twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா சக்கரவர்த்தி ரஜினி-கருணாநிதி புகழாரம்!

    By Staff
    |

    சிவாஜி படம் மூலம் ரஜினிகாந்த் இந்தியாவின் சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டார், இந்திய திரையுலகின் சக்கரவர்த்தியாக உருவெடுத்துள்ளார் என்று முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் 804வது தினத்தையொட்டி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சென்னையில் விழா எடுக்கப்பட்டது.

    இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பி.வாசு, நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, அவரது சகோதரர் ராம்குமார், தயாரிப்பாளர்கள் ஏவி.எம். சரவணன், கே.ஆர்.ஜி., ராமநாராயணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி ரஜினியை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

    கருணாநிதி பேசுகையில், நான் சந்திரமுகியை இன்றுதான் பார்த்தேன். அதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை. யாரும் படத்தைப் பார்க்க என்னைப் படம் பார்க்க கூப்பிடவில்லை. அதுதான் காரணம்.

    இருந்தாலும் என்றாவது ஒரு நாள் கூப்பிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம், இந்தப் படம் ஒரு நாளோடு அல்லது ஒரு வாரத்தோடு முடிந்து விடும் வகையிலான படம் அல்ல, வருடக் கணக்கில் ஓடக் கூடிய படம். அதனால்தான் இந்தப் படத்தைப் பார்க்க இத்தனை காலம் காத்திருந்தேன். எனது நம்பிக்கை வீண் போகவில்லை.

    இன்று சந்திரமுகியைப் பார்த்தேன், அனுபவித்துப் பார்த்தேன். படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் படத்திற்காக நிறைய உழைத்துள்ளனர், பங்களித்துள்ளனர். சூப்பர் ஸ்டாரைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை. கதையின் சக்தியே அவர்தான்.

    நமது பிரதமர் மன்மோகன் சிங், ரஜினிகாந்த்தைப் பாராட்டிப் பேசியதை இங்கு நினைவு கூருகிறேன். ஜப்பான் நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது, இந்தியாவில் மட்டும் ரஜினிகாந்த் சக்தி வாய்ந்த நடிகர் அல்ல, ஜப்பானிலும் கூட அவருக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது என்றார். அவரது பேச்சைக் கேட்டபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

    ரஜினியின் வெற்றியின் ரகசியம் என்ன? அவரது ஸ்டைலா, அருமையான நடிப்புத் திறமையா, தொழில் தர்மம் மீறாத குணமா?. இவை எல்லாவற்றையும் விட அவரது எளிமைதான் ரஜினியின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

    எப்போது அவர் வெற்றிகளைக் கண்டு அகம் குளிர்ந்து போய் ஆடியதில்லை. இந்தப் படத்தின் முழு வெற்றிக்கும் முதல் காரணம் ரஜினிதான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் அதை பெரிதுபடுத்தி நடந்து கொண்டதில்லை. அவரது குணத்தால் மக்களின், ரசிகர்களின் நெஞ்சங்ளில் நிரந்தரமான இடத்தைப் பிடித்து வைத்துள்ளார். இவைதான் ரஜினியின் வெற்றி ரகசியம்.

    கடந்த 20 வருடங்களாக எனக்கும் ரஜினிக்கும் இடையே ஆத்மார்த்தமான நட்பு நிலவி வருகிறது. ஆனால் எல்லா நேரங்களிலும் அதை நாங்கள் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. எப்போதாவது மின்னல் போல அது வெளிப்படும். ஆனால் எங்களின் நட்புறவு உறுதியானது, சக்தி வாய்ந்தது.

    இந்திய வரலாற்றில் மூன்று சிவாஜிகள் உண்டு. ஒருவர் மராட்டிய மாவீரன் சாம்ராட் சிவாஜி. இந்தியாவின் துணிச்சலை, உலகுக்கு உணர்த்தியவர் இந்த மராட்டிய மாவீரன்.

    இன்னொருவர் நம்முடைய நடிகர் திலகம் சிவாஜி. இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர். மூன்றாவது சிவாஜி நமது சூப்பர் ஸ்டார் சிவாஜி ரஜினி. இந்தியத் திரையுலகின் சக்கரவர்த்தியாக திகழ்கிறார் ரஜினி. இந்திய வரலாற்றிலும் தனது பெயரை உறுதியாக பதித்து விட்டார்.

    உலக அரங்கில் இந்திய சினிமாவின் முகமாக ரஜினி திகழ்கிறார் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    ரஜினி மாபெரும் மனிதர். அனைத்து நல்ல குணங்களும் அவரிடம் உள்ளன. தவறு செய்யாத, தவறு செய்யத் துணியாத நபர் ரஜினி. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளளாம். சிவாஜி படத்திற்கு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து வெளியாகும் செய்திகளை நான் விடாமல் படித்து வருகிறேன்.

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜியை முதலில் பார்த்து ரசித்தவன் நான் தான் என்பதில் எனக்குப் பெருமை. சிவாஜி புதிய உச்சத்தை அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார் கருணாநிதி.

    முன்னதாக ரஜினிகாந்த்துக்கு முதல்வர் கருணாநிதி தங்கத்தால் ஆன வீர வாளை பரிசாக வழங்கினார். அதை ரஜினி தூக்கிப் பிடித்துக் காட்டி கூடியிருந்தவர்களின் கரகோஷத்தை அள்ளிச் சென்றார்.

    முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவியார் கமலா அம்மாள், ரஜினியின் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ், ரஜினியின் முன்னாள் நாயகி ஸ்ரீதேவி, அவரது மகள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சந்திரமுகியின் 804வது நாள் விழாவை நடிகை சினேகா தொகுத்து வழங்கினார். அவருக்கு முதல்வர் கருணாநிதி நினைவுப் பரிசு வழங்கினார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X