»   »  இசைஞானி...ரஜினி...

இசைஞானி...ரஜினி...

Subscribe to Oneindia Tamil
Click here for more images
இசைஞானி இளையராஜாவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் என சந்தித்துப் பேசியுள்ளார். இதன் மூலம் இருவரும் மீண்டும் இணையப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இசைஞானியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் கலைஞானி கமல்ஹாசன். இன்னொரு மிக நெருங்கிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ராஜாவும், கமலும் சேர்ந்தால் சினிமா பற்றித்தான் நிறையப் பேசுவார்கள். ஆனால் ரஜினியும், ராஜாவும் இணைந்தால் ஆன்மீகம்தான் அவர்களது பேச்சில் கொடி கட்டிப் பறக்கும்.

இருவரும் ஆன்மீகத்தில் அதி 'தீவிரவாதிகள்' என்பதால், ஆன்மீக அலசலில் உட்கார்ந்தால் நேரம் காலம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். மாதத்திற்கு இரண்டு முறையாவது இந்த இரு 'இறைஞானிகளும்' சந்தித்துக் கொள்வது வழக்கமானது.

இருவரும் சினிமா ரீதியாக சில வருடங்களாக பிரிந்திருந்தாலும் கூட, இவர்களின் நட்பு பன்னெடுங்காலமாக பண்பட்டு, தொன்று தொட்டு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

ஏ.ஆர். ரஹ்மானின் வரவால்தான் ரஜினியும், ராஜாவும் பிரிந்ததாக சில புரியாதவர்கள் கூறியதுண்டு. ஆனால் அது உண்மை அல்ல.

இருவரும் இணைய சமீபத்தில் ஒரு வாய்ப்பு வந்தது. அது சந்திரமுகி. இப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என ரஜினி விரும்பினார். நேரிலும் போய்க் கேட்டார். ஆனால் மென்மையாக மறுத்து விட்டார் ராஜா. அதேசமயம், வித்யாசாகரை வைத்து செய்யுங்கள் என்று கூறி படம் வெற்றி பெற ஆசியும் வழங்கினார்.

அத்தோடு நில்லாமல் படத்தின் ஆடியோ ரிலீஸுக்கும் வந்திருந்து சிறப்பித்தார். சந்திரமுகி ஆடியோ ரிலீஸின்போது இதை ரஜினியே எல்லோருக்கும் தெரிவித்தார்.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு இளையராஜாவை பிரசாத் ரெக்கார்டிங் தியேட்டருக்குச் சென்று ரஜினி சந்தித்துள்ளார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதுகுறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. ரஜினியின் அடுத்த படத்திற்கு ராஜாதான் இசையமைக்கப் போகிறார் என்பது அதில் ஒன்று. அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது ராஜா என்பது இன்னொரு யூகம்.

ஒரு வருடத்திற்கு முன்பு ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார் இளையராஜா. ஆனால் ஏதோ சில காரணங்களினால் அது கை கூடவில்லை.

இந்த நிலையில் இருவரும் சந்தித்துப் பேசியிருப்பதால் மறுபடியும் இருவரும் இணையப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமான சந்திப்பாக இதை கருதி விட முடியாது என்றும் திரையுலகினர் கூறுகிறார்கள்.

ராஜாவும், ரஜினியும் இணைந்து கடைசியாக கொடுத்த படம் வீரா. மாபெரும் வெற்றிப் படமான வீரா, பாடல்களிலும் பட்டையைக் கிளப்பியது. கேசட் விற்பனையில் பெரும் சாதனையும் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் மீண்டும் இணைவார்களா, விருந்து பரிமாறுவார்களா?

Read more about: illayaraja, rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil