»   »  ஆக்கிரமிக்கும் ரீமிக்ஸ் பாடல்கள்

ஆக்கிரமிக்கும் ரீமிக்ஸ் பாடல்கள்

Subscribe to Oneindia Tamil
Anjali with Sundar

தமிழ் திரைப்படங்களில் ரீமிக்ஸ் பாடல்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ படத்திற்கு ஒரு ரீமிக்ஸ் பாட்டு இருந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தமிழ்த் திரையுலகம் தள்ளப்பட்டுள்ளது.

கோலிவுட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கு முதலில் டைட்டில்களுக்கு தான் திண்டாட்டம் இருந்தது. இதனால் பழைய படங்களின் டைட்டில்களையே மறுபடியும் சூட்ட ஆரம்பித்தனர்.

திருவிளையாடல், பொல்லாதவன் என பழைய ஹிட் படங்களின் தலைப்புகளை சூட்ட ஆரம்பித்தனர். பின்னர் ரீமிக்ஸ் பாடல்கள் வந்தன. லேட்டஸ்டாக பழைய படங்களையே ரீமேக் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

முதலில் நான் அவனில்லை அதே பெயரில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சமீபத்தில் பில்லாவை ரீமேக் செய்தனர்.

படங்களை ரீமேக் செய்வதை விட ஹிட் பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில்தான் திரையுலகினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

துள்ளுவதோ இளமை, ஆசை நூறு வகை, தொட்டால் பூ மலரும் என அந்தக் காலத்து ஹிட் பாடல்களை ரீமேக் செய்து அவை வெற்றி பெற்றதால் தொடர்ந்து எல்லாப் படங்களிலும் ரீமிக்ஸ் பாடல்கள் இடம் பெற ஆரம்பித்தன.

அதிலும் மன்மதன் படத்தில் என் ஆசை மைதிலியே பாடலின் ரீமிக்ஸ் சூப்பர் ஹிட் ஆனதால் கிட்டத்தட்ட அத்தனை படங்களிலும் ரீமிக்ஸ் பாடல்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளது..

தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ள 8 திரைப்படங்களில் ரீமிக்ஸ் பாடல்கள் இடம் பெற்றுள்ளதாம். பழைய சிவாஜி நடித்த பராசக்தி பட பாடல் முதல், பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் பாடல் வரை ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.

சுந்தர்.சியின் பெருமாள் படத்தில் பராசக்தியில் இடம்பெற்ற ஓ ரசிக சீமானே வா என்ற பாடலும், சுந்தர்.சியின் சண்ட படத்தில் அலைகள் ஓய்வதில்லையில் வந்த வாடி என் கப்பக்கிழங்கே என்ற பாட்டும் ரீமிக்ஸ் ஆகியுள்ளதாம்.

சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் சிவாஜி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் இடம்பெற்ற நலந்தானா பாடலும், சிங்கக்குட்டி என்ற படத்தில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ஆட்டமா....தேரோட்டமா... என்ற பாடலும்,

உனது விழியில் என்ற படத்தில் வல்லவனுக்கு வல்லவனில் வரும் பளிங்கினால் ஒரு மாளிகை என்ற பாடலும், அர்ஜூன் நடிக்கும் துரை படத்தில் பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் படத்தின் ராஜா..ராஜாதிராஜன் இந்த ராஜா... என்ற பாடலும் இடம் பெற்றுள்ளது.

சத்யராஜ் நடித்துள்ள தங்கம் படத்தில் நினைத்ததை முடிப்பவனில் வரும் பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிம்புவின் கெட்டவன் படத்தில் அவர் தந்தை நடித்த மைதிலி என்னை காதலி படத்தில் வரும் ராக்கால வேளையிலே... என்ற பாடலை ரீமிக்ஸ் செய்கிறாராம்.

கற்பனை வளம் குன்றி விட்டதா அல்லது எதற்காக மூளையைக் கசக்கி கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil