»   »  ஏ.ஆர்.ரஹ்மானின் ஜன கன மன

ஏ.ஆர்.ரஹ்மானின் ஜன கன மன

Subscribe to Oneindia Tamil

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் நாட்டின் பிரபல பாடகர்கள், பாடகிகளின் குரலில் உருவாக்கப்பட்டுள்ள ஜன கன மன ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.

வந்தே மாதரம் ஆல்பத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாணியில் இசையமைத்து வெளியிட்டபோது நாடு முழவதும் பெரும் அலையை அது ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்தியாவின் 60வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஜன கன மன ஆல்பத்தை ரஹ்மான் வெளியிட்டுள்ளார். வந்தே மாதரத்தை உருவாக்கிய, பரத் பாலா, கனிகாவின் பரத்பாலா கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் ஜன கன மன இசைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளது.

ஜன கன மன வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் பாடலாசிரியர் குல்சார் கலந்து கொண்டு இசைத் தொகுப்பை வெளியிட்டனர்.

இந்த இசைத் தொகுப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பண்டிட் பீம்சென் ஜோஷி, பண்டிட் ஜஸ்ராஜ், டி.கே.பட்டம்மாள், லதா மங்கேஷ்கர், பண்டிட் ஹரி பிரசாத் செளராஸ்யா, உஸ்தாத் அம்ஜத் அலி கான், பூபென் ஹசாரிகா, ஆஷா போன்ஸ்லே, பண்டிட் சிவ் குமார் சர்மா, பண்டிட் விஸ்வ மோகன் பட், உஸ்தாத் சுல்தான் கான், அமான், அயான் அலி பங்கேஷ், ரவிகிருண், இ.காயத்ரி, பண்டிட் கார்த்திக் குமார், ஹரிஹரன், கவிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இதில் பாடியுள்ளனர்.

டிவிடி மற்றும் சிடி வடிவில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. தேசிய கீதத்தை மிகவும் வித்தியாசமான முறையில் இதில் படமாக்கி, பாடலைப் பதிவு செய்துள்ளனர்.

ஆல்பத்தின் முக்கிய அம்சமாக, உலகின் மிகவும் உயர்ந்த போர்க்களமாக கூறப்படும் சியாச்சின் பனி மலையிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்திய ராணுவத்தின் தியாகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தக் காட்சி அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், மிகவும் உயரிய வகையில் நமது நாட்டின் தியாகத்தையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த இசைத் தொகுப்பு அமைந்துள்ளது.

நமது தாய் மண்ணை நாட்டின் முன்னணிக் குரல்கள் மூலம் புகழ்ந்து பாடியிருப்பது பெருமையான ஒரு விஷயம். இந்த இசைத் தொகுப்புடன் நான் இணைந்தது பெரும் பாக்கியம் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil