»   »  சிவாஜிக்கு கேரளாவிலும் வரிச் சலுகை

சிவாஜிக்கு கேரளாவிலும் வரிச் சலுகை

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்திற்கு கேரளாவில் 10 சதவீத வரி விலக்கு அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி ஜூன் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் மட்டும் 35 மையங்களில் சிவாஜி திரையிடப்படுகிறது. இது ஹாலிவுட் படத்திற்கு இணையான ரிலீஸ் என்று கூறப்படுகிறது.

சிவாஜி படத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கேரளாவிலும் சிவாஜிக்கு வரி விலக்கு கிடைத்துள்ளது.

கேரளாவில் திரையிடப்படும் பிற மொழிப் படங்களுக்கு அங்கு வரி விதிக்கப்படுகிறது. பெருநகரங்களில் திரையிடப்படும் பிற மொழிப் படங்களுக்கு 35 சதவீத பொழுதுபோக்கு வரியும், நகராட்சிகளில் திரையிட்டால் 30 சதவீத வரியும், கிராமப்புறங்களில் 25 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் இது அமல்படுத்தப்படுகிறது. மலையாளப் படங்களுக்கு வெறும் 10 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், சிவாஜி படத்தின் கேரள மாநில விநியோக உரிமையை வாங்கியுள்ள ஜானி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

வரி விதிப்பில் பாரபட்சம் காட்டக் கூடாது, சிவாஜி உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கும் மலையாளப் படங்களைப் போலவே 10 சதவீத வரி விதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சிவாஜி உள்ளிட்ட பிற மொழிப் படங்களுக்கும் 10 சதவீத வரியே விதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் சிவாஜிக்கு 10 சதவீத பொழுது போக்கு வரியே விதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே, சிவாஜியை கர்நாடகத்தில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய அங்குள்ள கன்னட அமைப்புகள் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த இந்த சாதகமான நிகழ்வுகள் காரணமாக சிவாஜி யூனிட்டும், ஏவி.எம். நிறுவனமும் நிம்மதி அடைந்துள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil