»   »  சிவாஜி திருட்டு விசிடி ரெடி?:போலீஸ் ரெய்டில் சிக்கிய 30,000 கவர்கள்!

சிவாஜி திருட்டு விசிடி ரெடி?:போலீஸ் ரெய்டில் சிக்கிய 30,000 கவர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் நடந்த அதிரடி சோதனையில் ரஜினிகாந்த் நடித்து இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ள சிவாஜி படத்தின் திருட்டு விசிடி கவர்கள் சிக்கின. இதன் மூலம் சிவாஜி பட திருட்டு விசிடி விற்பனைக்கு ரெடியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

சிவாஜி படத்தின் பாடல்கள், அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே இணைய தளங்களில் தடாலடியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் இப்போது மொத்தப் படமும் திருட்டு விசிடி, டிவிடி ரூபத்தில் விற்பனைக்கு ரெடியாகி விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.


இதை நிரூபிக்கும் விதமாக சென்னை நகரில் நடந்த போலீஸ் சோதனையில் 30,000க்கும் மேற்பட்ட டிவிடி கவர்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ. 2 கோடி மதிப்புள்ள பிரிண்டிங் மெஷின்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி முனியப்பன் தெருவில் உள்ள அன்னை ஆப்செட் பிரிண்டர்ஸ் என்ற அச்சகத்தில் சிவாஜி மற்றும் பெரியார் பட திருட்டு விசிடிக்கள், டிவிடிக்களுக்கான கவர்கள் அச்சிடப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த அச்சகத்தில் சோதனை நடத்த கூடுதல் ஆணையர் ஜாங்கிட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார் அதிரடி சோதனையில் குதித்தனர்.

அப்போது, அந்த அச்சகத்தில் பெருமளவுக்கு விசிடி கவர்கள் அச்சிடப்பட்டு வந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட விசிடி தயாரிப்பு தொழிற்சாலை போல அது காணப்பட்டது. திருட்டு விசிடிகளுக்கான கவர்கள் அச்சிடப்பட்டு பண்டல் பண்டல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து போலீஸார் திடுக்கிட்டனர்.


பெரியார், சிவாஜி பட திருட்டு விசிடி கவர்களும் பெருமளவு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீஸார் கைப்பற்றி மூட்டை மூட்டைகளாக கட்டி லாரி ஒன்றில் கொண்டு சென்றனர். இவை தவிர பிலிம் சுருள்கள், நெகட்டிவ்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 2 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அச்சக உரிமையாளர் ஜோசப் செல்வாவின் தம்பி சகாயராஜன், டிசைனர் தமிழரசன், பிரிண்டர் ஜான்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜோசப் தலைமறைவாகி விட்டார். அவருக்கு வலை வீசப்பட்டுள்ளது. இதேபோல இவர்களுக்கு உதவியாக இருந்த பர்மா பஜார் வியாபாரிகள் பைசல், காஜா ஆகியோரும் தலைமறைவாகி விட்டனர்.

கடந்த 6 மாதங்களாகவே சிவாஜி திருட்டு விசிடியை வெளியிட சிலர் தீவிரமாக முயற்சித்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம் வளசரவாக்கம் பகுதியில் சிவாஜி படத்தின் காட்சிகள் அடங்கி திருட்டு டிவிடிக்கள் சிக்கின.

40 நிமிடங்களுக்கு ஓடக் கூடியதாக தயாரிக்கப்பட்டிருந்த இந்த டிவிடியில் பாடல் காட்சிளும், சில வசனக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து சிவாஜி பட பாடல்கள் இன்ட்ர்நெட்டில் லீக் ஆகின.

சிவாஜி வெளியாகும் தேதியை (மே 31) ஏவி.எம். நிறுவனம் அளித்துள்ள நிலையில் அப்படத்தின் திருட்டு விசிடி, டிவிடிக்கள் தயாராகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் நேற்று நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 30,000க்கும் மேற்பட்ட சிவாஜி திருட்டு டிவிடி கவர்கள் சிக்கியுள்ளன. இதன் மூலம் பெருமளவுக்கு திருட்டு டிவிடி, விசிடிக்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சோதனை குறித்து ஜாங்கிட் நமது நிருபரிடம் கூறுகையில்,

சிவாஜி படத்தின் திருட்டு விசிடி தயாரிப்பை சென்னை காவல்துறை ஆரம்பத்திலேயே தடுத்து விட்டது. சிவாஜி தவிர பெரியார், பருத்தி வீரன், உன்னாலே உன்னாலே ஆகிய படங்களின் திருட்டு விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 11 லட்சமாகும் என்றார்.

சந்திரமுகி வெளியானபோதும், அதற்கு முன்பாகவே திருட்டு விசிடிக்கள் வெளியாகி விட்டன. இந் நிலையில் சிவாஜி படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பு அதன் திருட்டு டிவிடி, விசிடி கவர்கள் சிக்கியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil