»   »  ராஜ்கிரணின் ஆதாம் ஏவாள்

ராஜ்கிரணின் ஆதாம் ஏவாள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஜ்கிரண் மீண்டும் ஆக்ஷன் சொல்ல வருகிறார். ஆதாம் ஏவாள் என்ற படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார் ராஜ்கிரண்.

தயாரிப்பாளராக இருந்து, இயக்குநராக, நடிகராக அவதாரம் எடுத்து ஒரு காலத்தில் அதகளப்படுத்தியவர் ராஜ்கிரண். 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரன விநியோகஸ்தராக இருந்தவர் ராஜ்கிரண். பின்னர் தயாரிப்பாளராக அறிமுகமானார். ராசாவே உன்னை நம்பி என்ற படத்தை தயாரித்தார்.

படம் சூப்பர் ஹிட் ஆனது. இசைஞானி இளையாராஜாவின் மீது வெறித்னமான பிரியம் கொண்டவர் ராஜ்கிரண். இதற்காகவே தனது படங்களுக்கு ராஜா என்று வருவது போல பெயர் வைப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தார். அரண்மனைக் கிளி மட்டும் இதில் விதி விலக்கு.

ஹீரோவாக வேண்டும் என்றால் தமிழ் சினிமாக்காரர்கள் எழுதி வைக்காமல் கடைப்பிடித்து வந்த இலக்கணங்களை தூக்கி தூரப் போட்டவர் ராஜ்கிரண். கடா மீசை, ஏத்திக் கட்டி வேட்டி, கோடு போட்ட அண்டர்வேர், தன் முன் குவித்து வைக்கப்பட்ட சோற்றுக்குள் புதைந்து கிடக்கும் சிக்கனையும், ஆட்டு எலும்புகளையும் கடக் முடக் என கடித்துக் காலி செய்யும் வித்தியாச நடிகராக அறிமுகமாகியவர் ராஜ்கிரண்.

பி மற்றும் சி சென்டர்களில் ராஜ்கிரண் படங்களுக்கு அமோக வரவேற்பு இருந்தது. குறிப்பாக இவரது படங்களில் பாடல்கள் தித்திக்கும் தேன் மழையாய் இருந்ததால் ராஜ்கிரண் படங்களுக்கு கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு இருந்தது.

90களில் ரஜினிக்கு அடுத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர் ராஜ்கிரண் மட்டும்தான் (அதேபோல ராமராஜனும் அந்த சாதனையை வைத்திருந்தார்). வடிவேலு என்கிற அபாரமான நகைச்சுவைப் புயலை சினிமாவுக்குக் கொடுத்தவரும் ராஜ்கிரண்தான்.

படு வேகமாகப் போய்க் கொண்டிருந்த ராஜ்கிரண் திரை வாழ்க்கையில் மாணிக்கம் பெரும் முட்டுக்கல்லாக வந்து அமைந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில குழப்பங்களும் அவரது கேரியரை காலி செய்து விட்டது.

வீழ்ந்து போயிருந்த ராஜ்கிரணுக்கு, சேரனின் தவமாய் தவமிருந்து நல்ல மறுவாழ்வைக் கொடுத்தது. அதேபோல, நந்தா, சண்டக்கோழி என ராஜ்கிரண் குணச்சித்திர வேடங்களில் நடித்த படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

இந்த நிலையில்தான் மீண்டும் இயக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ராஜ்கிரண். கடைசியாக அவர் இயக்கிய படம் எல்லமே என் ராசாதான். சில மாதங்களுக்கு முன்பு ஆதாம் ஏவாள் என்ற படத்தை அறிவித்தார் ராஜ்கிரண். வழக்கம் போல ராஜாதான் இசை. ஆனால் சில நாள் ஷூட்டிங் நடந்த பின்னர் படப்பிடிப்பு நின்றது.

தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப் போகிறது. முழு வீச்சில் படத்தை கொண்டு போகத் திட்டமிட்டுள்ளாராம் ராஜ்கிரண். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, வாழ்க்கை என்பது ஒரு வட்டம். அதில் உயர்வும் வரும், தாழ்வும் வரும்.

இந்த இயற்கை விதிக்கு யாரும் விதி விலக்கு கிடையாது. நான் உசரத்தில் இருந்தபோது அந்த நாட்களை நன்றாக அனுபவித்தேன். இடையில் தொய்வு இருந்தது. இப்போது மீண்டும் எனது சந்தோஷ நாட்கள் திரும்பியுள்ளதாக கருதுகிறேன்.

ஆதாம் ஏவாள் படத்தை, எனது அருமை நண்பர் இளையராஜாவின் இன்னிசையுடன் மீண்டும் தொடங்கப் போகிறேன். படத்தின் டைட்டிலில் மாற்றம் இருக்கலாம். ஜூன் 16ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றார் நம்பிக்கை தொணிக்கும் குரலுடன்.

வா ராசா, வந்து அசத்து ராசா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil