»   »  மக்கள் ஏற்றுக் கொண்டாடிய கலைப்பயணம் - இரஜினிகாந்த் #HBDSuperstarRajini

மக்கள் ஏற்றுக் கொண்டாடிய கலைப்பயணம் - இரஜினிகாந்த் #HBDSuperstarRajini

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியின் கலை வாழ்க்கை சிறக்க காரணம் மக்கள் தான் !!- வீடியோ

- கவிஞர் மகுடேசுவரன்

'ஆசையைக் காத்துல தூதுவிட்டு...' என்னும் பாடல் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அந்தப் பாடலின் கொட்டொலியைக் கேட்டுவிட்டால் அதைப் பார்க்காமல் கடந்துபோக முடியாது. அமர்ந்து பாடற்காட்சியில் மனஞ்செலுத்தினேன். உதட்டசைவே இல்லாமல் மோகப்பார்வை பார்த்துக்கொண்டே நாயகி ஆட. இரஜினிகாந்தின் முகபாவனை காட்டப்படுகிறது. பெண்மோகத்தால் வீழ்த்தப்படாத, நெடுந்தூரம் ஓடிய களைப்பு தெரிகின்ற, எதிலும் பட்டும் படாத போக்குடைய, இறுக்கமோ வெறுப்போ தெரியாத, யாவுமறிந்ததுபோல் கண்விழி மேல்செருகிய மெய்ப்பாடு ஒன்றை அவரிடம் காண முடிந்தது. பாடலில் அந்தப் பாவனையுடன் பத்திருபது சுடுவுகளுக்கு மேல் அவர் காட்டப்படுகிறார். எந்தச் சுடுவிலும் அந்தப் பார்வையோ முகக்குறியோ மாறவில்லை. தேர்ச்சியான நடிகரிடம் மட்டுமே வெளிப்படும் அட்டகாசமான முகபாவனை அது. அந்தப் பாடல் நாயகிக்கானது. பத்திருபது தோழியர் புடைசூழ ஆடப்படுவது. இரஜினிகாந்துக்கு அப்பாடலில் எந்தப் பங்கேற்பும் இல்லை. ஆனால் அந்தப் பாடலில் அவர் உருவாக்கித்தரும் மனநிலைதான் பார்வையாளனை நிரப்பும். இதுதான் இரஜனிகாந்த் தம் பார்வையாளர்களைக் கட்டிப்போட்ட இடம்.

நல்ல நகைச்சுவைப் படங்களை எடுப்பதில் பாலசந்தர்க்குத் தீராத ஆர்வமுண்டு. அதற்கு நேர் எதிரான அழுகதைப் படங்களிலும் விற்பன்னர். சோகப்படமொன்றில் உடல் தளர்ந்த வேடத்தில் அறிமுகமான இரஜினிகாந்த், அவ்வறிமுகத்திற்கு முற்றிலும் எதிரான நாயக வேடங்களில் திறமை காட்டி உயர்நட்சத்திரமானது எப்படி ? முழுக்க முழுக்க அவருடைய நடிப்பாற்றலால்தான். இங்கே நன்கு நடித்திருக்கிறார் என்று அடையாளம் காணத்தக்கவாறு பிற நடிகர்கள் நடித்திருப்பார்கள். இவ்விடத்தில் நன்றாக நடித்திருக்கிறார் என்று நாம் உணரவே முடியாதவாறு நம்மை ஒன்றச் செய்துவிடுபவர் இரஜினிகாந்த்.

Rajinikanth, the people's artist

முள்ளும் மலரும் திரைப்படத்தில் அவர் யோசிப்பதைப்போல் காட்டும் முகபாவனைகளில் நமக்கு இதயம் படபடவென்று துடிக்கும். 'இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்....' பாடலை இப்பொழுது வேண்டுமானாலும் ஒருமுறை பாருங்கள். மதுக்குடியில் ஒரு நாட்டுப்புறத்தான் எப்படி வெறியாட்டு வந்தவனைப்போல் ஆடுவானோ அப்படி ஆடியிருப்பார். அந்தப் பாட்டுக்கு இரஜினிகாந்த் ஆடியதைப்போன்ற அடவுகளை வேறெந்த திறமையான நடனக் கலைஞராலும் ஆட முடியுமா என்பது ஐயந்தான். நெற்றிக்கண்ணில் மகனையும் தந்தையையும் வெவ்வேறு நடிகர்களாகத்தான் பார்க்க முடியும். ஒரே நடிகர்தான் இரு வேடங்களிலும் நடிக்கிறார் என்பதை உணர முடியாதவாறு தம் நடிப்பால் மறக்கடித்தார்.

Rajinikanth, the people's artist

நகைச்சுவையில் திறம்பட நடிக்க வல்லார் எவரோ அவரே மிகச்சிறந்த நடிகர். திரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்குக்கானவை என்ற முடிவுக்கு வருகையில் நகைச்சுவைக் காட்சிகளே முதன்மையான இடத்திற்கு வருகின்றன. அந்தத் தன்மையால்தான் நகைச்சுவைக் காட்சிகளை மட்டும் தனியே பிரித்தெடுத்துத் தொடர்ந்து பார்க்கின்றோம். அதில் நமக்குச் சோர்வே ஏற்படவில்லை. நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு நடித்தவற்றை இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இன்றைய இளைய தலைமுறை நடிகர்களிடம் சுட்டுப்போட்டாலும் வராத நடிப்பு எது என்றால் அது நகைச்சுவை நடிப்புத்தான். பிறவகை நடிப்புகள் எல்லாம் வந்துவிட்டதா என்று கேட்காதீர்கள். அந்த இடைவெளியை அவர்களால் இட்டு நிரப்பவே முடியவில்லை என்பதை அவர்களும் அறிவார்கள். ஆனால், இரஜினிகாந்த் நகைச்சுவைக் காட்சிகளில் பிய்த்து உதறுகிறார். அவருடைய நாயக மதிப்பும்கூட நகைச்சுவைக் காட்சிகளை இன்னொரு மடங்கு கூடுதலாக எடுபட வைக்கிறது. அவருக்குத் தீனிபோடும் நகைச்சுவைக் காட்சிகளை நம் இயக்குநர்கள் போதுமான அளவுக்கு உருவாக்கித் தரவில்லை என்றே கூறுவேன்.

Rajinikanth, the people's artist

எடுத்துக்காட்டாக இரண்டு காட்சிகளைப் பார்ப்போம். 'தம்பிக்கு எந்த ஊரு' திரைப்படத்தில் பாம்பைக் கண்டு அச்சப்படும் காட்சி. இளமைக் கதையொன்றைப் படிக்கும் அவசரத்தில் இருக்கும்போது பாம்பு ஒன்று உள்ளே வந்து கட்டிலில் படமெடுத்துச் சீறிக்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்ததும் பேச்சு வராமல் அச்சத்தின் உச்சத்திற்கே சென்று 'ப்பா... ப்பா...' என்று பயந்து நடுங்கும் காட்சி. முகத்து நரம்புகள் அனைத்தும் புடைக்க கண்களின் கருமணிகள்வரை அச்சத்தால் சுருக்கி விரித்து நடித்த அந்தக் காட்சி. இன்றைக்குப் பார்த்தாலும் சிரிப்பு வரும். வெறும் சிரிப்பு இல்லை, அடக்க முடியாத சிரிப்புத்தான் வரும். இதே காட்சி அண்ணாமலை திரைப்படத்தில் வைக்கப்பட்டபோது பாம்பு தோள்மீது ஏறிக்கொள்வதாகச் செய்திருந்தார்கள். அஞ்சவும் வேண்டும், அஞ்சாததுபோல் பெண்களிடம் காட்டிக்கொள்ளவும் வேண்டும். அக்காட்சியிலும் அதே சிரிப்புத்தான். உழைப்பாளி திரைப்படத்தில் பதினாறு வயசுப் பெண்ணை மணம்செய்து கொண்ட நிலக்கிழார் வேடத்தில் ஒரு காட்சி. "மூட்டு வலி... இடுப்பு வலி... முதுகு வலி... பெண்டைக் கழட்டறாங்க... பகல்ல எல்லாம் சீதாவா இருப்பாங்க... ராத்திரியானா சிலுக்கா மாறிடறாங்க...," என்று கவுண்டமணியிடம் நொந்து கூறுவது.

Rajinikanth, the people's artist

இரஜினிகாந்த் நடித்த படங்களில் மிகச்சிறப்பான படங்கள், எந்தப் பட்டியலிலும் விடமுடியாத படங்கள் பல இருக்கின்றன. முள்ளும் மலரும் திரைப்படத்தைக் குறிப்பிடாத தரமொழியாளர்கள் இல்லை எனலாம். எங்கேயோ கேட்ட குரல் என்னும் படம் அவர் நடித்தவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது. மனைவியை மாற்றானிடம் தோற்கும் வேடம். பார்வையற்றவளைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூர்க் கீழ்மதியாளர்களால் வஞ்சிக்கப்படுபவராக நடித்த கை கொடுக்கும் கையை மறக்க முடியுமா ? நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் எண்ணி ஐந்தாறு காட்சிகள்தாம். அவற்றிலும் அவர் தனித்தே தெரிந்தார். தளபதியில் இரஜினிகாந்த் வெளிப்படுத்திய உடல்மொழி வேறு தரத்தில் இருந்ததை நுண்மையானவர்கள் உணர்வார்கள். உருகி உருகிக் காதலிக்கும் மென்மனத்தினனாக நடித்த புதுக்கவிதை என்ற படத்தை இப்போதும் பார்க்கலாம்.

Rajinikanth, the people's artist

தமிழ்த் திரையுலகில் தகுதியானவர்கள்தாம் மக்களால் விரும்பப்படும் பெரிய நட்சத்திரங்கள் ஆகமுடியும். தகுதியற்றவர்கள் தாக்குப்பிடித்ததே இல்லை. தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து அதுதான் நடந்திருக்கிறது. ஒரு நடிகரைத் தங்களில் ஒருவராக மக்கள் ஏற்றுக்கொண்ட பிறகுதான் அவருடைய நட்சத்திர வாழ்க்கை தொடங்குகிறது. நம்முடைய கணிப்புக்கும் பார்வைக்கும் அப்பால் மண்ணோடும் அன்றாடப் பாடுகளோடும் தொடர்பு நீங்காத இடத்தில் அந்த மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான் இரஜினிகாந்துக்கு தொடர்ச்சியான ஏறுமுகத்தில் அமைந்த மிக நீண்ட கலை வாழ்க்கை வாய்த்தது.

English summary
Poet Magudeswaran's special article on Rajinikanth on his birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X