»   »  அஜீத்-ஷ்ரியா-ராஜு சுந்தரம்

அஜீத்-ஷ்ரியா-ராஜு சுந்தரம்

Subscribe to Oneindia Tamil

டான்ஸ் டைரக்டர் ராஜு சுந்தரம் இயக்குநராகிறார். அய்ங்கரண் இன்டர்நேஷனல் நிறுவனம், அஜீத், ஷ்ரியாவை வைத்து தயாரிக்கவுள்ள படத்தை ராஜு சுந்தரம் இயக்கவுள்ளார்.

நடன வடிவமைப்பில் புதிய உத்திகளைப் புகுத்தி இந்திய அளவில் பிரமிப்பூட்டும் நடனங்களைக் கொடுத்து அசத்தியவர் ராஜு சுந்தரம். இவரும், இவரது குழுவினரும் பங்கேற்ற பாடல்கள் அனைத்துமே நடனத்திற்காக பேசப்பட்டவை.

சில படங்களில் நடிகராகவும் தலை காட்டிய ராஜு சுந்தரம் தனது தம்பி பிரபு தேவாவைப் போலவே இயக்குநராக விரும்பினார். இதையடுத்து இயக்குநர் கேயார் தயாரிப்பில் தனுஷ், மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவான பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தை ராஜு சுந்தரம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் ராஜு சுந்தரம் அப்படத்திலிருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கினார். வெளியான அதே வேகத்தில் படம் பொட்டிக்குத் திரும்பி விட்டது.

இந்த நிலையில், மீண்டும் ராஜு சுந்தரம் இயக்குநராகப் போவதாக செய்திகள் வெளியாகின. அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கருணாமூர்த்தி தயாரிப்பில், உருவாகும் இப்படத்தில் அஜீத்தும், ஷ்ரியாவும் ஜோடி போட்டு நடிக்கவுள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த கருணாமூர்த்தி பல படங்களின் வெளிநாட்டு விநியோக உரிமைகளைப் பெற்றவர். சிவாஜி படத்தைக் கூட அவர்தான் பல நாடுளில் விநியோகித்துள்ளார். சமீபத்தில் ஈரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார் கருணாமூர்த்தி. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து அஜீத், ஷ்ரியாவை வைத்து ராஜு சுந்தரம் இயக்கத்தில் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளன.

அஜீத்தின் பில்லா படப்பிடிப்பு முடிந்த பிறகு ராஜு சுந்தரத்தின் படம் தொடங்குகிறதாம்.

தனது புதிய படம் குறித்து ராஜு சுந்தரம் கூறுகையில், அஜீத்துக்கும், எனக்கும் இது மிகச் சிறந்த படமாக அமையும் என்றார்.

அஜீத்துடன் ஷ்ரியா இணைவது இதுவே முதல் முறை. இதனால் சந்தோஷமாக உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி, இளைய தளபதி விஜய் ஆகியோரைத் தொடர்ந்து அஜீத்துடன் இணைவதால் அவர் கூடுதல் குஷியில் உள்ளார்.

அஜீத் டைப் படமாக இது இருக்குமாம். அதேசமயம் அனைத்து தரப்பையும் கவரும் வகையிலும் கதை அமைக்கப்பட்டுளளதாம்.

அடுத்த ஆண்டு மே மாதம் கோடை விடுமுறையின்போது படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil