»   »  மக்களுக்காக ஒன்பது ரூபாய் நோட்டு!

மக்களுக்காக ஒன்பது ரூபாய் நோட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sathyaraj with Thangar Bachan

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை தமிழகம் முழுவதும் 100 தியேட்டர்களில் மக்களுக்காக சலுகை கட்டணத்தில் திரையிடவுள்ளது பிரமீட் சாய்மீரா நிறுவனம். படத்தைப் பார்த்து விட்டு தங்களுக்கு இஷ்டமான தொகையை வெளியில் வைத்துள்ள உண்டியலில் போடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கர்பச்சான் இயக்கத்தில், சத்யராஜ், நாசர், அர்ச்சனா, ரோகினி ஆகியோரின் பண்பட்ட நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஒன்பது ரூபாய் நோட்டு. திரைப்பட விமர்சகர்களாலும், நல்ல சினிமாவை விரும்புபவர்களாலும் இப்படம் வெகுவாக வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக வித்தியாசமான முறையில் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை மக்களிடம் கொண்டு போகவுள்ளனர்.

அதன்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை (9ம் தேதி), முற்பகல் 11.30 மணிக்கு தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படும். இப்படத்தை பொதுமக்கள் எந்தவிதக் கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்தாமல் பார்க்கலாம். பார்த்த பின்னர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தங்களுக்கு விருப்பமான தொகையை செலுத்தலாம்.

இதற்கான ஏற்பாடுகளை பிரமீட் சாய்மீரா நிறுவனம் செய்கிறது. இதற்கான காரணம் மனதை வேதனைப்படுத்துவதாகும். கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் திரைக்கு வந்தது. ஆனால் நல்ல தியேட்டர்கள் கிடைக்காததால் தமிழகம் முழுவதும் மிகக் குறைந்த தியேட்டர்களிலேயே (30 தியேட்டர்கள்தானாம்) திரையிட முடிந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள மெகா மால் என கூறப்படும் மல்ட்பிளக்ஸ் தியேட்டர்காரர்கள் இந்தப் படத்தை திரையிட ரொம்பவே தயங்கினார்களாம். அதிலும் ஒரு தியேட்டர் நிர்வாகம், வேட்டி கட்டியவர்களுக்கான தியேட்டர் இது கிடையாது. எனவே இந்தப் படத்தை திரையிட முடியாது என்று அகம்பாவமாக கூறி விட்டதாம்.

இதனால் தங்கர் கொதித்துப் போனார். தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும், நட்பின் மாண்பை விளக்கும் இதுபோன்ற நல்ல படத்தைப் தமிழ் மக்கள் பார்க்க இப்படிப்பட்ட புல்லுறுவிகளால் தடை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக போராட்டத்தில் குதிக்கவும் தயாரானார்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களை பிரமீட் சாய்மீரா நிறுவனம்தான் கட்டுப்படுத்தி வருகிறது. தங்கரின் போராட்ட முடிவு குறித்து அறிந்ததும், சாய் மீரா நிறுவனம், ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தின் சிறப்புக் காட்சியை தங்களது கட்டுப்பாட்டில் உள்ள 100 தியேட்டர்களில் ஒரு காட்சி திரையிட முன்வந்தது.

இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் கூறுகையில், இந்தப் படத்தை இலவசமாக திரையிடவில்லை. முதலில் மக்கள் படத்தைப் பார்க்க வேண்டும். ஒரு பைசா கூட கொடுக்காமல் படத்தைப் பார்த்து விட்டு, தங்களுக்கு விருப்பமான தொகையை கட்டணமாக செலுத்தலாம்.

இந்தக் கட்டணம் முழுவதும் எங்களுக்கு போகாது, மாறாக தயாரிப்பாளரிடம்தான் வழங்கப்படும்.

நல்ல சினிமாவை நாங்கள் விரும்புகிறோம், ஆதரிக்கிறோம். ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்காக ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் தயாரிப்பாளர் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்தத் திட்டத்தை அமல்படுத்துகிறோம்.

ஒன்பது ரூபாய் நோட்டு மிகவும் அருமையான படம். கடந்த 75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு மைல் கல் படம். இந்தப் படத்தை நாங்கள் பாராட்டியே ஆக வேண்டும். தங்கர் போன்ற படைப்பாளிகளை சிறப்பித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்றார்.

இந்தப் படத்திற்கான இலவச புக்கிங் வசதியையும் சாய் மீரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் காட்சிக்கான இலவச டிக்கெட் வேண்டுவோர் 044-46464646 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாமாம் என்றார் சுவாமிநாதன்.

முன்பு 70களில் எழுத்தாளர் ஜெயகாந்தன் இயக்கத்தில் உருவான உன்னைப் போல ஒருவன் படத்தைத் திரையிடவும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் மக்களுக்கு நேரடியாக இப்படத்தைத் திரையிட்டார். அதன் பின்னர் மக்களிடம் கிடைத்த ஆதரவைப் பார்த்த தியேட்டர் உரிமையாளர்கள் இப்படத்ைத விரும்பி வாங்கி திரையிட்டனர். படமும் சில்வர் ஜூப்ளியைக் கொண்டாடியது என்பது நினைவிருக்கலாம்.

எத்தனையோ குப்பைப் படங்களைக் கோடிகளைக் கொட்டி வாங்கிக் காட்டும் தியேட்டர்காரர்கள், இதுபோன்ற பாடங்களை மக்களிடம் கொண்டு போகத் தயங்குவது ஏன் என்று புரியவில்லை.

தமிழர்களுக்காக, தமிழனால் எடுக்கப்பட்ட ஒரு படத்தை திரையிட தமிழகத்தில் தியேட்டர் இல்லை என்பது ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலை குணிய வேண்டிய விஷயம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil