»   »  ரஜினியின் 5 கட்டளைகள்!

ரஜினியின் 5 கட்டளைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி பட ரிலீஸை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ஐந்து முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார்.

சிவாஜி பட ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் 15ம் தேதி எப்போது வரும் என ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினி ரசிகர்மன்றமே ரசிகர்களுக்காக நேரடியாக டிக்கெட்டுக்களை விநியோகித்துள்ளது. ரசிகர்கள் எந்தவித சிரமமும் இன்றி படத்தைப் பார்க்கவே இந்த ஏற்பாடு.

இந்த நிலையில், படம் திரையிடப்படும் அத்தனை தியேட்டர்களிலும் அமளி துமளியாக கொண்டாடி விட வேண்டும் என ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இதெல்லாம் தலைவர் காதுகளை எட்ட சட்டுப்புட்டென்று ஐந்து கட்டளைகளை ரசிக மக்களுக்குப் பிறப்பித்துள்ளாராம். தனது மன்ற செயலாளர் சத்யநாராயணா மூலமாக அனைத்து ரசிகர் மன்றங்களுக்கும் இந்த கட்டளைகள் பறந்துள்ளதாம்.

அந்த சர்க்குலரில், சிவாஜி பட ரிலீஸின்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளாராம் ரஜினி.

முதல் கட்டளை: படம் ரிலீஸாகும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. நாகரீகமான முறையில், அமைதியாக பட ரிலீஸின்போது நடந்து கொள்ள வேண்டும்.

2வது கட்டளை: போக்குவரத்து பாதிக்கும் வகையில், சாலைகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பெரிய பெரிய வளைவுகளை சாலைகளில் அமைக்கக் கூடாது.

3வது கட்டளை: அரசியல் சம்பந்தப்பட்ட வாசகங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனர்களை கண்டிப்பாக வைக்கக் கூடாது.

4வது கட்டளை: பிறரைக் காயப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் கூடிய பேனர்களை வைக்கக் கூடாது.

5வது கட்டளை: படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் தரக் கூடாது. மக்கள் அனைவரும் செளகரியமாக படம் பார்க்க உதவ வேண்டும்.

இந்த ஐந்து கட்டளைகளையும் ரசிகர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என ரஜினி அன்புக் கட்டளை இட்டுள்ளாராம். இதன் அடிப்படையில் சிவாஜி படத்தைக் கொண்டாட ரசிகர்கள் மாநிலம் முழுவதும் தயாராகி வருகின்றனராம்.

படம் திரையிடப்படவுள்ள தியேட்டர்களுக்கு மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்கள் விசிட் செய்து என்ன மாதிரியான ஏற்பாடுகளை செய்யலாம் என்று ஆலோசனைகளும் நடத்த ஆரம்பித்து விட்டனராம்.

ரஜினி சொன்னா ராகவேந்திரா சொன்ன மாதிரி, ரசிகர்கள் கண்டிப்பாக கடைப்பிடிப்பாங்கண்ணு நம்பலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil