»   »  ரீமேக் டிரெண்ட்-ராதாரவி அதிருப்தி

ரீமேக் டிரெண்ட்-ராதாரவி அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

பிரபலமான தமிழ்ப் படங்களை மீண்டும் தமிழிலேயே ரீமேக் செய்து எடுப்பது என்பது, அந்த நடிகர்களை கேலி செய்வது போலாகும் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளரான ராதாரவி கூறியுள்ளார்.

பன்முகப் பரிமானம் கொண்ட வெகு சில நடிகர்களில் ராதாரவியும் ஒருவர். வில்லனாக, குணச்சித்திர நடிகராக, காமெடியனாக பலமுகம் காட்டி பரிமளித்து வருபவர் ராதாரவி.

எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசான ராதாரவியிடம் பேசினால், பல விஷயங்களை அப்படியே அருவி போல கொட்டுவார். சினிமாவில் பார்க்கும் ராதாரவிக்கும், நேரில் பார்க்கும் ராதாரவிக்கும் இடையே நிறைய வித்தியாசங்களை காண முடியும். படு மெச்சூரிட்டியான, கேரக்டர் ராதாரவி.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் ரீமேக் கலாச்சாரம் குறித்து ராதாரவியிடம் கேட்டபோது மனிதர் பொரிந்து தள்ளி விட்டார்.

உலகத்தில் ஒரு சூரியன்தான், ஒரு சந்திரன்தான். சூரியனையோ அல்லது சந்திரனையோ ரீமேக் செய்ய முடியுமா. அப்படித்தான் சினிமாப் படங்களும்.

ஒருமுறை நான் நடிகர் திலகம் நடித்த படித்தால் மட்டும் போதுமா படத்தை ரீமேக் செய்யலாமா என எண்ணினேன். சிவாஜி ரோலுக்கு பிரபுவையும், எனது தந்தை எம்.ஆர்.ராதா ரோலில் நானும் நடிக்க முடிவாயிற்று.

எல்லாம் முடிவான பின்னர் எங்கள் முன்பு ஒரு கேள்வி விஸ்வரூபம் எடுத்து நின்றது. ஒரிஜினல் படித்தால் மட்டும் போதுமா படத்தில் ராஜசுலோச்சனா நடித்த கேர்கடரில் யாரை நடிக்க வைப்பது என்பதுதான் அந்தக் கேள்வி. அவர் அளவுக்கு அட்டகாசமாக நடிக்கும் நடிகை யார் என்ற கேள்வி எழுந்தது.

அந்தக் கேள்விக்கு எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. உடனேயே ரீமேக் ஐடியாவை அப்படியே கிடப்பில் போட்டு விட்டோம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தையோ அல்லது சிவாஜி நடித்த தெய்வமகனையோ யாராவது ரீமேக் செய்ய முடியுமா, அப்படியே எடுத்தாலும் அவர்களது கேரக்டர்களில் நடிக்க யார் இருக்கிறார்கள்.

பில்லா படத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் படத்தில் ரஜினி மிகவும் அபாரமாக நடித்திருப்பார். சூப்பர் ஸ்டார் நடிப்புக்கு இணையான ஒரு நடிகர் இன்று வரை வரவில்லை. ரஜினி ஒரு லிவிங் லிஜன்ட். இன்னும் கூட பில்லாவை ரசிக்கும் லட்சோப லட்சம் ரசிகர்கள் உலகெங்கும் உள்ளனர்.

அப்படிப்பட்ட படத்தை மறுபடியும் எடுக்கும்போது ஒரிஜினல் படத்தை கிண்டலடிப்பது போலத்தான் அது அமையும். நான் அஜீத்தை விமர்சிக்கவில்லை. ஆனால், நமது இயக்குநர்களிடையே, கற்பனை வறட்சி ஏற்பட்டு விட்டதையே இந்த டிரெண்ட் காட்டுகிறது.

பழம்பெரும், பிரபலப் படங்களை அப்படியே விட்டு விட வேண்டும். அவற்றை ரீமேக் செய்து அந்தக் கலைஞர்களை கொச்சைப்படுத்தக் கூடாது. அவையெல்லாம் பொக்கிஷங்கள் போல. அவற்றைப் பாதுகாக்க வேண்டுமே தவிர பெயருக்கு இழுக்கு ஏற்படுத்த முயலக் கூடாது.

புதியவர்கள், பழைய படங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றை அப்படியே காப்பி அடிக்க முயலக் கூடாது.

மறுபடியும் சொல்றேன், நான் யாரையும் விமர்சிக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. பழைய படங்களை கேலி செய்வது போல ரீமேக் படங்களை உருவாக்க் கூடாது என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன் என்றார் ராதாரவி.

யாருக்காவது புரியுதுங்களா சாமீ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil