»   »  செட்டிலாகும் சீமைப் பசு!

செட்டிலாகும் சீமைப் பசு!

Subscribe to Oneindia Tamil

சீமைப்பசு என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரவளி, ஒரு வழியாக கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிறார்.

தமிழ் சினிமா கண்ட கலக்கல் கிளாமர் நடிகைகளில் ரவளிக்கு தனி இடம் உண்டு. அமர்க்களமான கிளாமருடன், கோலிவுட்டில் ஒரு கட்டத்தில் அலை எழுப்ப ஆரவாரமாக கிளம்பியவர் ரவளி.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரால் பெரிய லெவலுக்குப் போக முடியவில்லை. மும்பையிலிருந்தும், மலையாளத்திலிருந்தும் பொங்கிப் பெருகி வந்த இளசுகளின் சுனாமியில் சிக்கி ஓரம் கட்டப்பட்டார் ரவளி.

படம் ஏதும் இல்லாததாலும், தமிழ் சினிமா உலகில் தனக்கு அடைக்கலமாக இருந்து வந்த காப்பாளர்கள், கட்டையைக் கொடுத்து விட்டு கப்சிப் ஆகி விட்டதாலும், வெறுத்துப் போய் சொந்த பூமியான ஆந்திராவுக்கே இடம் பெயர்ந்து விட்டார்.

ரசிகர்களால் சீமைப்பசு என அழைக்கப்பட்டவர். குறிப்பாக பார்த்திபனால் ரொம்பவே நேசிக்கப்பட்டவர். ரவளியுன் இணைந்து கலக்க வேண்டும் என்பதற்காகவே காங்கேயம் காளை என்ற படத்துக்குப் பூஜை போட்டார் பார்த்திபன் (பூஜை போடுவதில் பார்த்தி, பெரிய பார்ட்டி. பல படங்களுக்கு பூஜை போட்டதோடு சரி, அதற்குப் பிறகு வளரவே இல்லை).

7 நாள் ரவளியோடு இணைந்து நடித்ததோடு சரி அதற்குப் பிறகு படத்தைக் கைவிட்டு விட்டார் பார்த்திபன். இருந்தாலும் ரவளியின் ரகளையான அழகால் மெய் மறந்து போன அவர் அபிமன்யூ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து திருப்திப்பட்டுக் கொண்டார்.

ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்த பின்னர் தெலுங்கில் சில கிளாமர் படங்களில் நடித்து வந்தார் ரவளி. அதுவும் கூட ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்குப் புளித்துப் போய் விட்டது. இதனால் அங்கிருந்து கன்னடத்துக்கு இடம் மாறிப் பார்த்தார். ஆனால் ரவளியை ரசிக்கக் கூடிய ரசனை அங்கு இல்லாததால் மறுபடியும் பேக் டூ ஹைதராபாத்.

இதற்குமேலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது வீண் என்பதை உணர்ந்த ரவளி, பேசாமல் செட்டிலாகி விடலாம் என முடிவு செய்தார். ரவளியின் விருப்பத்தை அறிந்த அவரது பெற்றோர் சட்டுப்புட்டென்று மாப்பிள்ளையைப் பார்த்து முடித்து விட்டனர்.

மாப்பிள்ளை பெயர் நீலி கிருஷ்ணன். ஆந்திக்காரர்தான். எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியராம். வருகிற 9ம் தேதி ஹைதராபாத்தில் வைத்து கல்யாணத்தை நடத்துகின்றனர்.

கல்யாணச் செய்தியோடு சென்னைக்கு வந்த ரவளி தனது நண்பர்கள், திரையுலக பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து கண்டிப்பாக வர வேண்டும் என அன்போடு அழைத்தார். பத்திரிக்கையாளர்கள் அவசியம் வர வேண்டும் என்று அழைத்துள்ளாராம் ரவளி.

இதில் மற்ற நடிகைகளை விட ரவளி ரொம்பவே வித்தியாசமானவராக இருக்கிறார். சூர்யா, ஜோதிகா கல்யாணச் செய்தியை பத்திரிக்கையாளர்களைக் கூப்பிட்டு அறிவித்து, பத்திரிக்கையையும் கொடுத்த சிவக்குமார், கண்டிப்பாக யாரும் கல்யாணத்துக்கு வரக் கூடாது என்றும் கூறி அதிர வைத்தார்.

அதேபோலத்தான் சிம்ரனும். என் கல்யாணத்தில் பத்திரிக்கையாளர்ளுக்கு என்ன வேலை, எனவே அவர்களை அழைக்க மாட்டேன் என்று தடாலடியாக கூறினார்.

அதேபோல அருண்குமாரும், பத்திரிக்கையாளர்களைக் கூப்பிட்டு அழைப்பு விடுத்து, ஆனால் கல்யாணத்துக்கு மட்டும் வந்துடாதீங்கோ என்று கடுப்படித்தார்.

லைலாவும் கூட கல்யாண செய்தியைக் கூறாமல், ஆகிப் போச்சு என்று தனது பி.ஆர்.ஓ மூலமாக ஜஸ்ட் தெரிவித்தார். இவர்களுக்கு மத்தியில் கண்டிப்பாக வர வேண்டும் என உரிமையோடு அழைத்துள்ள ரவளியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

காளையோடு உரிமையோடு சேரப் போகும் சீமைப்பசுவுக்கு நமது வாழ்த்துக்கள்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil