»   »  இந்திக்கு போகும் ரஜினி படங்கள்!

இந்திக்கு போகும் ரஜினி படங்கள்!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தால் ரஜினிக்கு வட இந்தியாவில் திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. அவரது பழைய ஹிட் படங்களை தூசு தட்டி டப் செய்யும் ஆர்வம் இந்தி பெல்ட்டில் அதிகரித்துள்ளதாம்.

சிவாஜி படத்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இந்தி பெல்ட் எனப்படும் வட மாநிலங்களில் சிவாஜி, இந்திப் படங்களுக்கு நிகராக ஓடி சாதனை படைத்துள்ளது.

தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே, நாக்பூர் ஆகிய ஊர்களில் 40 தியேட்டர்களில் சிவாஜி ஓடிக் கொண்டுள்ளதாம். மும்பையில் சிவாஜியை, இந்தியில் டப் செய்து வெளியிட்டிருந்தால் மிகப் பெரிய வசூல் கிடைத்திருக்கும் என்று இந்தித் திரையுலகினர் ஃபீல் பண்ணுகிறார்களாம்.

அமிதாப் பச்சன் படத்தையே ஓவர்டேக் செய்யும் வகையில் சிவாஜி ஓடியதைப் பார்த்து இந்திக்காரர்கள் அசந்து போய் நிற்கிறார்கள். சிவாஜியைத் தொடர்ந்து வட இந்தியாவிலும் ரஜினிக்கு ரசிகர்கள் பெருகி விட்டனர்.

இதை உணர்ந்த இந்திப் பட விநியோகஸ்தர்கள் ரஜினிகாந்த் நடித்த பழைய ஹிட் படங்களை டப் செய்து வெளியிட தீர்மானித்துள்ளனர். குறிப்பாக பாட்ஷா, முத்து, படையப்பா என மெகா ஹிட் படங்களை இந்தியில் டப் செய்ய அவர்கள் விரும்புகின்றனர். இதற்கான உரிமைகளை வாங்கவும் அவர்கள் முயன்று வருகின்றனர்.

மும்பையைச் சேர்ந்த ஒரு விநியோகஸ்த நிறுவனம், ரஜினியின் படையப்பா, அண்ணாமலை, முத்து ஆகிய படங்களை இந்தியில் டப் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல ஏவி.எம். நிறுவனமும், முன்பு ரஜினி நடித்த சில சூப்பர் ஹிட் படங்களை இந்தியில் டப் செய்யும் திட்டத்தில் உள்ளதாம்.

சிவாஜியால் ஏற்பட்ட மவுசால், ரஜினி படங்களின் டிவிடிகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். அதிலும் பாட்ஷா பட டிவிடி விற்பனை படு சூடாக உள்ளதாம்.

சிவாஜி ரிலீஸுக்குப் பிறகு வட இந்தியாவில் ரஜினி பட டிவிடிக்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.

இந்தியில் பிரபலமான மூவி சேனலான பிலிமி, ரஜினி அலையைப் பயன்படுத்தி பல காரியங்களை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் அசுதோஷ் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் இந்திக்காரர்கள் ரஜினியை 2வது ஹீரோவாத்தான் போடுவோம் என பிடிவாதமாக கூறி வந்தனர். ஆனால் இன்று ரஜினியின் படங்களைத் தேடி ஓடி வருகிறார்கள். இதுதான் சினிமா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil