»   »  ஹாலந்தில் ரஜினியின் சுல்தான்

ஹாலந்தில் ரஜினியின் சுல்தான்

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக அனிமேஷன் படத்தில் நடிக்கும் சுல்தான் தி வாரியர் படத்தின் ஷூட்டிங் ஹாலந்தில் நடைபெறுகிறது.

இந்திய திரையுலக வரலாற்றில் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் அனிமேஷன் படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். அந்தப் பெருமை ரஜினிக்குக் கிடைத்துள்ளது.

அவரது இளைய மகள் செளந்தர்யா, சுல்தான் தி வாரியர் என்ற பெயரில் தனது தந்தையை வைத்து ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கி வருகிறார். இதற்காக ரஜினியை வைத்து பல காட்சிகளைப் படமாக்கி அதை அனிமேஷனில் கொண்டு வருகிறார்.

சுல்தான் தி வாரியர் படத்தின் ஷூட்டிங் தற்போது ஹாலந்தில் 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக செளந்தர்யா, தனது குழுவினருடன் ஹாலந்து சென்றுள்ளார். ரஜினியும் இந்த ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.

அங்கு நடைபெறும் ஷூட்டிங்கில் பங்கேற்று பலவிதமான காட்சிகளில் நடித்துக் கொடுக்கிறார் ரஜினி. பின்னர் படத்துக்கான டப்பிங்கும் ஹாலந்திலேயே நடக்கிறது. அதிலும் கலந்து கொண்டு பேசுகிறார் ரஜினி.

ஹாலந்து நாட்டின் வித்தியாசமான லொகேஷன்களின் பின்னணியில் ரஜினியை வைத்து விதம் விதமாக படம் பிடிக்கவுள்ளார் செளந்தர்யா. இந்தக் காட்சிகள் அனிமேஷன் படத்துக்கு பெரும் பலமாக இருக்கும் என்று செளந்தர்யா நம்புகிறார்.

இந்தப் படத்தை அனில் அம்பானியின் ஆட்லேப்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலந்து படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மகளுடன் அமெரிக்காவுக்கு வண்டியேறுகிறார் ரஜினி. அதேபோல அவரது மனைவி லதா, மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோர் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குப் பறந்து சென்று ரஜினியுடன் இணைந்து கொள்கிறார்கள்.

பின்னர் ஒரு மாதத்திற்கு ரஜினி குடும்பத்தினர் அமெரிக்காவில் ஓய்வெடுக்கிறார்கள். செப்டம்பர் முதல் வாரம் ரஜினி சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.

வழக்கமாக இமயமலைக்குத் தனிமைப் பயணம் மேற்கொள்வது சூப்பர் ஸ்டாரின் வழக்கம். ஆனால் இந்த முறை குடும்பத்தோடு அவர் அமெரிக்காவில் ஓய்வெடுக்கவுள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil