»   »  ராஜீவ் கொலை, 2 படம்

ராஜீவ் கொலை, 2 படம்

Subscribe to Oneindia Tamil

ராஜீவ் காந்தி கொலையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இரு படங்கள் இந்த மாதத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வந்தபோது அந்த கொடும் சம்பவம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் ராஜீவ்.

இந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி குற்றப்பத்திரிக்கை என்ற பெயரில் புதிய படத்தை இயக்கினார்.

ஆனால் படத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான காட்சிகள் இருப்பதாகக் கூறி படத்திற்கு சான்றிதழ் தணிக்கை வாரியம் மறுத்து விட்டது. இதையடுத்து வழக்கு தொடர்ந்தார் படத்தின் தயாரிப்பாளர்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்த குற்றப்பத்திரிக்கை ஒரு வழியாக தடைகள் நீங்கி திரைக்கு வர வழி கண்டது. இப்படம் நாளை மறு நாள் திரையிடப்படுகிறது.

படத்தில் ராம்கி, ரகுமான், ரோஜா (மூன்று பேரும் இப்போது ரிடயர்ட் ஆகி விட்டார்கள்) ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் மன்சூர் அலிகான் ஒற்றைக் கண் சிவராசன் கேரக்டரில் நடித்துள்ளார்.

மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் குற்றப்பத்திரிக்கை. ஆனால் பல ஆண்டு தாமதத்திற்குப் பின் இப்போதுதான் தியேட்டருக்கு வருகிறது. சூடு ஆறிப் போய் விட்டாலும், படத்தின் கதை மிகவும் பயங்கரமான ஒரு சம்பவத்தின் பின்னணி என்பதால் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல இன்னொரு படம் குப்பி. சிவராசன், சுபா பெங்களூரில் தலைமறைவாக இருந்தபோது நடந்த சம்பவங்களைப் பற்றிய படம் இது. பெங்களூருக்குத் தப்பி வந்தது முதல் போலீஸ் என்கவுண்டரின்போது சயனைடு சாப்பிட்டு இறந்தது வரையிலான நிகழ்வுகளைப் பற்றிய படம் இது.

கன்னடத்து இயக்குநர் ரமேஷ் இப்படத்தை சயனைட் என்ற பெயரில் ஏற்கனவே கன்னத்தில் இயக்கினார். அதைத்தான் இப்போது குப்பி என்ற பெயரில் டப்பிங் செய்துள்ளனர்.

டிவி தொடர்களில் நிறைய நடித்துள்ள மாளவிகா, சுபா வேடத்தில் நடித்துள்ளார். தமிழுக்காக சில புதிய காட்சிகளை இணைத்துள்ளாராம் ரமேஷ். இப்படம் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ராஜீவ் கொலைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால் தமிழ் திரையுலகில் புதிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil