒரே தயாரிப்பாளருக்காக, அடுத்த 6 ஆண்டுகளில் 10 இந்திப் படங்களைத இயக்கித் தரப் போகிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன்.
தென்னிந்திய இயக்குநர்களில், பாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நாட்டியது ப்ரியதர்ஷன் மட்டுமே. கிட்டத்தட்ட 10 ஆண்டுளாக பல இந்திப் படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார் ப்ரியதர்ஷன்.

அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் குறைந்த பட்ஜெட்டில், சாதாரண ஹீரோ, ஹீரோயின்களை வைத்து தயாரிக்கப்பட்டவை. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் அனைத்துமே நல்ல வெற்றியைப் பெற்றவை.

பிரியதர்ஷனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில், முன்னணி ஸ்டார்களான சல்மான் கான், ஷாருக் கான் போன்றோர் ப்ரியன் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். இருப்பினும் தனது கதைக்குப் பொருத்தமான கலைஞர்களையே போடுவது என்பதில் ப்ரியன் படு பிடிவாதமாக, தீவிரமாக உள்ளார்.

சமீபத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான பூல் புலயா (சந்திரமுகியின் ரீமேக்) நன்கு ஓடிக் கொண்டுள்ளது. வெளிநாடுகளிலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

இந்த வாரம் இப்படம் இங்கிலாந்தின் டாப் 10 படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. இதே இடத்தை சமீபத்தில் சிவாஜி பெற்றது என்பது நினைவிருக்கலாம். அந்த வரிசையில் இங்கிலாந்தின் டாப் 10 பட வரிசையில் இடம் பெற்ற 2வது இந்தியப் படம் என்ற பெருமை பூல் புலயாவுக்குக் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இந்தியில் 10 படங்களை இயக்கும் வாய்ப்பு ப்ரியதர்ஷனுக்குக் கிடைத்துள்ளது. இதற்காக மும்பையைச் சேர்ந்த ஒரு கார்பரேட் திரைப்பட நிறுவனத்துடன் ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதுகுறித்து ப்ரியதர்ஷன் கூறுகையில், உண்மைதான். சமீபத்தில்தான் இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து மேலும் விவரம் தெரிவிக்க விரும்பவில்லை. பின்னர் விரிவாக கூறுகிறேன்.

அடுத்த ஆறு ஆண்டுகளில் 10 படங்களை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் ஒரு இயக்குநர், ஆண்டுக்கு ஒரு படத்தை முடிப்பதே பெரிய விஷயம். ஆனால் என்னால் ஆண்டுக்கு நான்கு படங்களை இயக்க முடியும். பணியில் தீவிரம் காட்டினால் தாராளமாக இப்படிச் செய்யலாம்.

பாலிவுட்டில் நான் இத்தனை காலம் வெற்றிகரமாக இருப்பதற்கு பணியில் காட்டும் சிரத்தையும், அக்கறையும்தான் காரணம். மலையாளத் திரையுலகம்தான் இதை எனக்குக் கற்றுத் தந்தது.

பாலிவுட்டில் இன்னும் கூட தென்னிந்தியர்களைப் பார்த்தால் வெறுப்புடன் ஒதுங்கிப் போகத்தான் செய்கிறார்கள். பொறாமை குணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவர்களையே எனது உந்து சக்தியாகக் கொண்டு கடுமையாக உழைக்கிறேன என்றார் ப்ரியன்.

ப்ரியதர்ஷின் அடுத்த படத்தில் ஷாருக் கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை ப்ரியதர்ஷன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், எனது கதைக்கு பெரிய ஹீரோக்கள் தேவையில்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் முன்னணி ஹீரோக்களை நாட வேண்டும்.

மேலும் எனக்கு ஸ்டார் வேல்யூ உள்ளவர்கள் மீது நம்பிக்கை இல்லை. கதை மீதுதான் எனக்கு நம்பிக்கை அதிகம். எனது கதைதான் ஹீரோ. எனது படங்கள் எல்லாமே எனது பெயருக்காகவும், எனது கதைக்காகவும்தான் ஓடுகின்றன. நடிகர்களின் முகத்தைப் பார்த்து அவை ஓடவில்லை என்றார் ப்ரியன்.

மிதமிஞ்சிய நம்பிக்கைகளும் கூட சில நேரங்களில் வெற்றிக்கு வழி வகுக்கும்.

Read more about: direct, priyadarshan
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil