»   »  சந்திரமுகியில் நடித்தது பாக்யம்-ரஜினி

சந்திரமுகியில் நடித்தது பாக்யம்-ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த பாக்கியம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் 804வது நாள் விழா நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது. காமராஜர் அரங்கத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பாராட்டிப் பேசி, கலைஞர்களுக்கு கேடயங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில் வழக்கம் போல ஒரு கதையைச் சொல்லி அசத்தினார். ரஜினி பேசுகையில், இப்படி ஒரு விழா இனிமேல் எனது வாழ்க்கையில் நடக்குமா என்பது சந்தேகம்தான். ஹரிதாஸ் வந்து 52 வருடங்கள் கழித்து சந்திரமுகி இந்த சாதனையைச் செய்துள்ளது. இது மிகப் பெரிய சாதனைதான்.

அதிலும், இந்த சரித்திர விழாவில் முதல்வர் கருணாநிதி அவர்கள் வந்திருந்த வாழ்த்துவது, மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. எனது குருநாதர் கே.பாலச்சந்தர் வந்து வாழ்த்தியுள்ளார். நான் யாரைப் பார்த்து வளர்ந்தேனோ, அந்த நண்பர், சக நடிகர் கமல்ஹாசன் வந்து வாழ்த்தியதும் சந்தோஷம்.

சந்திரமுகி இத்தனை நாட்கள் ஓடியது ஏன் என்று நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் படத்தை குருநாதர் பாலச்சந்தர் அருகில் அமர்ந்துதான் பார்த்தேன். படம் பார்த்து முடியும் வரை அவர் பேசவே இல்லை. ஒன்றும் சொல்லவில்லை. படம் முடிந்ததும், அவருடைய இரும்புத் தடியை எடுத்து என்னைத் தட்டிக் கொடுத்து பென்டாஸ்ட்டிக் என்றார். அப்போதே எனக்கு குளிர் விட்டுப் போய் விட்டது.

சந்திரமுகியின் கதை புதிது, சீன்கள் புதிது, சூழல் புதிது. படத்தில் புதுமை இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அது சந்திரமுகியில் இருந்தது. நட்பு, குரோதம், காதல் என எல்லாமே இருந்தது.

படத்தில் வேட்டையன் வேடத்தை முதலில் பெரிதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தில் நீளம் பிரச்சினையாக இருந்தது. வேட்டையன் சீன்களை வைத்தால் சந்திரமுகியை மக்கள் மறந்து விடுவார்கள் என்று வாசு கூறினார்.

ஆனால் பிரபு வேட்டையன் சீன்கள்தான் வேண்டும், மற்ற சீன்களை எல்லாம் தூக்குங்கப்பா என்று கூறினார். அப்போது ராம்குமார் குறுக்கிட்டு, இல்லை பிரபு, வேட்டையன் சீன்களைத் தூக்கி விடலாம் என்றார். அதை பிரபு அப்படியே ஏற்றுக் கொண்டார்.

அண்ணனுக்கு அவர் கொடுத்த மரியாதை அது. அந்த வீட்டில் எப்படி அண்ணன், தம்பியை வளர்த்திருக்கிறார்கள் பாருங்கள்.

வாசு இது ரஜினி படம் என்றார். இது உங்கள் படம், நீங்கள்தான் இதற்குத் தாய், தயாரிப்பாளர்கள்தான் தந்தை, இந்த படத்தில் நான் நடித்தேன் என்ற பாக்கியம் போதும்.

சந்திரமுகி படம் உருவானபோது, இது சரியா வராதுப்பா என்று பலரும் கூறினர். ஒரு கதை உண்டு. ஒரு பெரிய மலை. அதில் மூன்று தவளைகள் இருந்தன. மலையின் வழி நெடுக பாம்பு, தேள்கள் இருக்கின்றன. போகாதே என்று பயம் காட்டினார்கள்.

ஒரு தவளை 100 அடி ஏறியதும் விழுந்து விட்டது. இன்னொரு தவளை 300 அடி ஏறியதும் விழுந்தது. இன்னொரு தவலை மட்டும் மலை உச்சியைத் தொட்டது.

அந்தத் தவளைக்கு காது கேட்காது. அது மாதிரிதான் ரஜினிக்கும் காது கேட்காது. இது சிவாஜி, என்.டி.ஆர், கலைஞர் போன்றவர்களிடம் நான் கற்றுக் கொண்டது.

பேசுகிறவர்கள் பேசட்டும், வாழ்க்கையில் சில மனிதர்கள் மத்தியில் செவிடாகி விட வேண்டும். அப்பதான் சாதிக்க முடியும். இல்லைன்னா வாழ்க்கை வீணாகி விடும் என்றார் ரஜினி.

கமல்ஹாசன் பேசுகையில், எனக்கு நண்பராக மட்டுமல்லாது, போட்டியாளராகவும், சிறந்த அறிவுரை கூறுபவராகவும், அது தவிர என்னுடைய படங்களுக்கு தீவிர ரசிகர் மற்றும் விமர்சகராகவும் இருப்பவர் ரஜினிகாந்த்.

எங்களுடைய நட்பு பாலசந்தர் என்ற மரத்தின் நிழல். இந்த நிழல்களை பார்த்து யாரும் ஆச்சர்யபட மாட்டார்கள். நிழலை யாரும் பிரிக்க முடியாது, அதனோடு சேர்வதற்குத் தான் வருவார்கள். அதே போலத் தான் நானும், ரஜினியும்.

நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்பது, இருவரும் சேர்ந்து ஒருமனதாக எடுத்த முடிவு. இது ரஜினிக்கும்,எனக்கும் உள்ள அற்புதமான நட்பையும், சவுகரியமான நெருக்கத்தையும் குறிக்கிறது. அதிர்ஷடத்தால் வந்த நட்பல்ல எங்களுடையது.

கலைஞர் அவர்களுக்கும், நடிகர் திலகத்துக்கும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அவர்களை போல் தான் நாங்கள் இருவரும். எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் தான் கலைஞரும், நடிகர் திலகமும்.

இந்த விழா ஒரு சரித்திரமிக்க விழா. ரஜினி அவர்களுக்கு இன்னமும் இது மாதிரி பல வெற்றிகள் வரும். இத்துடன் போதும் என்று சொல்வார், நான் கூடாது என்பேன். ரஜினி சினிமாவை விட்டு போகவே கூடாது. அவர் இன்னும் நீண்ட நாட்கள் திரையுலகில் நடிக்க வேண்டும் என்றார் கமல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil