»   »  மீண்டும் படம் எடுக்கும் ராஜ் டிவி!

மீண்டும் படம் எடுக்கும் ராஜ் டிவி!

Subscribe to Oneindia Tamil


முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான ராஜ் டிவி மீண்டும் சினிமா படம் எடுக்க தீர்மானித்துள்ளது.

Click here for more images

சன் டிவிக்குப் பிறகு சின்னத்திரைக்கு வந்த நிறுவனம் ராஜ் டிவி. தனக்கென தனி பார்வையாளர்களைக் கொண்டு முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.

முன்பு ராஜ் டிவி படத் தயாரிப்பிலும் இறங்கியது. விசுவின் இயக்கத்தில் 'சிகாமணி ரமாமணி' என்ற படத்தை ராஜ் டிவி தயாரித்தது. இப்படத்தில் எஸ்.வி.சேகர், மனோரமா, ஊர்வசி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அதன் பின்னர் படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் படத் தயாரிப்பில் ராஜ் டிவி குதிக்கிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக ராஜ் டிவியின் நிகழ்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் எம்.ரவீந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ரவீந்திரன் கூறினார். தொடர்ந்து ரவீந்திரன் கூறுகையில், முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் எடுப்பதாக இருந்தால் அதற்கு ரூ. 7 கோடி வரை செலாகும். எங்களால் ரூ. 10 கோடி வரை செலவிட முடியும்.

தொலைக்காட்சித் துறை இன்று போட்டி மிகுந்ததாக மாறியுள்ளது. திரைப்படங்களின் உரிமையை வாங்குவது மிகவும் கடினமாக மாறியுள்ளது. அதுவே சொந்தப் படமாக இருந்தால் எது குறித்தும் கவலைப்படத் தேவையில்லை.

மேலும் இதனால் கூடுதல் வருமானமும் நிறுவனத்திற்குக் கிடைக்கும். இதனால்தான் படத் தயாரிப்பில் தீவிரமாக இறங்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது 2,900 தமிழ்ப் படங்களின் ஒளிபரப்பு உரிமை உள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் படம் தயாரிக்க ராஜ் டிவி திட்டமிட்டுள்ளதாம்.

இதுதவிர 24 மணி நேர செய்தி சானலையும் விரைவில் ராஜ் டிவி அறிமுகப்படுத்தவுள்ளது. மியூசிக் சானலும் அவர்களின் திட்டத்தில் உள்ளதாம்.

தற்போது ராஜ் குழும சானல்களை பிரைம் பேண்ட்டில் ஒளிபரப்ப சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் மறுத்து வருகிறதாம். சன் குழுமத்தைச் சேர்ந்தது சுமங்கலி என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழக அரசின் அரசு கேபிள் கழகம் வந்த பிறகு இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் ராஜ் டிவி உள்ளது. மேலும் டிடிஎச் சேவையிலும் படிப்படியாக இறங்க ராஜ் டிவி தீர்மானித்துள்ளது. தற்போது சன் டிவியின் டிடிஎச் சேவையில் தங்களது சேனல்களையும் இணைக்க சன் குழுமத்துடன் பேச்சு நடத்தி வருகிறதாம் ராஜ் டிவி.

Read more about: cinema production, rajtv, suntv

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil