»   »  தொடரும் ரஜினி தரிசனம்

தொடரும் ரஜினி தரிசனம்

Subscribe to Oneindia Tamil

சிவாஜி பட ரிலீஸ் நெருங்குவதையொட்டி ரஜினி ரசிகர்களை சந்திக்கும் படலம் தொடர்ந்து வருகிறது.

கிட்டத்தட்ட 11 ஆண்டுளாக ரசிகர்களை சந்திக்காமல் இருந்து வந்தார் ரஜினி. அவ்வப்போது வாய்ஸ் கொடுத்தும், அறிக்கைகள் விட்டும் ரசிகர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் ரஜினி.

கடைசியாக ரஜினி ரசிகர்களை சந்தித்தது 1996ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போதுதான். அந்த சமயத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலையால் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்திலும், போயஸ் தோட்ட இல்லத்திலும் ரசிகர்களை சந்தித்து ஆலோசனை கேட்டார் ரஜினி.

அதன் பின்னர் அவர் போட்ட அரசியல் கணக்குகள் பொய்யாகிப் போனதால் அப்செட் ஆன ரஜினி, ரசிகர்களை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் தனது ரசிகர்களை திடீரென சந்திக்க ஆரம்பித்துள்ளார் ரஜினி. இதற்காக தனது இமயமலை பயணத்தைக் கூட ஒத்திவைத்தார் ரஜினி.

வியாழக்கிழமை ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்த ரஜினி ரசிகர்களை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். தலைவரின் இந்த திடீர் தரிசனம் ரசிகர்களை குஷிப்படுத்தியது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அன்று ரஜினியுடன் பேசினர், போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில், நேற்றும் ரஜினி மண்டபத்துக்கு வந்தார். அங்கு நடந்த பி.வாசுவின் தொட்டால் பூ மலரும் படப்பிடிப்பை ரசித்துப் பார்த்தார். பிற்பகலுக்கு மேல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை உள்ளே அழைத்துப் பேசினார். பிறகு ரசிகர்களை சந்தித்தார். அவர்களுக்கு போட்டோ எடுக்க போஸும் கொடுத்தார்.

கிட்டத்தட்ட 5 மணி நேரம் ரசிகர்களுக்காக செலவிட்டார் ரஜினி. இந்த முறை தனது சிவாஜி படம் குறித்தும் ரசிகர்களிடம் விளக்கினாராம் ரஜினி. அப்போது சிவாஜி படத்தை சூப்பர் ஹிட் ஆக்க வேண்டியது தங்களது பொறுப்பு என்று உற்சாகமாக குரல் கொடுத்தார்களாம் ரசிகர்கள்.

ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வரும் ரஜினி இந்த வாரத்தில் இமயமலைக்குச் செல்லலாம் எனத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil